’ரோமியோ’ திரைப்பட விமர்சனம்
Casting : Vijay Antony, Mrnalini Ravi, Yogi Babu, Ilavarasu, Sudha, VTV Ganesh, Thalaivasal Vijay, Srija Ravi, SaRa
Directed By : Vinayak Vaidhyanathan
Music By : Bharath Dhanasekar
Produced By : Vijay Antony Film Corporation - Meera Vijay Antony
நாயகி மிர்ணாளி ரவியை பார்த்ததும் விஜய் ஆண்டனி மனதில் காதல் மலர்கிறது. அவருக்கு மிர்ணாளினியை திருமணம் செய்து வைக்கிறார்கள். ஆனால், விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துகொள்ளும் மிர்ணாளி ரவிக்கு சினிமாவில் நாயகியாக வேண்டும் என்பது தான் லட்சியம். தனது லட்சியத்தை நோக்கி மிர்ணாளினி பயணிக்க, அவரை ஒருதலையாக உருகி உருகி விஜய் ஆண்டனி காதலிக்கிறார். இறுதியில், விஜய் ஆண்டனியின் காதல் ஜெயித்ததா?, மிர்ணாளினியின் லட்சியம் என்ன ஆனது? என்பதை காதல் சொட்ட சொட்ட சொல்வது தான் ‘ரோமியோ’.
ஆக்ஷன் மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் ஆண்டனி, காதல் நாயகனாக நடித்திருக்கிறார். தன்னை வெறுத்தாலும் தனது மனைவியை ஒருதலையாக காதலிக்கும் அவரது நடிப்பு, அறிவு என்ற கதாபாத்திரத்தின் ஆழ்மனதில் இருக்கும் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது. தனது வழக்கமான உடல் மொழிகளை சில இடங்களில் வெளிப்படுத்தியிருந்தாலும், இது பழைய விஜய் ஆண்டனி இல்லை, என்பதை தனது நடிப்பு மூலம் நிரூபித்திருக்கிறார். நடனம் மற்றும் காமெடியிலும் அசத்தியிருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மிர்ணாளினி ரவி, வழக்கமான கதாநாயகியாக அல்லாமல் கதையோடு பயணிக்கும் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
நாயகனுக்கு காதல் ஐடியா கொடுக்கும் யோகி பாபு வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. சில இடங்களில் விஜய் ஆண்டனியை கலாய்த்தும் சிரிக்க வைக்கிறார். நாயகியின் நண்பர்களாக நடித்திருக்கும் ஷாரா மற்றும் குழுவினர் வரும் காட்சிகள் கூடுதல் கலகலப்பு.
விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய், ஸ்ரீஜா ரவி, சுதா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பரூக் ஜே.பாட்ஷா காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத் தனசேகர் இசையில் பாடல்கள் அனைத்தும் ஒவ்வொரு ரகமாக இருப்பதோடு, முணுமுணுக்கவும், தாளம் போடவும் வைக்கிறது. பின்னணி இசை அளவு.
காதல் கதையாக இருந்தாலும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் எழுதி இயக்கியிருக்கும் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன், திருமணத்திற்குப் பிறகு பெண்களின் கனவு எப்படி சிதைந்து போகிறது என்பதை பற்றி பேசியிப்பதோடு, பெண்களுக்கும், அவர்களது கனவுகளுக்கும் ஊக்கமும், உற்சாகமும் கொடுக்க வேண்டும் என்ற மெசஜை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லி ரசிக்க வைத்திருக்கிறார்.
படம் பார்க்கும் பெண்கள் அறிவு போன்ற ஒரு கணவர் அமைய வேண்டும், என்று நினைக்குபடி நாயகன் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கும் இயக்குநர் விநாயக் வைத்தியநாதன், அவருடைய ஒருதலை காதலை காதலர்கள் மட்டும் இன்றி குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘ரோமியோ’ ரசிகர்களின் இதயங்களை வெல்வார்.
ரேட்டிங் 3.5/5