Jul 06, 2023 08:08 PM

’ராயர் பரம்பரை’ திரைப்பட விமர்சனம்

f37f9d559e58f2c341b2063581d64c30.jpg

Casting : Krishna, Saranya,Anandraj, Mottai Rajendran, Manobala, RNR Manohan, Krithika, Anshula Jitesh Dhawan KR Vijaya, Kasturi, Sharmila, Bava Laxmanan, Seshu, Mippu, Tiger Thangadurai, Kalloori Vinoth

Directed By : Ramanath T

Music By : Ganesh Ragavendra

Produced By : Chinnasamy Cine Creations - Chinnasamy Mounaguru

 

ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜுக்கு காதல் என்றாலே பிடிக்காது. அதனால் மொட்டை ராஜேந்திரன் மூலம் தனது ஊரில் யார் காதலித்தாலும் அவர்களை பிரிக்கும் வேலையை மறைமுகமாக செய்து வருகிறார். அந்த ஊருக்கு வரும் நாயகன் கிருஷ்ணாவை நாயகிகள் கிருத்திகா சிங் மற்றும் அனுஷா தவான் காதலிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய காதலை கிருஷ்ணா ஏற்க மறுக்கிறார். இதற்கிடையே, தனது மகள் சரண்யாவை கிருஷ்ணா காதலிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய ராயர் முடிவு செய்கிறார். கிருஷ்ணா அதில் இருந்து தப்பித்தாரா, அவர் எதற்காக ராயரின் ஊருக்கு வந்தார், என்பதை நகைச்சுவையாக சொல்வது தான் ‘ராயர் பரம்பரை’ படத்தின் மீதிக்கதை.

 

ஜாலியான கதாபாத்திரத்தில் செம ஜாலியாக நடித்திருக்கிறார் கிருஷ்ணா. மூன்று கதாநாயகிகளுடன் பாட்டு, நடனம், காதல் என்று படம் முழுவதும் மகிழ்ச்சியாக வலம் வருபவர், தனது நடிப்பு மூலம் ரசிகர்களையும் மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார்.

 

கிருத்திகா சிங், அனுஷா தவான் மற்றும் சரண்யா என மூன்று பேர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். மூன்று பேரும் தங்களுக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், படம் முடிந்து வெளியே வந்தால் ஒருவரது முகம் கூட நம் நினைவில் நிற்கவில்லை.

 

மூன்று நாயகிகளில் ஒருவரது அப்பாவாக ராயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆனந்தராஜ், தனது அனுபவமான நடிப்பு மூலம் வில்லனாக மிரட்டுவதோடு, காமெடி நடிகராக சிரிக்கவும் வைக்கிறார். 

 

’காதலர்களை கண்டதும் பிரித்துவிடும் கட்சி’ என்ற பெயரில் கட்சி நடத்தும் மொட்டை ராஜேந்திரன், படம் முழுவதும் வந்தாலும், ஒரு சில காட்சிகளை தவிர்த்து பெரும்பாலான காட்சிகளில் நம்மை சிரிக்க வைப்பதற்கு பதிலாக எரிச்சலடைய செய்கிறார்.

 

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத் மற்றும் தங்கதுரை இருவரும் மொட்டை ராஜேந்திரன் செய்ய தவறியது சிறப்பாக செய்திருக்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரும் வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சின்னசாமி மெளனகுரு, படம் முழுவதும் காமெடியாக பேசி நடித்து கைதட்டல் பெறுகிறார். இறுதியில் தனக்கு குழந்தை இல்லாத குறையை சொல்லி வருத்தப்படும் காட்சியில் கலங்கடித்து விடுகிறார்.

 

மனோபாலா, ஆர்.என்.ஆர்.மனோகர், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, சேசு ஆகியோர் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருப்பதோடு, இயற்கை எழில் கொஞ்சும் லொக்கேஷன்களை தேடிப்பிடித்து காட்சிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

 

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், திரும்ப திரும்ப கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.

 

காதல் கதையை முழுநீள நகைச்சுவைத் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் ராமநாத்.டி, சில இடங்களில் தடுமாறியிருந்தாலும் தான் சொல்ல வந்ததை மிக நேர்மையாகவும், எந்தவித நெருடல் இல்லாமல் அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய விதத்தில் கொடுத்திருக்கிறார்.

 

முதல் பாதி முழுவதும் காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றினாலும், இரண்டாம் பாதியில் சரியான பாதையில் பயணித்து, தனது வசனம் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைக்கும் இயக்குநர் ராமநாத்.டி, காதலர்கள் தரப்பு நியாயத்துடன், பெற்றோர் தரப்பு நியாயத்தையும் சொல்லியிருப்பது கவனம் ஈர்க்கிறது.

 

முதல் பாதியில் சில குறைகள் இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதை சரிக்கட்டும் விதத்தில் காமெடி காட்சிகளை கையாண்டிருக்கும் இயக்குநர், கிருஷ்ணாவின் தந்தை சீமான் செங்கல்வராயன் யார்? என்பதை சொல்லும் காட்சியில் ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பால் அதிர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட காட்சியை படம் முழுவதும் வைத்திருந்தால் இந்த ‘ராயர் பரம்பரை’ மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும்.

 

மொத்தத்தில், ‘ராயர் பரம்பரை’-யில் நகைச்சுவை மசாலா சற்று குறைவாக இருந்தாலும் குடும்பத்தோடு பார்க்க கூடிய நாகரீகமான பொழுதுபோக்கு படமாக உள்ளது.

 

ரேட்டிங் 3/5