‘சாயம்’ விமர்சனம்
Casting : Vijay Vishwa, Shyni, Antony Samy, Pon Vannan, Ilavarasu, Seetha, Bose Venkat
Directed By : Antony Samy
Music By : Naga Udhayan
Produced By : Antony Samy
நாயகன் விஜய் விஷ்வா, நாயகி ஷைனி மற்றும் அவரது நண்பர்கள் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு இடையே சாதிப்பாகுபாடு தலைவிரித்தாடினாலும், விஜய்விஷ்வா மற்றும் அவரது நண்பர்கள் சாதிப்பாகுபாடு இன்றி நட்போடு இருக்கிறார்கள். இவர்களுடைய ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சில சாதி வெறியர்களின் சதி திட்டத்தில் சிக்கும் நண்பர்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது, அதனால் என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் ‘சாயம்’ படத்தின் கதை.
கல்லூரி மாணவர் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தும் விஜய் விஷ்வா, கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். கல்லூரி மாணவராக இருப்பவர் கொலை குற்றவாளியாக மாறும்போது நடிப்பிலும் மாற்றம் காட்டியிருக்கிறார்.
வழக்கமான கமர்ஷியன் படங்களின் நாயகி வேலையை செய்திருக்கும் ஷைனி, பாடல்கள் மற்றும் சில காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் ஆண்டனிசாமி, சண்டைக்காட்சிகளில் அதிரடி காட்டுவதோடு, ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையையும், ஒற்றுமையை சீர்குலைக்க நிகழ்த்தும் சதி திட்டங்களையும் அம்பலப்படுத்தியிருக்கிறார்.
பொன்வண்ணன், இளவரசு, சீதா, போஸ்வெங்கட் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, அனுபவம் வாய்ந்த நடிப்பால் கதாப்பாத்திரங்களுக்கு பலம் சேர்த்துள்ளனர்.
கிறிஸ்டோபர் மற்றும் சலீம் ஆகியோரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப உள்ளது. நாக உதயன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருப்பதோடு, பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
சாதி பிரிவினை பார்ப்பது சமூகத்திற்கு மட்டும் இன்றி தனிமனித முன்னேற்றத்திற்கும் பெரும் தடையாக இருக்கிறது, என்ற நல்ல கருத்தை சொல்லியிருக்கும் இயக்குநர் ஆண்டனிசாமி, அதை திரைப்படமாக கொடுப்பதில் பெரிய அளவில் தடுமாறியிருப்பது பெரும் குறையாக இருக்கிறது.
மொத்தத்தில், ‘சாயம்’ சாதிக்கவில்லை.
ரேட்டிங் 2.5/5