’சமாரா’ திரைப்பட விமர்சனம்
Casting : Rahman, Bharath, Sanjana Dipu, Binoj Villya, Rahul Madhav, Govind Krishna, Tinij, Viviya Santh, Veer Aryan, Dinesh Lamba, Sonali Sudan, Darish Chinoy, Tom Scot, Bishal Prasanna
Directed By : Charles Joseph
Music By : Deepak Warrier
Produced By : Mk Subhakarn, Anuj Varghese Villyadath
எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு இடையே பயோ வார் எனப்படும் அனு ஆயுதம் மற்றும் கொடிய கிருமிகளை கொண்டு யுத்தம் நடத்தப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அப்படி ஒரு பயோ வாரை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் தான் ‘சமாரா’.
சர்வாதிகாரி ஹிட்லர் மிக கொடிய கிருமி ஒன்றை உருவாக்கி அதை போரில் பயன்படுத்த முடிவு செய்கிறார். ஆனால், அந்த கிருமியினால் ஏற்படும் பாதிப்பை பார்த்து ஹிட்லரே பயந்து போய் அதை போரில் பயன்படுத்தாமல் தவிர்த்து விடுவதோடு, முற்றிலுமாக அழித்தும் விடுகிறார். அப்படிப்பட்ட கிருமியை தற்போது மறு உருவாக்கம் செய்யும் தீவிரவாத குழு, அதனை பயன்படுத்தி இந்தியாவில் மிகப்பெரிய பயோ வாரை நடத்த முயற்சிக்கிறார்கள். அவர்களுடைய முயற்சியை முறியடிக்கும் பணியில் ஈடுபடும் நாயகன் ரகுமான், அதை எப்படி செய்கிறார். அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை விறுவிறுப்பாக சொல்வது தான் ‘சமாரா’.
சமாரா என்பது கொடிய கிருமியை அழிப்பதற்கான மருந்து. ஆனால், அந்த மருந்தும் உலகில் ஒருவரிடம் மட்டுமே இருக்க, அவரும் அதை ரகசியமாக பாதுகாக்க, அவரிடம் இருந்து அந்த மருந்தை கைப்பற்றவும் ஒரு கும்பல் முயற்சிக்கிறது. ஒரு பக்கம் கொடிய கிருமி மறுபக்கம் அதனை அழிக்கும் மருந்து, இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு மேலும் பல பாகங்களாக படத்தை கொண்டு செல்லும் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
நாயகனாக நடித்திருக்கும் ரகுமான், ராணுவ அதிகாரியா?, உளவாளியா? என எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை என்றாலும், அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் ரகுமான், தனது வேடத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
மருத்துவராக நடித்திருக்கும் பரத், க்ளைமாக்ஸ் நெருக்கத்தில் அறிமுகமானாலும், இரண்டாம் பாகத்தின் துவக்கமாக மட்டும் இன்றி, இரண்டாம் பாகம் முழுவதுமே அவரை மையமாக வைத்து தான் பயணிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.
பினோஜ் வில்லயா, சஞ்சனா திபு, ராகுல் மாதவ், கோவிந்த் கிருஷ்ணா, டினிஜ், விவியா சாந்த், வீர் ஆர்யன், தினேஷ் லம்பா, சோனாலி சுதன், டேரிஸ் ஜினோய், டாம் ஸ்காட், பிஷல் பிரசன்னா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
இமாச்சல பிரதேசத்தின் பனி நிறைந்த பகுதிகளை கூடுதல் அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் சினு சித்தார்த், அதே சமயம் குப்பைகள் நிறைந்த பகுதிகளையும் காட்டி காட்சிகளை இயல்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
தீபக் வாரியரின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சார்ல்ஸ் ஜோசப், சர்வதேச கதையை சர்வதேச தரத்திலான திரைப்படமாக கொடுத்திருக்கிறார். படத்தின் முதல் பாதியில் கதை சொல்லலில் சற்று குழப்பத்தையு ஏற்படுத்தினாலும், இரண்டாம் பாதியில் அனைத்து குழப்பங்களுக்கும் விடையளித்து படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைக்கிறார்.
மில்லன் பாவா கதபாத்திரத்தின் எண்ட்ரி மற்றும் அவருடன் பயணிக்கும் சூரி கதாபாத்திரத்தின் திடீர் மாற்றம் போன்ற காட்சிகள் எதிர்பார்க்காத திருப்பங்களாக இருப்பதோடு, படத்தின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது. படத்தில் இடம்பெறும் அத்தனை கதபாத்திரங்களையும் கதையோடு பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர், அடுத்தது என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்போடு படத்தை நகர்த்துவதோடு, க்ளைமாக்ஸில் எதிர்பார்க்காத திருப்பத்தை வைத்து இரண்டாம் பாகத்தின் மீதும் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்து விடுகிறார்.
மொத்தத்தில், இந்த ‘சமாரா’ எதிர்பார்ப்பின்றி பார்ப்பவர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் அறிவியல் க்ரைம் திரில்லர் படம்.
ரேட்டிங் 3.5/5