’செருப்புகள் ஜாக்கிரதை’ இணையத் தொடர் விமர்சனம்

Casting : Singampuli, Vivek Rajagopal, Aira, Lollu Saba Manohar
Directed By : Rajesh Susairaj
Music By : LV Muththu & Ganesh
Produced By : S Group - Singaravelan
ரூ.10 கோடி மதிப்புள்ள வைரங்களை வியாபாரி ஒருவரிடம் இருந்து திருடிக்கொண்டு வரும் நாகரத்தினம் என்பவர், போலீஸ் தன்னை பின் தொடர்வதை அறிந்துக் கொண்டு, வைரங்களை தனது செருப்பில் மறைத்து வைப்பதோடு, அந்த செருப்பை தனது ஆடிட்டரான சிங்கம்புலியிடம் கொடுத்து விடுகிறார்.
இதற்கிடையே, வைரங்கள் மறைத்து வைக்கப்பட்ட செருப்புகள் காணாமல் போகிறது. வைரத்தை பறிகொடுத்த வியாபாரி போலீஸ் உதவியுடன் தேடுகிறார். காணாமல் போன செருப்பில் வைரம் இருப்பதை தெரிந்துக் கொள்ளும் சிங்கம்புலி, தனது மகன் விவேக் ராஜகோபால் உடன் இணைந்து செருப்பை தேடுகிறார். செருப்பு இருக்கும் இடம் தெரிந்தாலும், அதை எடுக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இறுதியில் வைரம் மறைத்து வைக்கப்பட்ட செருப்பு யார் கையில் கிடைத்தது? என்பதை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க...சிரிக்க...சொல்வது தான் ‘செருப்புகள் ஜாக்கிரதை’.
தமிழ் இணையத் தொடர்கள் என்றாலே ஆக்ஷன் டிராமா அல்லது கிரைம் திரில்லர் ஆகிய ஜானர்களாகவே மட்டுமே இருக்கும் நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பார்த்து மகிழும்படியான முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகியிருக்கும் இந்த இணையத் தொடரின் 6 எப்பிசோட்களும் காமெடி ரணகளமாக இருக்கிறது.
முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிங்கம்புலி, அவரது மகனாக நடித்திருக்கும் விவேக் ராஜகோபால் அவரது காதலி ஐரா என அனைத்து நடிகர், நடிகைகளும் போட்டி போட்டு பார்வையாளர்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் காட்சிகளில் உள்ள நகைச்சுவை உணர்வுகளை சிந்தாமல், சிதறாமல் ரசிகர்களிடத்தில் கடத்தி தொடருக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
முதல் எப்பிசோட் சற்று மெதுவாக தொடங்கினாலும், அடுத்தடுத்த எப்பிசோட்கள் சிரிப்பு சரவெடியாக வெடித்து மக்களை மத்தாப்பூவாக மகிழ்விக்கிறது.
மொத்தத்தில், ‘செருப்புகள் ஜாக்கிரதை’ காமெடி திருவிழா
ரேட்டிங் 3.5/5