Jul 01, 2022 05:18 AM

’ராக்கெட்ரி’ விமர்சனம்

3bcd55e03deaf41502015433b044e454.jpg

Casting : Madhavan, Simran, Rajit Kapur, Ravi Raghavendra, Muralidaran, Misha Ghoshal, Shyam Renganathan, Karthik Kumar

Directed By : R. Madhavan

Music By : Sam C. S.

Produced By : R. Madhavan

 

ISRO-வின் ராக்கெட் விஞ்ஞானியான நம்பி நாராயணன் எப்படிப்பட்ட திறமையானவர் மற்றும் ஆபத்தான சில அதிரடி நடவடிக்கைகள் மூலம் அவர் செய்த சாதனைகள் ஆகியவற்றை விவரிப்பது முதல் அவர் மீது தேச துரோகி என்ற முத்திரை குத்தப்பட்டது, அதனால் அவரும் அவரது குடும்பமும் எப்படி பாதிக்கப்பட்டார்கள், என்பதை விவரிப்பதோடு, அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா? இல்லையா? என்பதை சொல்வது தான் படத்தின் கதை.

 

நம்பி நாராயணன் என்ற விஞ்ஞானி தலை தூக்க கூடாது என்பதற்காக செய்யப்பட்ட மிகப்பெரிய சதிக்கு பின்னணியில் இந்தியா வல்லரசு நாடாகிவிட கூடாது, என்ற சதி மறைந்திருப்பதை மிக அழுத்தமாகவும் அதே சமயம் சர்ச்சை இல்லாமலும் பேசியிருக்கும் படம், அந்த சதி திட்டத்திற்கு பின்னணியில் இருப்பவர்கள் பற்றி மேலோட்டமாக பேசுவதோடு, அவர்கள் யார்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

 

விஞ்ஞானி நம்பி நாராயணின் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மாதவன்,  உடல் தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு என ஒரு முழுமையான விஞ்ஞானியாகவே வலம் வருகிறார். எந்த ஒரு காட்சியிலும் நடிகர் மாதவனாக தெரியாமல் நம்பி நாராயணனாகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவருடைய நடிப்பு அமைந்திருக்கிறது.  இளமைகால நம்பி நாராயணன், வயதான நம்பி நாராயணன் என இரண்டு கெட்டப்புகளிலும் நடிப்பால் ரசிகர்களை வியக்க வைக்கும் மாதவன், படத்தின் மீதான ரசிகர்களின் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்வதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.

 

நம்பி நாராயணனின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன் வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும், ஒரு சில காட்சிகளிலேயே விஞ்ஞானி நம்பி நாயாராணனின் குடும்பத்தார் எப்படிப்பட்ட துன்பங்களுக்கு ஆளாகியிருப்பார்கள், என்பதை படம் பார்ப்பவர்கள் உணர்ந்துக்கொள்ளும் வகையில் நடித்திருக்கிறார்.

 

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சூர்யா படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

நம்பி நாராயணனுடன் பணியாற்றிய விஞ்ஞானிகள் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் கவனம் பெறுகிறார்கள்.

 

Rocketry

 

அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா போன்ற நாடுகளில் பயணிக்கும் கதையோடு நம்மையும் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சிர்ஷா ரே. கதைக்களத்திற்கு தேவையான அதே சமயம் தனித்துவமான பிளேவரில் காட்சிகளை கொடுத்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.

 

சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தி செல்வதோடு, கதைக்கு தேவையானதை மிக சரியான அளவில் கொடுத்திருக்கிறார்.

 

சுமார், 2 மணி நேரம் 40 நிமிடங்கள் படம் ஓடினாலும் எந்த ஒரு இடத்திலும் நமக்கு சலிப்பு ஏற்படாத வகையில் படம் விறுவிறுப்பாக நகரும் விதத்தில் காட்சிகளை தொகுத்திருக்கும் எடிட்டர் பிஜில் பாலாவுக்கு பாராட்டுகள்.

 

உண்மை சம்பவத்தை அல்லது ஒரு மனிதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் ரசிகர்களுடன் கனெக்ட் ஆவது என்பது மிகப்பெரிய சவால். ஒருவேளை படம் பார்ப்பவர்களிடம் அது கனெக்ட் ஆனால் டாக்குமெண்டரி என்ற உணர்வை கொடுக்கும் ஆபத்தும் இருக்கிறது. ஆனால் இந்த சவாலை இயக்குநராக மாதவன் மிகச்சரியாக சமாளித்திருக்கிறார்.

 

குறிப்பாக படம் ரசிகர்களுடன் கனெக்ட் ஆவதற்குவசனங்கள் பெரிய பங்கு வகிக்கிறது. “ஒரு நாயை கொல்ல வேண்டும் என்றால் அதற்கு வெறிப்பிடித்து விட்டது என்று சொன்னால் போதும். அதேபோல் ஒரு மனிதனை தலை தூக்க விடாமல் செய்ய வேண்டுமானால் அவனுக்கு தேச துரோகி என்ற பட்டம் கொடுத்தால் போதும்” என்ற ஒரு வசனத்தின் மூலமாகவே நம் நாடு எத்தகைய நிலையில் உள்ளது என்பதை மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார்கள். 

 

அதேபோல்,  ”திறமையானவர்களை மதிக்காத எந்த ஒரு நாடும் வல்லரசு ஆக முடியாது” போன்ற பல வசனங்களை ரசிகர்கள் கைதட்டி கொண்டாடுகிறார்கள்.

 

நடிகர்கள் தேர்வு மற்றும் அவர்களின் நடிப்பு, சுவாரஸ்யமான திரைக்கதை, விறுவிறுப்பான காட்சி அமைப்பு என அத்தனை விஷயங்களையும் இயக்குநராக மாதவன் திருப்திகரமாக கொடுத்திருக்கிறார்.

 

இப்படி அனைத்து அம்சங்களும் பாராட்டும்படி இருந்தாலும், படத்தில் சில குறைகள் இருப்பதையும் மறுக்க முடியாது. குறிப்பாக படத்தில் ராக்கெட் தொழில்நுட்பம் பற்றி பேசுவது ரசிகர்ளுக்கு புரியாதபடி இருக்கிறது. ஒரு சில ரசிகர்களுக்கு புரிந்தாலும், அனைத்து தரப்பினருக்கும் புரியுமா? என்பது சந்தேகம் தான்.

 

இந்த சிறு குறையை தவர்த்துவிட்டு பார்த்தால், ‘ராக்கெட்ரி’ என்ற திரைப்படம், தனது தனிப்பட்ட முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நாட்டுக்காக உழைத்து, வலிகள் மிகுந்த வாழ்க்கையோடு பயணித்துக் கொண்டிருக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணின் தியாகத்தை மக்கள் கொண்டாடும் வகையில் இருப்பதோடு, இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான திரைப்படமாகவும் இடம் பிடிக்கும் வகையில் உள்ளது.

 

மொத்தத்தில், சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு படமாக மட்டும் இன்றி இந்திய மக்கள் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் இந்த ‘ராக்கெட்ரி’

 

ரேட்டிங் 4/5