May 04, 2024 06:07 AM

’சபரி’ திரைப்பட விமர்சனம்

ed58e55a06eaaf04897f1ffbd5b46ea1.jpg

Casting : Varalakshmi Sarathkumar, Mime Gopi, Ganesh Venkatraman, Shashank, Baby Niveksha

Directed By : Anil Katz

Music By : Gopi Sundar

Produced By : Mahendra Nath Kondla

 

கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது பெண் குழந்தையுடன் மும்பையில் இருந்து ஐதராபாத்துக்கு வேலை தேடி வரும் வரலட்சுமி சரத்குமார், தனது மகள் தான் உலம் என்று வாழ்கிறார். அதே சமயம், அவரிடம் இருந்து குழந்தையை பிரிக்க அவரது முன்னாள் கணவர் கணேஷ் வெங்கட்ராமன் முயற்சிக்கிறார். இதற்கிடையே, கொலை குற்றவாளியான மைம் கோபி, வரலட்சுமியின் மகள் தன்னுடைய குழந்தை என்று சொந்தம் கொண்டாடுவதோடு, சிறுமியை கடத்தி வைத்துக்கொண்டு வரலட்சுமியிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்கிறார்.

 

குழந்தையை சொந்தம் கொண்டாடும் மைம் கோபி, அதே குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு பணம் கேட்பது ஏன்?, தனது மகளை மீட்க போராடும் வரலட்சுமி சரத்குமார் எடுத்த அதிரடி நடவடிக்கை என்ன? அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதே ‘சபரி’-யின் கதை.

 

ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்களை இந்த சமூகம் எப்படி பார்க்கும்  என்பதை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், பெண்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் கொடுக்கும் விதத்தில் நடித்திருக்கிறார். தன் குழந்தையை பின் தொடரும் ஆபத்தில் இருந்து அவரை காப்பாற்ற போராடும் வரலட்சுமி, நடிப்பு மற்றும் ஆக்‌ஷன் இரண்டையும் அளவாக கையாண்டு கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.

 

ஆரம்பத்திலேயே கவனம் ஈர்க்கும் வகையில் அறிமுகமாகும் மைக் கோபியின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பு மிக்கதாக பயணிக்கிறது. மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த அவரது நடவடிக்கைகள் மிரட்டலாக இருந்தாலும், படம் முடியும் போது அவரது வேடம் செல்லா காசகிவிடுகிறது.

 

வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷசாங் இருவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். 

 

வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்‌ஷாவின் நடிப்பில் குறையில்லை.

 

ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.

 

தன் மகள் தான் உலகம் என்று வாழும் நாயகியின் பாசப் போராட்டத்தை, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் அனில் கட்ஸ், ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களை கதைக்குள் அழைத்துச் சென்றுவிட்டாலும், அதன் பிறகு நகரும் திரைக்கதையில் தேவையில்லாத சில விசயங்களை திணித்து படத்தை தொய்வடைய செய்கிறார்.

 

சூர்யா கதாபாத்திரம் மூலம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர் படத்தின் முடிவில் அந்த கதாபாத்திரத்தை பலவீனமாக்கிவிட்டு, மற்றொரு கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம். இருந்தாலும், ஆபத்தில் இருந்து தன் குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் போராட்டத்தை மென்மையாகவும், அதிரடியாகவும் சொல்லியிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.

 

மொத்தத்தில், ‘சபரி’ சாதிக்கவில்லை.

 

ரேட்டிங் 2.5/5