’சவரக்கத்தி’ விமர்சனம்
Casting : Ram, Mysskin, Poorna
Directed By : G.R.Aathityaa
Music By : Arrol Correli
Produced By : Mysskin
மிஷ்கின் கதை, திரைக்கதை எழுதி இயக்குநர் ராம் உடன் சேர்ந்து நடிப்பதோடு தயாரித்திருக்கும் ‘சவரக்கத்தி’ படத்தை, மிஷ்கினின் தம்பி ஜி.ஆர்.ஆதித்யா இயக்கியிருக்கிறார்.
சிறையில் இருந்து பரோலில் வந்திருக்கும் மிஷ்கின், பரோல் முடிந்து மீண்டும் சிறை செல்ல வேண்டிய நாளில், தனது கோஷ்ட்டியுடன் வெளியே செல்கிறார். அதே நாளில் சிகை திருத்துபவரான ராம், கோவிலில் காத்திருக்கும் தனது மச்சானுக்கு திருட்டு கல்யாணம் செய்து வைப்பதற்காக, தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் செல்ல, சிக்னலில் மிஷ்கின் கார் வேகமாக பிரேக் போட்ட காரணத்தால் ராம் தனது பைக்கில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார். அதைக்கண்டு அவரது பிள்ளைகளும் மனைவியும் சிரிக்க, அவர்கள் முன்பு தன்னை பலசாளியாக காட்டிக்கொள்ள நினைக்கும் ராம், காருக்குள் இருக்கும் மிஷ்கின் மற்றும் அவரது ஆட்களை வாய்க்கு வந்தபடி திட்டிவிடுவதோடு, மிஷ்கினை அடிக்க கையையும் ஓங்கிவிடுகிறார். இதற்கிடையே மிஷ்கின் காரை வேறு ஒரு கார் மோத, அதில் மிஷ்கினுக்கு அடிப்பட்டு வாயில் ரத்தம் வருகிறது. ராம் அடித்ததால் தான் ரத்தம் வருகிறது, என்று நினைத்துக்கொள்ளும் மிஷ்கின், ராமை தேடிப்பிடித்து கொல்ல வேண்டும் என்று கூறி, கையில் கத்தியுடன் அவரை தேட ஆரம்பிக்கிறார். ஒரு கட்டத்தில் மிஷ்கின் தன்னை கொல்ல வருவதை தெரிந்துக்கொள்ளும் ராம், மிஷ்கினிடம் இருந்து தப்பிக்க ஓடுகிறார்.
காலையில் இந்த சம்பவம் நடக்க, மாலை 6 மணிக்கு பரோல் நேரம் முடிந்து மிஷ்கின் சிறைக்கு செல்ல வேண்டும், அதற்குள் எப்படியாவது ராமை கொலை செய்ய வேண்டும் என்ற வெறியோடு அவர் ராமை துரத்த, ராமும் எப்படியாவது மிஷ்கினிடம் இருந்து தப்பித்துவிட வேண்டும் என்று ஓட, இறுதியில் என்ன நடந்தது என்பது தான் ‘சவரக்கத்தி’ படத்தின் கதை.
மிஷ்கின் இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருக்கிறார் என்று டைடிலில் போட்டாலும், படத்தையும் அவர் தான் இயக்கியிருப்பாரோ, என்று தோன்றுகிறது. தம்பிக்காக படம் தயாரித்திருக்கும் மிஷ்கின், அப்படியே இயக்கியும் கொடுத்துவிட்டு, தம்பியை இயக்குநராக்கியிருக்கிறார்.
சாதாரண விஷயத்தை கூட ரொம்ப சுவாரஸ்யமாக சொல்லக்கூடிய ஆற்றல் படைத்த மிஷ்கின், இந்த படத்திலும் அந்த யுக்தியை கையாண்டிருந்தாலும் பல இடங்களில் ரொம்ப ஓவர் டோஸாக இருக்கிறது. குறிப்பாக படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் ஓவர் ஆக்டிங் பண்ணி நம்மை கடுப்பேற்றுகிறார்கள்.
மங்கா என்ற ரவுடி கதாபாத்திரத்தில் படம் முழுவதும் கோபமாக சுற்றும் மிஷ்கினைப் பார்த்தால், கோபக்காரன் என்பதற்கு பதிலாக பைத்தியக்காரன் என்று தான் சொல்ல தோன்றுகிறது. மறுபக்கம் பார்பராக நடித்திருக்கும் இயக்குநர் ராமின் கதாபாத்திரமும் அதே பாணியில் தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அவரது மனைவியாக, காது கேற்கும் திறன் அற்றவராக நடித்திருக்கும் பூர்ணா நடிப்பில் ஸ்கோர் செய்திருந்தாலும், மிஷ்கின், ராம் அளவுக்கு அவரது கதாபாத்திரமும் மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது.
இப்படி படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் மட்டும் இன்றி, சிறு சிறு வேடத்தில் நடித்திருப்பவர்கள் கூட மிஷ்கின் அளவுக்கு ஓவர் ஆக்டிங் செய்கிறார்கள். சில நடிகர்கள் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக மிஷ்கினுடன் இருக்கும் அந்த சப்பாரி டிரெஸ் நபர்.
மிஷ்கினால் ராம் கொல்லப்படுவாரா, இல்லையா, என்பது தான் க்ளைமாக்ஸாக இருந்தாலும், மிஷ்கின் ராமை கொல்ல மாட்டார், என்பது படத்தின் ஆரம்பத்திலே தெரிந்துவிடும் அளவுக்கு அனைத்துக் காட்சிகளும் யூகிக்கும்படி இருக்கிறது. அதேபோல், மிஷ்கினிடம் இருந்து தப்பிக்க ஓடும் ராம், ஒரு காட்சியில் மிஷ்கின் கோஷ்ட்டியினரையும், தனது மச்சானின் திருமணத்தை தடுக்க முயற்சிக்கும் கோஷ்ட்டியினரையும் மோத விட்டுட்டு தப்பிக்கும் காட்சி ரொம்ப பழசானது. இதுபோன்ற காட்சி பல படங்களில் வந்துவிட்டது.
சின்ன விஷயத்தை வைத்து மிஷ்கின் அமைத்திருக்கும் திரைக்கதையில் எந்தவித குறையும் இல்லை என்றாலும், திரைக்கதையை நகர்த்த அவர் வைத்திருக்கும் காட்சிகள் அனைத்தும் அவர் படத்தில் நாம் ஏற்கனவே பார்த்ததாகவே இருக்கிறது. தனது மனைவியை கடத்திய மிஷ்கினை எப்படி எதிர்கொள்வது என்று யோசிக்கும் ராமுக்கு, பேச முடியாத நபர் அட்வைஸ் செய்ய, அதை கேட்டு வீரத்துடன் கிளம்பும் ராம், வில்லன்களிடம் உதை வாங்க, பிறகு தனது மகன் பார்த்ததும் அவர்களை அடித்து துவம்சம் செய்வது, என்று அனைத்து காட்சிகளும் ஆல்ரெடி பல படங்களில் அரைத்த மசாலாவாகவே உள்ளது.
இசயமைப்பாளர் அரோல் கொரெலியும், ஒளிப்பதிவாளர் வி.ஐ.கார்த்திக்கும் மிஷ்கினின் மனம் அறிந்து பணியாற்றியிருப்பதோடு, அவர் சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்தில், ஒரு உயிரை கொல்ல ரவுடி எடுக்கும் கத்தி, படத்தின் இறுதியில் ஒரு உயிர் பிறக்க தேவைப்படுகிறது, என்ற விஷயத்தை சொன்ன இயக்குநர் மிஷ்கினுக்கு லட்சம் அப்ளாஷ் கொடுத்தாலும் பத்தாது. அதே சமயம், தான் மட்டுமே புத்திசாலி, தான் சொல்வதும், காட்டுவதும் தான் திரைப்படம் என்ற எண்ணத்தில், பல இடங்களில் அவர் பைத்தியம் பிடித்து சுற்றுவதோடு, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கும் பைத்தியம் பிடிக்க வைத்துவிடுகிறார்.
ஜெ.சுகுமார்