’சக்க போடு போடு ராஜா’ விமர்சனம்
Casting : Santhanam, Vaibhavi, Vivek
Directed By : GL Sethuraman
Music By : Simbu
Produced By : VTV Ganesh
ஹீரோவாக உருவெடுத்தாலும் காமெடியை மட்டுமே நம்பி பயணித்த சந்தானம், முதல் முறையாக காமெடியை தவிர்த்துவிட்டு, ஹீரோயிஸத்தை நம்பி நடித்திருக்கும் படம் இந்த ‘சக்க போடு போடு ராஜா’ எப்படி என்பதை பார்ப்போம்.
தனது நண்பனுக்கு திருட்டு கல்யாணம் செய்து வைக்கும் சந்தானத்தை, அந்த பெண்ணின் ரவுடி அண்ணன் சம்பத் தேடி வருகிறார். அதனால் பெங்களூருக்கு எஸ்கேப் ஆகும் சந்தானம், அங்கு ஹீரோயின் வைபவியை சந்தித்ததும், அவர் மீது காதல் கொள்கிறார். வைபவியும் சந்தானத்தை லவ்வி விட சந்தானத்தின் காதல் பயணம் ஸ்மூத்தாக சென்றுக் கொண்டிருக்க, பிறகு தான் தெரிய வருகிறது, இவரும் சம்பத்தின் தங்கை தான் என்று.
ஏற்கனவே, சம்பத்தின் மூத்த தங்கையின் காதலுக்கு உதவி செய்ததால், அவருக்கு எதிரியாக இருக்கும் சந்தானம், அவரது இரண்டாவது தங்கையை காதலிக்கிறார், என்பது தெரிந்தால் மொத்தத்திற்கு மோசம் வந்துவிடும் என்று நினைக்கிறார். அதே சமயம் தங்கைகளுக்காகவே வாழும் அண்ணனை காதல் என்ற பெயரில் மீண்டும் அவமானப்படுத்த விரும்பாத வைபவி, காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்ய,
சம்பத் மனதை மாற்றி அவரது சம்மதத்தோடு வைபவியை கரம் பிடிக்கும் முயற்சியில் இறங்கும் சந்தானம், அதில் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மீதிக்கதை.
சந்தானம் எப்போதும் போல இந்த படத்தில் நடிக்கவில்லை. இதுவரை நாம் பார்த்த ஹீரோ சந்தானத்திற்கும், இந்த படத்தின் ஹீரோ சந்தானத்திற்கும் ரொம்ப வித்தியாசம் தெரிகிறது. ஆனால், அவை எதுவும் எடுபடாமலும் போகிறது. ஓவர் டோஸ் நக்கலை வெளிப்படுத்தாமல், ஒரு சில இடங்களில் மட்டும் சும்ம லைட்டாக தனது வாய் ஜாலத்தைக் காட்டியிருக்கும் சந்தானம், மற்ற இடங்களில் மாஸான ஹீரோ ஜாலத்தையும், ஆக்ஷன் ஜாலத்தையும் காட்டியிருந்தாலும், அவரிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது கிடைக்கவில்லை என்பதால், அவர் காட்டிய அத்தனை ஜாலங்களும் சப்புனு போய்விடுகிறது.
ஹீரோயின் வைபவி சாண்டில்யா அழகாக இருக்கிறார். நல்லா டான்ஸும் ஆடுகிறார். அவருக்கு கொடுத்த கேரக்டருக்கு ஏற்றபடி நடிக்கவும் செய்திருக்கிறார்.
முதல் முறையாக சந்தானத்துடன் இணைந்து நடித்திருக்கும் விவேக், மொத்த காமெடி ஏரியாவையும் குத்தகைக்கு எடுத்தது போல தோன்றினாலும், அவரது காமெடியும், கதாபாத்திரமும் பல படங்களில், வேறு சில காமெடி நடிகர்கள் நடித்தது போல இருக்கிறது. அதே சமயம், அந்த படங்களில் இருந்த காமெடி டோஸ் இதில் இல்லை. இருந்தாலும் ஒரு சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்.
விடிவி கணேஷ், சஞ்சனா, சம்பத் என்று பலர் இருந்தாலும், அவர்கள் கதாபாத்திரம் சொல்லும்படி இல்லை.
சிம்பு இசையமைப்பில், “கலக்கு மச்சான்...” என்ற பாடல் மட்டுமே முனுமுனுக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் டம்மி தான். அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் ரசிக்க வைக்கிறது.
கதையிலும் புதுசா இல்ல, காட்சியிலும் புதுசா இல்ல, ஏற்கனவே நாம் பார்த்த பல படங்களில் இருந்து உறுவி அதற்கு புதிய திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் ஜி.எல்.சேதுராமன், அதை உறுப்படியாகவும் செய்யவில்லை. சரி, சந்தானம் இருக்கிறாரே, என்று நம்பி வரும் ரசிகர்களையாவது திருப்தி படுத்துகிறார்களா? என்றால், அங்கேயும் செம டிரை.
காமெடியனாக நடித்து போரடித்ததால், ஹீரோவாக நடிக்க தொடங்கினேன், என்று கூறிய சந்தானம் ஹீரோவாகவும் தொடர்ந்து காமெடியாகவே நடித்தது போரடித்ததால், இப்படி மாஸ் கலந்த ஹீரோவாக நடித்திருப்பது அவருக்கு போர் அடிக்கவில்லை என்றாலும், ரசிகர்களுக்கு ரொம்ப போரடித்து விடுகிறது.
மொத்தத்தில், இந்த ‘சக்க போடு போடு ராஜ’ படம் ரசிகர்களுக்கான படமாக அல்லாமல், சந்தானம் என்ற நடிகருக்கான படமாக மட்டுமே உள்ளது.
ஜெ.சுகுமார்