’சீமராஜா’ விமர்சனம்
Casting : Sivakarthikeyan, Samantha, Simran, Soori
Directed By : Ponram
Music By : D.Imman
Produced By : 24 AM Studios
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த சிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணியின் மூன்றாவது படமான ‘சீமராஜா’ எப்படி என்பதை பார்ப்போம்.
சிங்கம்பட்டி சமஸ்தானத்தை சேர்ந்த ராஜாவான நெப்போலியனின் வாரிசான சீமராஜாவாகிய சிவகார்த்திகேயன், தன்னை ராஜாவாக பாவித்து குதிரை வண்டியில் ஊர் சுற்றிக்கொண்டு, தனது குடும்ப சொத்தில் தான தர்மங்களை செய்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே இரண்டு ஊர்களுக்கு பொதுவான மார்க்கெட்டை தங்களது சுயநலத்திற்காக நீதிமன்ற வழக்கு மூலம். லால் மற்றும் அவரது மனைவி சிம்ரனும் மூடிவிட, இது தொடர்பாக சிவகார்த்திகேயனின் குடும்பத்துக்கும், லால் குடும்பத்திற்கும் இடையே மோதல் நீடிக்கிறது.
இதற்கிடையே, சமந்தாவை கண்டதும் காதல் கொள்ளும் சிவகார்த்திகேயன், சமந்தாவை துரத்தி துரத்தி தனது காதலை வளர்ப்பவர், அப்படியே மூடிக்கிடக்கும் மார்க்கெட்டை தனது சாமர்த்தியத்தால் கைப்பற்றி இரண்டு ஊர் மக்களுக்கும் பொதுவானதாக அறிவித்தவுடன், சமந்தாவுக்கும் சிவா மீது காதல் மலர, அந்த நேரத்தில், மார்க்கெட் விஷயத்தில் சிவாவுக்கு வில்லனாக இருந்த லால், காதலிலும் சிவாவுக்கு வில்லனாகி விடுகிறார்.
காதலியை மீட்க களத்தில் இறங்கும் சிவகார்த்திகேயனுக்கு, கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து தனது ஊர் மக்களின் விவசாய நிலங்களை காப்பாற்றும் கடமையும் வர, அவை இரண்டிலும் எப்படி வெற்றி பெறுகிறார் என்பது தான் ‘சீமராஜா’ படத்தின் மீதிக்கதை.
சிவகார்த்திகேயன் - இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் வெளியான முதல் இரண்டுப் படங்களுக்கும், இந்த சீமராஜா-வுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. அதே காதல், அதே காமெடி, அதே பிரச்சினை, அதே சுபமான முடிவு, என்று தனது ரெகுலர் திரைக்கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் பொன்ராம், 14 ஆம் நூற்றாண்டின் கடம்பவேல் ராஜா போஷன் மூலம் திரைக்கதையில் புதிய எஸ்சென்ஸை சேர்த்திருக்கிறார்.
ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிப்பது, காதல் தோல்வியில் பாட்டு பாடுவது, சூரியுடன் சேர்ந்து காமெடி பண்ணுவது என்று சிவகார்த்திகேயன், தனது பணியை எப்போதும் போலவே செய்திருந்தாலும், கடம்பவேல் ராஜா வேடத்திற்காக தனது தோற்றத்தில் சற்று வித்தியாசத்தை காட்டியிருப்பவர், நடிப்பிலும் வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார்.
கதையே ஹீரோயினை சுற்றி நகர்ந்தாலும், கமர்ஷியல் படங்கள், அதிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களை மாஸ் ஹீரோவாக காட்டக்கூடிய கமர்ஷியல் படங்களில் டூயட் பாடும் வேலையை மட்டுமே ஹீரோயின்கள் செய்வார்கள். சமந்தாவுக்கும் இந்த படத்தில் அதே நிலை தான். சிலம்பும் சுற்றும் பெண்ணாக சமந்தாவை ஆரம்பத்தில் அமர்க்களமாக அறிமுகப்படுத்தும் இயக்குநர், அடுத்தடுத்த காட்சிகளில் அவரை டம்மியாக்கிவிடுகிறார்.
அதிலும், பள்ளியில் மாணவர் ஒருவரது தந்தை அடியாட்களுடன் வந்து சமந்தாவை மிரட்டும் போது, சமந்தா சிலம்பம் சுற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்க்க, எப்போதும் போல, அங்கேயும் ஹீரோவுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர், எல்லாம் சிவா-மயம் என்பதை நிரூபிக்கிறார்.
சிவகார்த்திகேயன் - சமந்தா காதல் காட்சிகளைக் காட்டிலும், சூரி - சிவா கூட்டணியின் காமெடிக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்றவாறு, படம் முழுவதும் வரும் சூரி, ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவுக்கு திருப்திப்படுத்தவில்லை என்றாலும், தனடு காமெடி மூலம் பல இடங்களில் சிரிக்க வைக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கும் லால், வில்லியாக நடித்திருக்கும் சிம்ரன், சிவகார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருக்கும் நெப்போலியன் என இந்த மூன்று முக்கிய நடிகர்களுக்கு முடிந்தவரை திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் காமெடி ஏரியாவையே சுற்றி வருவதாலும், கூடுதலாக சிவகார்த்திகேயனின் ராஜா எப்பிசோட் வருவதாலும், இந்த சீனியர் நடிகர்கள் நம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காராமல் போய்விடுகிறார்கள்.
கதை பழசாக இருந்தாலும், ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொன்னாலும், அதை எப்படி சொன்னால், யார் யாருக்கு பிடிக்கும் என்பதை புரிந்து வைத்திருக்கும் இயக்குநர், பெண்கள் மற்றும் சிறுவர்களை டார்க்கெட் செய்து காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். நாய்க்கு சிறுத்தை வேஷம் போட்டு ஊருக்குள் விட, பிறகு உண்மையான சிறுத்தையே ஊருக்குள் வர, அதனிடம் சூரி சிக்கிக்கொள்ளும் காட்சிக்கு பெண்களும், சிறுவர்களும் நிச்சயம் அடிமையாகிவிடுவார்கள்.
இப்படி குறிப்பிட்ட ஆடியன்ஸை டார்க்கெட் செய்து திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் பொன்ராம், அதற்காக மக்கள் மறந்து போன மன்னர் ஆட்சியை மீண்டும் நினைவுப்படுத்துவது சரியா? தனக்கு குணிந்து வணக்கம் சொன்னால் பிடிக்காது, நிமிர்ந்து ஹாய் சொல்ல வேண்டும், என்று சமத்துவம் பேசும் சீமராஜா, கடைசிவரை தனது மன்னர் பட்டத்தை மட்டும் விட மாட்டேங்குறாரே!. தனது முன்னோர்கள் ராஜாவாக இருந்து மக்களுக்கு செய்ததை, தான் ராஜாவாக அல்லாமல் மக்களோடு மக்களாக இருந்து செய்கிறேன், என்று பேச வேண்டிய ஹீரோ, ராஜாவாக பதவி ஏற்பது, மன்னர் ஸ்டைலில் திருமணம் செய்வது எல்லாம் ரொம்பவே ஓவராக இருக்கிறது.
டெம்ப்பிளட் இசையமைப்பாளர் டி.இமானின் இசையில், எங்கேயோ அல்ல, அவரது இசையிலேயே கேட்ட மெட்டுக்களை இந்த படத்திலும் கேட்க முடிகிறது. பின்னணி இசையில் எதாவது செய்ய வேண்டும் என்று இமான் முயற்சித்திருந்தாலும், அது பெரிதாக எடுபடவில்லை. பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் சீமராஜா கலர்புல்லாக இருப்பது போல, கடம்பவேல் ராஜா டெரராக இருக்கிறார். சின்ன எப்பிசோடாக இருந்தாலும், ராஜா போர்ஷன் காட்சிகள் ரசிக்க வைக்கிறது.
சிவாவை மாஸ் ஹீரோவாக காட்ட நினைத்திருக்கும் இயக்குநர் பொன்ராம், அதே சமயம் கண்ணியத்துடனும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். இளைஞர்களை கவரும் காதல் தோல்வி பாடலை வைத்திருப்பவர், அதை டாஸ்மாக்கில் வைக்கவில்லை. காதல் இருக்கும் ஆனால் ரொமான்ஸ் இருக்காது, ஆக்ஷன் இருக்கும் ஆனால் வன்முறை இருக்காது, என்று ஒரு வட்டத்திற்குள் பயணித்திருக்கும் இயக்குநர் பொன்ராம், விவசாயம் பற்றியும் பேசியிருக்கிறார்.
கடம்பவேல் ராஜா போர்ஷன் மற்றும் அதை படமாக்கிய விதத்திற்காக இயக்குநர் பொன்ராமை பாராட்டினாலும், படத்தில் கையாளப்பட்ட கான்சப்ட், ட்விஸ்ட் என்று அனைத்தும் ஏற்கனவே நாம் இயக்குநர் பொன்ராம் படத்தில் பார்த்ததாகவோ, அல்லது வேறு எதாவது தமிழ்ப் படத்தில் பார்த்ததாகவே இருக்கிறது.
இதை நாம் சொல்வதற்கு முன்பாக, படத்தில் வரும் “வாரேன் வாரேன் சீமராஜா..” பாடலிலேயே “அரைத்த மாவை அரைத்தாலும், அதற்கு தனி திறமை வேண்டும்” என்று சிவகார்த்திகேயன் பாடிவிடுகிறார்.
அரைத்த மாவை அரைப்பதில் சிவா - இயக்குநர் பொன்ராம் கூட்டணி தனி திறமை படைத்தவர்கள் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், புலித்தமாவை எவ்வளவு சிறப்பாக அரைத்தாலும், அதை குப்பையில் தான் போட வேண்டும், என்பதையும் இந்த கூட்டணி புரிந்துக்கொள்வது நல்லது.
ரேட்டிங் 3/5