’ரூ 2000’ விமர்சனம்
Casting : Bharathi Krishnakumar, Ruthran Parasu, Ayyanathan, Sharnika, Karate Venatesh
Directed By : Ruthran
Music By : Iniyavan
Produced By : K.Pachiyappan
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு, சில மாதங்களில் புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்தது. அப்போது, ரூபாய் நோட்டுகள் மீது பேனா மற்றும் பென்சிலால் எழுதப்பட்டிருந்தால் அந்த நோட்டுகள் செல்லாது, என்றும் அறிவித்தனர்.
மத்திய அரசின் ரூபாய் மாற்றத்தினால் பெரும் அவதிக்குள்ளான மக்கள், புதிய ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தால் செல்லாது என்ற அறிவிப்பால், தற்போதும் எப்படிப்பட்ட துயரங்களுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பதை விரிவாக பேசும் படம் தான் ‘ரூ 2000’.
பேனாவால் எழுதப்பட்ட 2000 ரூபாய் நோட்டால் பாதிக்கப்பட்ட ஏழை விவசாயிக்காக, வங்கி நிர்வாகம் மட்டும் இன்றி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரையும் நீதிமன்ற கூட்டில் ஏற்றி விசாரிக்கும் வழக்கறிஞரின் வாதங்களும், அவருடைய ஒவ்வொரு கேள்வியும் ஆட்சியாளர்களை அலற செய்யும் விதத்தில் இருக்கிறது.
வழக்கறிஞராக நடித்திருக்கும் பாரதி கிருஷ்ணகுமாரின் தெளிவான வசன உச்சரிப்பு மற்றும் சாட்சிகளை விசாரிக்கும் தோரணை என கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தோழர் பாலன் என்ற கதாப்பாத்திரத்திற்கு மிக பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
ஏழை விவசாயியாக நடித்திருக்கும் அய்யநாதன், தனது அப்பாவித்தனமான நடிப்பால், சாமானியர்களின் வலிகளை வெளிக்காட்டியிருக்கிறார்.
பாரதி கிருஷ்ணகுமாரின் உதவியாளராகவும், ஆணவக் கொலையால் தனது காதல் மனைவியை இழந்து தவிக்கும் வேடத்தில் நடித்திருக்கும் ருத்ரன் பராசு கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
ஆணவக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷர்னிகா, அரசு வழக்கறிஞராக நடித்திருக்கும் கராத்தே வெங்கடேஷ், நீதிபதிகளாக வரும் ஓவியா, தியாகு ஆகியோர் இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
படம் முழுவதையும் வசனங்களே ஆட்கொண்டிருப்பதால், ஒளிப்பதிவாளர் பிரிமூஸ் தாஸுக்கு குறைவான வேலை தான்.
இசையமைப்பாளர் இனியவனின் பாடல்கள் காட்சிகளின் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பின்னணி இசை என்ற பெயரில் பல சத்தங்களை நிரப்பி நம்மை சோதிக்கவும் செய்திருக்கிறார்.
படம் முழுவதும் கதாப்பாத்திரங்கள் பேசிக்கொண்டே இருந்தாலும், அவர்கள் பேசுவதை ரசிகர்கள் கவனமாக கவனிக்கும்படி கருத்துக்களை கச்சிதமாக தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் லட்சுமணனின் பணி படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
இந்தியாவில் எத்தனை ஏ.டி.எம் மையங்கள் இருக்கின்றன, அவற்றைக் கையாளவது யார், அவற்றில் பணம் நிரப்பப்படுவது எப்படி, மத்திய அரசு அறிவித்த பிறகும் ஏ.டி.எம் மையங்களில் பேனாவால் எழுதப்பட்ட மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுகள் வருவது எப்படி, ரூபாய்தாள் என்றால் என்ன, ஆகியவை குறித்து விளக்கமாகவும், மிக தெளிவாகவும் விவரித்திருக்கும் இயக்குநர் ருத்ரன், தான் கேட்கும் ஒவ்வொரு கேள்விகள் மூலமாகவும் ஆட்சியாளர்களை சம்மட்டியால் அடித்திருக்கிறார்.
படம் முழுவதும் நீதிமன்றத்தில் நடப்பது போலவும், வசனங்களால் நிரம்பியிருப்பதும் சற்று குறையாக தெரிந்தாலும், படத்தில் பேசப்படும் ஒவ்வொரு வசனங்களும் மக்களின் குமுறல்களாகவும், அவர்கள் ஆட்சியாளர்களை கேட்கும் கேள்விகளாகவும் இருப்பதால், படம் சுவாரஸ்யமாகவே நகர்கிறது.
மொத்தத்தில், ’ரூ 2000’ படம் மட்டும் அல்ல, நம் அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டிய பாடமும் கூட.
ரேட்டிங் 3.5/5