’சர்தார்’ திரைப்பட விமர்சனம்
Casting : Karthi, Rashi Khanna, Rajisha Vijayan, Laila, Changi Pandey,
Directed By : PS Mithran
Music By : GV Prakash Kumar
Produced By : Prince Pictures - Lakshman Kumar
இந்திய ராணுவத்தில் உளவாளியாக பணியாற்றும் அப்பா கார்த்தி, தேசத்துரோகி என்ற கெட்டப் பெயரோடு காணாமல் போகிறார். மகன் கார்த்தி காவல்துறையில் திறமைமிக்க அதிகாரியாக பணியாற்றினாலும், அப்பாவின் கெட்டப்பெயரால் அவ்வபோது அவமானப்படுத்தப்படுகிறார்.
இதற்கிடையே, இந்தியாவை குறிவைத்து மிகப்பெரிய சதி திட்டம் ஒன்று போடப்படுகிறது. அந்த திட்டத்தை தடுத்து நிறுத்த ஒரு தரப்பு மாயமான உளவாளி கார்த்தியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்க, வில்லன் கூட்டம் கார்த்தியை கண்டுபிடித்து கொலை செய்ய முயற்சிக்கிறது. உளவாளி கார்த்தி மீண்டும் வந்தாரா?, இந்தியாவுக்கு எதிரான சதி திட்டம் என்ன? அதை முறியடித்தார்களா? இல்லையா? என்பது தான் ‘சர்தார்’ படத்தின் கதை.
அப்பா, மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தி, இரண்டு வேடங்களுக்குமான வித்தியாசத்தை நடிப்பில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். எது செய்தாலும், 40 ஆயிரம் பேருக்கு தெரியும் வகையிலும் செய்யும் விளம்பரம் மோகம் கொண்ட மகன், உயிரையே பணிய வைத்து செய்யும் வேலையாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம் கிடைக்காத உளவாளி அப்பா என இரண்டு வேடங்களையும் மிக கச்சிதமாக கையாண்டிருக்கும் கார்த்தி, வயதான கதாப்பாத்திரத்தில் முதிர்ச்சியான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே சமயம், ஜாலியான காவல்துறை அதிகாரியாக அவர் செய்யும் வேலைகளும் ரசிக்க வைக்கிறது.
கதாநாயகியாக நடித்திருக்கும் ராஷி கண்ணா ஒரு பாடல், ஒரு சில காட்சிகளில் மட்டும் தலைகாட்டிவிட்டு தலைமறைவாகி விடுகிறார்.
அப்பா கார்த்திக்கு ஜோடியாக நடித்திருக்கும் ரஜிஷா விஜயன், நடிப்பிலும் சரி, அழகிலும் சரி ஈர்க்கும் வகையில் இருக்கிறார். ஆனால், உடை எடையை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருப்பார்.
முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் லைலா கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு, மக்களின் உயிரை குடிக்கும் பாட்டில் குடிநீர் பற்றி அவர் கொடுக்கும் தகவல்களால் நெஞ்சு பதறுகிறது.
வில்லனாக நடித்திருக்கும் ஜங்கி பாண்டி, மொஹமத் அலி, யூகி சேது, முனிஷ்காந்த் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.
ஜார்ச் சி.வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அக்ஷன் காட்சிகளில் அமர்க்களப்படுத்தியிருக்கிறது. இரண்டு கார்த்திக்கும் இருக்கும் வித்தியாசத்தை மிக நேர்த்தியாக காட்டியிருப்பவர், காட்சிகளை மிக பிரம்மாண்டமாகவும் காட்டியிருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு ஏற்றபடி இருப்பதோடு, படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை கொடுத்திருக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எவ்வளவு பெரிய ஆபத்து இருக்கிறது என்பதை ‘இரும்புத்திரை’ படத்தில் சொல்லிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன், இந்த படத்திலும் நம் அருகே இருக்கும் மிகப்பெரிய ஆபத்து குறித்து சொல்லி நம்மை எச்சரித்திருக்கிறார்.
மிக சாதாரணமாக பிளாஷ்டிக் பாட்டில் தண்ணீரை வாங்கி நாம் அருந்துகிறோம், ஆனால் அந்த பிளாஷ்டிக் பாட்டிலில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத ஆபத்து குறித்து படத்தில் சொல்லியிருக்கும் தகவல்கள், மிகப்பெரிய அதிர்ச்சியளிப்பதோடு, பயத்தையும் கொடுக்கிறது.
சமூக அக்கறையோடு ஒரு மெசஜை மிகப்பெரிய ஆக்ஷன் படமாக மிக நேர்த்தியாக கொடுத்திருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான மாஸ் ஆக்ஷன் பொழுதுபோக்கு படமாகவும் கொடுத்திருக்கிறார்.
கார்த்தியின் நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள், வேகமான திரைக்கதை, உளவாளி என்ற புதிய கதாப்பாத்திரம், அதன் தகவல்கள் என அனைத்தும் படத்தை ரசிக்க வைப்பதோடு, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை நம்மையும் படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.
மொத்தத்தில், ‘சர்தார்’ கார்த்தியின் மற்றொரு தீபாவளி சக்சஸ்.
ரேட்டிங் 4/5