Aug 23, 2024 01:27 AM

’சாலா’ திரைப்பட விமர்சனம்

e3f5f5a0e7dee882bf61511650b492aa.jpg

Casting : Dheeran, Reshma Venkatesh, Charles Vinoth, Srinath, Aruldoss, Sampath Ram

Directed By : SD Manipaul

Music By : Theeson

Produced By : People Media Factory - TG Vishwa Prasad

 

மதுக்கூடம் நடத்தும் நாயகன் தீரனுக்கும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மா வெங்கடேஷுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, அதுவே ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. இதற்கிடையே கெளரவமாக கருதப்படும் மதுக்கூடம் ஒன்றை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, அந்த மோதலின் விளைவுகளையும், மதுப்பழக்கத்தினால் ஏற்படும் ஆபத்துகளையும் பாடம் எடுப்பது போல் மட்டும் இன்றி கமர்ஷியல் பட ரசிகர்கள் கொண்டாடும்படியும் சொல்வது தான் ‘சாலா’.

 

சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருக்கும் தீரன் இந்த படத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும், குழந்தைத்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருப்பவர், நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளில் அசத்துகிறார்.  ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட தீரன், நடிப்பில் மட்டும் கொஞ்சம் பயிற்சி எடுத்துக்கொண்டால் கோலிவுட்டில் தொடர்ந்து நாயகனாக பட்டய கிளப்பலாம்.

 

நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான வேடம், அதை புரிந்து நடித்திருக்கிறார். காதல் காட்சிகள் இல்லை என்றாலும் நாயகனின் மனதில் இடம் பிடித்தது போல் தனது போராட்ட குணத்தால் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிடுகிறார்.

 

வில்லனாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத் வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். நாயகனின் நண்பராக வரும் ஸ்ரீநாத் பேசும் வசனங்கள் சிரிக்க வைக்கிறது. அருள்தாஸ், சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் மூன்று பேர் உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

தீசன் இசையில் பாடல்கள் கமர்ஷியலாக இருப்பதோடு, பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் பணி அளவு. படத்தொகுப்பாளர் புவன், மசாலா படம் என்றாலும் இயக்குநர் சொல்ல நினைத்த விசயங்களை மக்களின் மனங்களில் கொண்டு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.

 

முழுக்க முழுக்க நாயகனை சுற்றி நகரும் கமர்ஷியல் படம் என்றாலும் அதில் மக்களுக்கான நல்ல விசயத்தை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.டி.மணிபால். தற்போதைய காலக்கட்டத்தில் மதுவினால் மக்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை நகைச்சுவையாக மட்டும் இன்றி யோசிக்கும்படியும் சொல்லியிருக்கிறார்.

 

மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படி அடிமையாகி கிடக்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால், மூன்று பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் நிலை, அவர்கள் மூலம் உருவாக்கப்படும் வீடியோ ஆதாரம், போன்றவற்றால் அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார். 

 

வழக்கமான கமர்ஷியல் படமாக பயணித்தாலும், இறுதியில் விபத்து காட்சி ஒன்றை படமாக்கி ஒட்டு மொத்த திரையரங்கையே அதிர வைக்கும் இயக்குநர் மிக தத்ரூபமாக படமாக்கப்பட்டிருக்கும் அந்த விபத்து காட்சி மூலம் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை ஒரு கணம் யோசிக்க வைத்துவிடுகிறார்.

 

மதுவுக்கு எதிரான பிரசார படம் என்றாலும் நகைச்சுவை, ஆக்‌ஷன், காதல், எதிர்பார்க்காத திருப்பங்கள் உள்ளிட்ட அத்தனை கமர்ஷியல் விசயங்களையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் எஸ்.டி.மணிபால், அறிமுக நாயகனை வைத்துக்கொண்டு சமூகத்திற்கான ஒரு படத்தை மிக சாதாரணமாக இயக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.

 

மொத்தத்தில் இந்த ‘சாலா’ வழக்கமான ஹீரோயிசத்தை காட்டினாலும், சமூகத்திற்கு முக்கியமானவன் என்பதை நிரூபித்திருக்கிறார்.

 

ரேட்டிங் 3/5