Jul 20, 2023 07:08 AM

’சத்திய சோதனை’ திரைப்பட விமர்சனம்

7e8782d9590b72842ccdeceb16e9ae4e.jpg

Casting : Premgi Amaren, Swayam Siddha, Reshma, Chitthan Mohan, Selva Murugan, Haritha, Bharathi, Rajendran, Ganasambantham, Muthupandi, Karna Raja

Directed By : Suresh Sangaiah

Music By : Ragu Raam. M

Produced By : Super Talkies - Sameer Bharat Ram

 

”ஆயிரம் நிரபராதிகள் தப்பிக்கலாம், ஆனால், ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது” என்பது நம் நீதித் துறையின் கொள்கை. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் சட்டத்திடம் இருந்தும், நீதித்துறையிடம் இருந்தும் குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள், அப்பாவிகள் மட்டுமே தண்டிக்கப்படுகிறார்கள், என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்வதே ‘சத்திய சோதனை’ படத்தின் கதை.

 

ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் நாயகன் பிரேம் ஜி, ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்க்கிறார். உடனே அந்த உடலை ஒரு ஓரமாக இழுத்து வைப்பவர், அந்த உடலில் இருக்கும் கைகடிகாரம், கைப்பேசி மற்றும் சிறிய தங்க சங்கிலி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்க செல்கிறார். அதே சமயம், காவல் நிலையத்தில் சரணடையும் கொலையாளிகள், கொலை செய்யப்பட்டவர் ஏகப்பட்ட தங்க நகைகளை அணிந்திருந்ததாக சொல்கிறார்கள். இதனால், அப்பாவி பிரேம் ஜி மீது சந்தேகப்படும் காவல்துறை, மற்ற நகைகள் எங்கே? என்று கேட்டு அவரிடம் அதிரடியாக விசாரணை நடத்த இறுதியில் அந்த தங்க நகைகள் என்ன ஆனது? அப்பாவியான பிரேம் ஜி-யை சட்டம் என்ன செய்தது? என்பதை வயிறு வலிக்க சிரிக்கும்படியும், சிந்திக்கும்படியும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

 

காதல், டூயட் என்று கதாநாயகனாக நடித்தாலும் பிரதீப் என்ற அப்பாவித்தனமான இளைஞர் வேடத்திற்கு சரியான தேர்வாக இருக்கிறார் பிரேம் ஜி. வெட்டுப்பட்டு இறந்து கிடப்பவரை பார்த்ததும் எந்தவித பதற்றமும் இன்றி, அந்த உடலை ஓரமாக இழுத்து வைத்துவிட்டு, அருகில் இருக்கும் பொருட்களை காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் பிரேம் ஜி போன்ற ஒருவரை தற்போதைய காலக்கட்டத்தில் பார்ப்பது அபூர்வமானது என்றாலும், அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிகராக அல்லாமல் பிரதீப்பாக வாழ்ந்து கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார் பிரேம் ஜி.

 

நாயகியாக நடித்திருக்கும் ஸ்வயம் சித்தாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் என்று குறைவான வேலை கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி கதைக்கும் அவருக்கும் எந்த விதத்திலும் சம்மந்தம் இல்லை.

 

காவலர்களாக நடித்திருக்கும் சித்தன் மோகன் மற்றும் செல்வ முருகன் இருவரும் படத்தின் மற்றொரு ஹீரோக்களாக படத்தை தாங்கி பிடித்திருக்கிறார்கள். இவர்களுடைய முட்டாள்தனத்தால் காவல்துறை படும்பாடு சிரிப்பு சரவெடியாக வெடிக்கிறது. குறிப்பாக இவர்களின் வசன உச்சரிப்பு மற்றும் இயல்பான நடிப்பு கதைக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

நீதிபதியாக நடித்திருக்கும் கு.ஞானசம்பந்தம், உண்மையான குற்றவாளிகளை பிடிக்காமல், தவறே செய்யாதவர்களை பிடித்து அவர்களிடம் வசூல் செய்யும் காவலர்களை கலாய்க்கும் விதமாக நடித்து அசத்தியிருக்கிறார்.

 

பிரேம் ஜி-யின் அக்காவாக நடித்திருக்கும் ரேஷ்மா, மாமாவாக நடித்திருக்கும் கர்ணராஜ், பெண் போலீஸாக நடித்திருக்கும் ஹரிதா, போலீஸ் இன்பார்மராக நடித்திருக்கும் ராஜேந்திரன், நீதிபதிக்கே உத்தரவு போடும் பாட்டி என அனைத்து நடிகர்களும் மிக எதார்த்தமாக நடித்து கவனம் பெறுகிறார்கள்.

 

கதைக்கு ஏற்ப பயணித்திருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

ரகுராம்.எம்-ன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருப்பதோடு, பாடல் வரிகள் புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

படத்தின் பெரும்பாலான காட்சிகள் வசனம் நிறைந்தவையாக இருந்தாலும், அதை தொய்வில்லாமல் தொகுத்திருக்கும் வெங்கட் ராஜனின் படத்தொகுப்பு கச்சிதம்.

 

கலை இயக்குநரின் காவல் நிலையம் மற்றும் நீதிமன்ற செட்டும் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

எளியவருக்கு சட்டம் என்றுமே உதவாது, என்பதை பதிவு செய்யும் வகையில் எழுதி இயக்கியிருக்கும் சுரேஷ் சங்கையா, அதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.

 

காவல்துறை ஒரு குற்றத்தை எப்படி கையாளுகிறது, குற்றவாளிகளையும், நிரபாரதிகளையும் எப்படி நடத்துகிறது என்பதை நகைச்சுவையாக சொன்னாலும் அதில் இருக்கும் உண்மைகளையும், காவல்துறையின் மறுபக்கத்தையும் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.

 

ஒரு வழக்கை கையாள தெரியாத சில காவலர்களால், நீதித்துறை எப்படி திண்டாடுகிறது உள்ளிட்ட அனைத்தையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பது சிரிக்க வைத்தாலும், இப்படி படு மோசமான நிலையில் ஒரு காவல் நிலையம், அதிலும், ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு குக்கிராமத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது.

 

பட்ஜெட்டுக்காக இப்படி ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே காவல் நிலைய செட் போட்டு படமாக்கியிருப்பார்கள் என்று எடுத்துக் கொண்டாலும், ஒரு கொலை வழக்கை இன்ஸ்பெக்டர் தலைமையிலன ஒரு காவல் நிலையத்தில் இவ்வளவு மோசமாக கையாள்வதாக காட்டியிருப்பது, ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

இயக்குநர் சுரேஷ் சங்கையா சொல்லியிருக்கும் கருத்து சமூக அவலத்தை தோலுறித்து காட்டுவதோடு, அதை அவர் நகைச்சுவை பின்னணியில் இயக்கிய விதம் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது.

 

திரைக்கதை, காட்சிகள் மற்றும் நடிகர்களிடம் வேலை வாங்கிய விதம் ஆகியவற்றால் ஒரு திரைப்படமாக ரசிக்க முடிந்தாலும், படத்தில் காவல் நிலையத்தை கையாண்ட விதமும் மற்றும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்கள் லாஜிக் மீறலாக இருப்பதோடு, ஏற்றுக்கொள்ளும்படியும் இல்லை.

 

ரேட்டிங் 3/5