Nov 25, 2018 04:42 AM

’செய்’ திரைப்பட விமர்சனம்

f342f4401a4e2acecadda8d4e814f5a0.jpg

Casting : Nakul, Aanjal Munjal, Nazar, Prakashraj

Directed By : Raj Babu

Music By : NyX Lopez

Produced By : Mannu

 

சினிமாவில் ஹீரோவாக முயற்சிக்கும் சாதாரணமான இளைஞர் ஒருவர், நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகிறார், என்பது தான் ‘செய்’ படத்தின் ஒன்லைன்.

 

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஹீரோ நகுல், சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க, இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் ஹீரோயின் ஆஞ்சல் முஞ்சல், நகுலின் கதாபாத்திரத்தை வைத்து கதை எழுத அவருக்கு தெரியாமல் அவரை பின் தொடர்வதோடு அவரிடம் போன் செய்தும் பேசுகிறார். இதை காதல் என்று நினைத்துக் கொள்ளும் நகுல், அந்த பெண் சொல்வதை அப்படியே தவறாமல் செய்ய, பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் நகுலை ஆஞ்சல் வேலைக்கு செல்லும்படி செல்ல, அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவரான நகுலின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது. இதனால், அப்பா செய்ய வேண்டிய வேலையை நகுல் செய்ய முடிவு செய்கிறார்.

 

இதற்கிடையே, மருத்துவமனை பிணவறையில் இருந்து உயிரிழந்தவரது உடலை எடுத்துச் செல்ல வேண்டிய வேலை வர, அதை செய்யும் நகுல், அந்த பிணத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி நடப்பதை அறிந்துக்கொள்கிறார். உடனே, அவர்களிடம் இருந்து அந்த பிணத்தோடு எஸ்கேப் ஆகும் நகுல், உயிரிழந்தவரின் பின்னணியை தெரிந்துக்கொள்வதோடு, அவர் செய்ய நினைத்த மிகப்பெரிய பணியை, பல தடைகளை கடந்து எப்படி ‘செய்’து முடிக்கிறார் என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

குடிசைப் பகுதியில் வாழும் வாலிபர் வேடத்தில் நடித்திருக்கும் நகுல், துறுதுறுவென்று தனது துள்ளல் நடிப்பை வெளிப்படுத்தினாலும், அவரது டயலாக் டெலிவரியும், மேனரிசமும் ரசிகர்களுக்கு எரிச்சலடைய செய்கிறது. வேகம் இருக்க தான் வேண்டும், அதற்காக இப்படி, தான் சொல்வதையும், செய்வதையும் மற்றவர்கள் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு வேகம் இருப்பது நல்லதல்ல என்பதை புரிந்துக்கொண்டு நகுல் நடித்தால் நன்று.

 

ஹீரோயின் ஆஞ்சல் முஞ்சால், பாடல்களுக்காக மட்டும் இன்றி திரைக்கதையின் ஓட்டத்திற்கு உறுதுணையாக இருக்கும் கதாபாத்திரமாகவும் இருக்கிறார்.

 

நாசர், பிரகாஷ்ராஜ் போன்ற முன்னணி நடிகர்களின் முகங்களை மட்டும் பயன்படுத்த நினைத்த இயக்குநர்கள், அவர்களை முழுமையாக பயன்படுத்த தவறிவிட்டார்.

 

என்.ஒய்.எக்ஸ்.லூபேஸியின் இசையும், விஜய் உலகநாதனின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் ராஜ் பாபு, அதை ஜெய்சங்கர் காலத்து பாணியில் சொல்லியிருக்கிறார்.

 

கோட் ஷூட் போட்ட வில்லனை மறைமுகமாக காட்டி, க்ளைமாக்ஸில் முகத்தை காட்டுவது, வில்லனுடன் கவர்ச்சியான பெண் இருப்பது, என்று திரைக்கதையை பழைய பார்மட்டில் அமைத்திருக்கும் இயக்குநர், அதை படமாக்கும் போதும் பின்னோக்கியே சென்றிருக்கிறார்.

 

மொத்தத்தில், இந்த ‘செய்’ ரசிகர்களை வச்சி செய்யும் ரனகளமான படம்.

 

ரேட்டிங் 2.5/5