Apr 14, 2023 11:43 AM

’ரிப்பப்பரி’ திரைப்பட விமர்சனம்

47b9e16fb295034005ed5a717b19afe1.jpg

Casting : Master Mahendran, Noble K James, Maari, Srrini, Arati Podi, Kaavya Arivumani

Directed By : Na.Arun Karthik

Music By : Diwacara Thiyagarajan

Produced By : Na.Arun Karthik

 

கோவை மாவட்டத்தை சேர்ந்த மாஸ்டர் மகேந்திரன் முகம் தெரியாத பெண் ஒருவரை காதலிக்கிறார். தனது காதலியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும் மாஸ்டர் மகேந்திரன், காதலிக்கும் ஆண்கள் பலர் தொடர்ந்து கொலை செய்யப்படும் ஊரில் தான் தனது காதலி இருப்பதை தெரிந்துக்கொள்கிறார். காதலுக்காக எதையும் சந்திக்க முடிவு செய்யும் மகேந்திரன், அந்த ஊருக்கு செல்ல, அவரது நிலை என்ன ஆனது?, அந்த கொலைகளை செய்வது யார்?, எதற்காக?, என்பதை காமெடியாக சொல்வதே ‘ரிப்பப்பரி -யின் கதை.

 

கதாநாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற இளமையோடும், துடிப்பான நடிப்போடும் கவர்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து சேட்டை செய்வது, கொடூரமான கொலைகளுக்கு பின்னணியில் நடக்கும் சம்பவங்களில் சிக்கிக்கொள்வது, இறுதியில் சம்மந்தமே இல்லாத விசயத்தில் தலையிட்டு ஆபத்தில் சிக்கிக்கொள்வது என படம் முழுவதும் காமெடி கலந்த நடிப்பில் அசத்தியிருக்கிறார்.

 

கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஆரதி பொடி மற்றும் காவ்யா அறிவுமணி இருவரும் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் அளவாக நடித்திருக்கிறார்கள்.

 

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீனி, வித்தியாசமான வேடத்தில் மிரட்டுகிறார். பிளாஷ்பேக் காட்சியில் அவரது காதல் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

 

நாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் நோபல் ஜேம்ஸ் மற்றும் மாரி ஆகியோரது காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. படம் முழுவதும் வரும் இவர்கள் இருவரும் பல காட்சிகளில் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம், இயற்கையான இடங்களில் காட்சிகளை படமாக்கி கண்களுக்கு குளிர்ச்சி விருந்து படைக்கிறார். படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்கள் அனைத்தும் மனதுக்கு இதமாகவும், படத்திற்கு பலமாகவும் அமைந்திருக்கிறது.  

 

இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணிக்கிறது.

 

கதை எழுதி இயக்கியிருக்கும் நா.அருண் கார்த்திக், வழக்கமான காமெடி கலந்த திகில் கதையை அதே வழக்கமான பாணியில் கமர்ஷியலாக இயக்கியிருக்கிறார்.

 

நாயகனுக்கு அறிமுகப் பாடல் மற்றும் நாயகன் மற்றும் அவர்களது நண்பர்கள் சேர்ந்து செய்யும் அலப்பறைகள் மற்றும் அதை சுற்றி நடக்கும் காமெடிகள் என்று நாம் ஏற்கனவே பார்த்த விஷயங்கள் தான் படம் முழுவதும் நிரம்பியிருந்தாலும், படத்தில் காட்டப்படும் பேயும், அதை வடிவமைத்த விதமும் புதிதாக இருப்பதோடு, ரசிக்கவும் வைக்கிறது.

 

வழக்கமான கமர்ஷியல், காமெடி கலந்த திகில் படம் என்றாலும் அதில் சாதி பிரிவிணை என்ற கருவை கையில் எடுத்திருக்கும் இயக்குநர் நா.அருண் கார்த்திக், அதை நியாமனான முறையில் கையாண்டிருக்கிறார். குறிப்பாக, உண்மையில் நாடக காதல் என்றால் என்ன? என்பதை சொல்லிய விதம் பாராட்டுக்குரியது.

 

மொத்தத்தில், ‘ரிப்பப்பரி’ என்ற தலைப்பு புரியாமல் இருந்தாலும், படம் ரசிக்கும்படி இருக்கிறது.

 

ரேட்டிங் 3.5/5