Apr 01, 2022 02:38 AM

’செல்ஃபி’ விமர்சனம்

518520e52a5d4ca5b8f1ba4593282419.jpg

Casting : GV Prakash, Goutham Vasudev Menon, Varsha Bollamma, Vidya Pradeep, Vagai Chandrasekhar, Sangili Murugan, Subramaniam Siva, DG Gunanidhi, Sam Paul, Thangadurai

Directed By : Mathi Maran

Music By : G. V. Prakash Kumar

Produced By : DG Film Company - D. Sabareesh

 

கல்லூரியில் மாணவனாக படிக்கும் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் பணத்திற்காக, கல்லூரியில் மாணவர்களை சேர்க்கும் புரோக்கர் வேலையில் ஈடுபடுகின்றனர்.  இதனால் ஏற்கனவே அந்த தொழிலில் இருப்பவர்களுக்கும் ஜிவி-க்கு மோதல் உண்டாகிறது, இறுதியில் ஜிவி பிரகாஷ் மற்றும் அவரது நண்பருக்கு என்ன ஆனது என்பதே செல்ஃபி திரைப்படத்தின் கதை. 

 

இன்ஜினியரிங் மற்றும் மெடிக்கல் காலேஜில் மாணவர்களை சேர்ப்பதற்கு பின்னால் நடக்கும் வசூல் வேட்டையும், அதை சார்ந்து இருக்கும் மாஃபியா மற்றும் புரோக்கர்களை பற்றி பேசும் இப்படம் இதுவரை தமிழ் சினிமாவில் வராத ஒரு களமாக இருக்கிறது.

 

முதல் பாதி முழுவதும் ஜிவி பிரகாஷ் படத்தை தன் முதுகில் சுமந்து செல்கிறார்.  அவரின் அலட்டிக்கொள்ளாத அசால்ட்டான நடிப்பு நம்மளை கதையுடன் ஒன்றிணைகிறது.  காலேஜில் மாணவரை சேர்க்க ஜிவி பிரகாஷ் செய்யும் வேலைகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.  

 

முதல் பாதி ஜிவி என்றால் இரண்டாம் பாதியை கௌதம் வாசுதேவ் மேனன் கைப்பற்றுகிறார். அவரின் ஸ்கிரீன் பிரசன்ஸ் கதைக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் லுங்கி மற்றும் கத்தியுடன் அவர் சண்டையிடும் காட்சிகள் படு மாஸாக உள்ளது. 

 

ஜிவி-க்கு ஜோடியாக வரும் வர்ஷா பொல்லம்மாவிற்கு பெரிதாக கதையில் முக்கியத்துவம் இல்லை என்றாலும், உறுத்தலாக இல்லாமல் உள்ளார்.  

 

ஜிவி-ன் நண்பனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் குணாநிதி, கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பதோடு, முதல் படம் என்பது தெரியாதவாறு நன்றாகவும் நடித்திருக்கிறார்.

 

Selfie Movie Review

 

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் பெரிய அளவு எடுபடவில்லை என்றாலும் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு கைகொடுத்திருக்கிறது.

 

விஷ்னு ரங்கசாமியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கிய விதம் மிரட்டலாக உள்ளது.

 

கதை முழுவதிலும் ஸ்டண்ட் காட்சிகள் தத்ரூபமாக எடுக்கப்பட்டிருந்தது.  இ.இளையராஜாவின் படத்தொகுப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

படம் தொடங்கியதில் இருந்து நேரடியாக கதைக்குள் சென்றுவிடுகிறது, ஹீரோ பில்டப்பிற்காக கதையை விட்டு வெளியே செல்லாமல் கொண்டு சென்றதற்கு இயக்குநரை பாராட்ட வேண்டும்.

 

கல்லூரி கதை என்பதால், வழக்கமாக மாணவர்களிடையே நடக்கும் மோதல், காமெடி, காதல் என்றெல்லாம் போகாமல், கதைக்களத்தை சுற்றியே திரைக்கதை பயணித்திருக்கிறது.

அதே சமயம், அதை கமர்ஷியலாக சொல்லியிருந்தாலும், தேவையில்லாத விஷயங்கள் எதுவும் திணிக்கப்படவில்லை, இவை அனைத்தும் படத்திற்கு பிளஷாக இருக்கிறது.

 

நீட் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்ற விவாதங்கள் ஒரு பக்கம் நடந்துக்கொண்டிருக்கும் இந்த நிலையில், எந்த தேர்வாக இருந்தாலும் கல்லூரிகளின் வசூல் வேட்டையை யாராலும் தடுக்க முடியாது, என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் மதிமாறன், அதை கமர்ஷியலாகவும் கையாண்டிருப்பது ரசிக்க வைக்கிறது.

 

பிள்ளைகள் படிப்பு மீது பெற்றோர்களுக்கு இருக்கும் கனவு மற்றும் ஆசையை வைத்து அவர்களிடம் பணம் பறிக்கும் கல்லூரிகள் பற்றியும், அதன் பின்னணியில் இருக்கும் மாஃபியா கும்பல் பற்றியும் மிக அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குநர் மதிமாறனை தாராளமாக பாராட்டலாம்.

 

மொத்தத்தில், செல்ஃபி மக்கள் மனதுக்கு நெருக்கமான படமாகவும், மாணவர்களுக்கு பாடமாகவும் இருக்கும்.

 

ரேட்டிங் 4/5