’ரெட் சாண்டல் வுட்’ திரைப்பட விமர்சனம்
Casting : Vetri, Diya Mayurika, KGF Ram, MS Baskar, Marimuthu, Ganesh Venkatram, Kabali Vishwanth, Vinoth Charles, Kalluri Vinoth
Directed By : Guru Ramanujam
Music By : Sam CS
Produced By : J.Parthasarathy
சென்னை வியாசார்பாடியை சேர்ந்த நாயகன் வெற்றி, தனது நண்பனை தேடி திருப்பதிக்கு செல்கிறார். அப்போது அவரை செம்மரம் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர் என்று நினைத்து போலீஸ் கைது செய்து, ஒரு இடத்தில் அடைத்து வைக்கிறது. அந்த இடத்தில் எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் இருக்க, அவர்கள் வறுமை காரணமாக தோட்ட வேலைக்காக திருப்பதிக்கு வந்து செம்மரக்கடத்தலில் சிக்கிக்கொண்டதை வெற்றி அறிந்துக் கொள்கிறார். இதற்கிடையே, வெற்றி உள்ளிட்ட தமிழர்களை கொலை செய்ய ஆந்திர போலீஸ் உயர் அதிகாரி திட்டம் போட, அவரிடம் இருந்து வெற்றி தப்பித்து தனது நண்பனை கண்டுபிடித்தாரா?, இல்லையா? என்பதை செம்மரக்கடத்தல் பின்னணியோடு சொல்லியிருக்கிறார்கள்.
செம்மரம் வெட்டியதாக ஆந்திர போலீசாரால் தமிழர்கள் கொல்லப்படுவதை நாம் பத்திரிகை செய்தியாக படித்திருப்போம். ஆனால், அதன் உண்மை பின்னணி என்ன?, தமிழர்கள் உண்மையிலேயே செம்மரம் வெட்டுவதற்காக தான் அங்கு செல்கிறார்களா?, அப்படி செல்பவர்களின் நிலை என்ன? என்பதை மிக விரிவாக சொல்லும் இப்படம் செம்மரம் பற்றிய வரலாற்று உண்மைகளையும் சொல்கிறது.
நாயகனாக நடித்திருக்கும் வெற்றி, தனது ஒவ்வொரு படங்களிலும் தனது நடிப்பை மெருகேற்றி வருகிறார். அதன்படி, இந்த படத்தில் ஆக்ஷன், நடிப்பு என இரண்டிலுமே நல்ல முன்னேற்றம் அடைந்திருக்கிறார்.
விவசாயிகளின் அவல நிலையை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் அழுத்தமாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர், தனது அனுபவமான நடிப்பினால் அசத்துவதோடு, கண்கலங்க வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம், நாயகியாக நடித்திருக்கும் தியா மயூரிக்கா, மாரிமுத்து, கணேஷ் வெங்கட்ராமன், இளவரசு, கபாலி விஷ்வந்த், ரவி வெங்கட்ராமன், மெட்ராஸ் வினோத், வினோத் சாகர், சார்லஸ் வினோத் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.
திருப்பதி வனப்பகுதியின் அழகையும், ஆபத்தையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா, இரவு நேர காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார். சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.
செம்மரம் என்றால் என்ன?, அதற்கு ஏன் இவ்வளவு பெரிய வியாபாரம்?, என்ற விபரங்களை ஆரம்பத்திலேயே சொல்லிவிடும் இயக்குநர்,ஆரம்பம் முதலே கதைக்குள் நம்மை பயணிக்க வைத்துவிடுகிறார்.
செம்மரக்கடத்தல், அதன் பின்னணியில் நடக்கும் அரசியல் போன்றவற்றால் முதல்பாதி படம் சஸ்பென்ஸாகவும், விறுவிறுப்பாகவும் நகர்கிறது. இரண்டாம் பாதியில் நாயகன் வில்லனை பழிவாங்க கிளம்புவது, அவனை அழிக்க திட்டம் போடுவது போன்றவை கமர்ஷியலாக இருந்தாலும் கதையின் போக்கை மாற்றாமல் பயணித்திருக்கிறது.
செம்மரக்கடத்தல் பின்னணியில் இருக்கும் வியாபாரம் மற்றும் அரசியலால் அப்பாவி தமிழர்கள் எப்படி பலியாக்கப்படுகிறார்கள் என்பதை மிக தைரியமாக சொல்லியிருப்பதோடு, அதை சுவாரஸ்யமான படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் குரு ராமானுஜம்.
மொத்தத்தில், இந்த ‘ரெட் சாண்டல் வுட்’ உண்மையின் குரல்.
ரேட்டிங் 3.5/5