‘சான்றிதழ்’ திரைப்பட விமர்சனம்
Casting : Harikumar, Roshan Bhashir, Ratha ravi, Abu Khan, Ravimariya, Manobala, Aruldass, Kowsalya, Ashika Ashokan, Tanisha Kuppanda, Adithya Kathir, Kajal Pasupathi, Uma Shree
Directed By : Jayachandran
Music By : Baiju jacob
Produced By : Vettrivel Cinemas - SJS. Sundharam & JVR
திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கருவறை என்ற கிராம மக்கள் தங்களுக்கு என்று தனி சட்டங்களை வகுத்துக் கொண்டு ஒழுக்கமாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து வருகிறார்கள். கருவறை கிராமத்தின் இத்தகைய சிறப்பை அறிந்து மத்திய அரசு சிறந்த கிராமத்திற்கான விருதை அறிவிக்க, அதை அந்த கிராம மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இதனால், கோபமடையும் அமைச்சர் கருவறை கிராமத்தின் மீது களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்.
அமைச்சரின் முயற்சிகளும், கிராம மக்கள் விருதை ஏற்க மறுப்பதற்கான காரணமும், ஒரு பக்கம் இருக்க, தறுதலை கிராமமாக இருந்த அந்த ஊரை கருவறை கிராமமாக மாற்றியதற்கு பின்னாள் வெள்ளைச் சாமி என்பவரது மிகப்பெரிய தியாகத்தையும், அவர் தனது கனவு கிராமத்தை உருவாக்க இழந்ததையும், சொல்வது தான் ‘சான்றிதழ்’ படத்தின் கதை.
கருவறை கிராமத்தின் கட்டுப்பாடுகளும், சட்டத்திட்டங்களும் வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும், இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே, என்று மக்களை ஏங்க வைக்கும் விதத்தில் தனது கற்பனை கிராமத்தையே கதையாக்கி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஜெயச்சந்திரன்.
தான் அணிந்திருகும் வேட்டி, சட்டை மட்டும் இன்றி உள்ளத்திலும் வெண்மையோடு வலம் வரும் வெள்ளச்சாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஹரி, தனது கிராம மக்களின் அவல நிலையை கண்டு கலங்கும் காட்சிகளில் ஹன்னா அசாரே போன்றவர்களை நினைவுப்படுத்துகிறார்.
கருவறை கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ரோஷன் பஷீர் - நிருபராக வரும் ஆஷிகா அசோகன் ஆகியோரது காதல் காட்சிகள் குறைவு தான் என்றாலும், இருவரும் வறட்சியான ஏரியாவை குளிர்ச்சியாக்க பயன்பட்டிருக்கிறார்கள்.
அமைச்சர் வேடத்தில் நடித்திருக்கும் ராதாரவி, அருள்தாஸ், நடிகை கெளசல்யா ஆகியோர் தங்களது அனுபவமான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
வில்லத்தனமாகவும், நல்லத்தனமாகவும் நடித்து கவனம் ஈர்க்கிறார் ரவி மரியா. மனோபாலா மற்றும் ஆதித்யா கதிர் வரும் காட்சிகளில் சிரிக்க முடிகிறது.
தனிஷா குப்பண்டா, ஆதித்யா கதிர், காஜல் பசுபதி, உமா ஸ்ரீ என படத்தில் நடித்திருக்கும் மற்ற நட்சத்திரங்கள் கொடுத்த வேலையை கொஞ்சம் ஓவராகவே செய்திருக்கிறார்கள்.
தருதலை -யாக இருந்து கருவறை -யாக மாறும் கிராமத்தின் மாற்றத்தை கதாபாத்திரங்களின் வழியாக மட்டும் இன்றி, அந்த கிராமத்தை சுற்றியிருக்கும் ஒவ்வொரு அடையாளங்கள் மூலமாகவும் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.எஸ்.ரவிமாறன் சிவன், பருந்து கோணத்தில் முழு கிராமத்தையும், பாடல் காட்சிகளையும் அழகியலோடு படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பிஜு ஜேக்கப்பின் இசையில் பாடல்கள் கேட்கும்படியும், பின்னணி இசை கதைக்கு ஏற்றபடியும் பயணித்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஜெ.எப்.காஸ்ட்ரோ மற்றும் கலை இயக்குநர் நாஞ்சில் பி.எஸ்.ராபர்ட் இருவரது பணியும் படத்திற்கு பல இடங்களில் கைகொடுத்திருக்கிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு கிராமத்தை கதையாக்கி, அதற்கு கமர்ஷியலாக திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் ஜெயச்சந்திரனின் பாதை பழைய பாணியில் இருந்தாலும், அவருடைய கனவு மதிக்க கூடியதாக இருக்கிறது.
இயக்குநர் உருவாக்கிய கருவறை கிராமத்தின் சட்டங்கள் அரபு நாடுகளை மிஞ்சும் அளவுக்கு இருக்கிறது. குறிப்பாக, மாலை 6 மணிக்கு மேல் யாரும் தொலைக்காட்சி தொடர்களை பார்க கூடாது, என்ற கட்டுப்பாடு ஒட்டு மொத்த பெண் வர்க்கத்தையே கலங்கடித்தாலும், ஆண்களையும் விட்டுவிடாமல், மதுபானக்கடையில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு கட்டிங் (குவாட்டரில் பாதி) மட்டுமே அனுமதி என்ற கட்டுப்பாடு அலப்பறையின் உச்சம். இப்படி பல ரகத்தில் இருக்கும் கட்டுப்பாடுகள் காமெடியாக இருந்தாலும், இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே நாடு உறுப்படும் என்பதை இயக்குநர் ஜெயச்சந்திரன், அரசுக்கே மறைமுகமாக அறிவுரை சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் தனி மனித ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியம் என்றும், அப்படி இருந்தால் ஒட்டு மொத்த ஊரே கட்டுப்பாட்டுடனும், ஒழுக்கத்துடனும் இருக்கும், என்ற நல்ல கருத்தை சில குறைகளோடு சொல்லியிருந்தாலும், அந்த குறைகளை மறந்து பார்த்தால் இந்த ’சான்றிதழ்’ நிச்சயம் நற்சான்றிதழே.
ரேட்டிங் 2.5/5