Apr 15, 2023 12:28 PM

‘சாகுந்தலம்’ திரைப்பட விமர்சனம்

f88ec2076070299b28b36ac67715f4de.jpg

Casting : Samantha Ruth Prabhu, Dev Mohan, Sachin Khedekar, Mohan Babu, Aditi Balan, Ananya Nagalla, Prakash Raj as Sarangi, Gautami, Madhoo, Kabir Bedi, Jisshu Sengupta, Kabir Duhan Singh, Allu Arha

Directed By : Gunasekhar

Music By : Mani Sharma

Produced By : Neelima Guna

 

விஸ்வாமித்திர முனிவரால் மேனகைக்கு பிறகுக்கும் குழந்தையான சாகுந்தலா கண்வ மகரிஷியின் மகளாக அவரது ஆசிரமத்தில் வளர்கிறாள். அப்போது அரசன் துஷ்யந்தன், ஆசிரமத்திற்கு வரும் போது, சாகுந்தலாவை சந்திக்கிறார். கண்டதும் காதல் கொள்ளும் இருவரும் நெருக்கமாக பழகுகிறார்கள். இதற்கிடையே, அரண்மனைக்கு செல்ல முடிவு செய்யும் துஷ்யந்தன், விரைவில் திரும்ப வந்து அழைத்து செல்வதாக சாகுந்தலாவிடம் கூறிவிட்டு செல்கிறார். 

 

இந்த நிலையில், சாகுந்தலா கர்ப்பம் தறிக்க, தனது காதலன் துஷ்யந்தனை தேடி அரண்மனைக்கு செல்கிறார். ஆனால், அங்கிருக்கும் அரசன் துஷ்யந்தன், சாகுந்தலாவை தனக்கு யார்? என்றே தெரியாது என்று கூறி அவமானப்படுத்த, அவரும் திரும்பி விடுகிறார். துஷ்யந்தன் அப்படி சொன்னது ஏன்?, இவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே ‘சாகுந்தலம்’ படத்தின் மீதிக்கதை.

 

சாகுந்தலாவாக நடித்திருக்கும் சமந்தா, உருகி உருகி காதலிக்கும் வேடத்தில் கச்சிதமாக நடித்து படம் பார்ப்பவர்களையும் உருக செய்கிறார். தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு எதிராக வெகுண்டெழுவது உள்ளிட்ட பல காட்சிகளில் மிக அழுத்தமாக நடித்திருப்பவர், தனக்கான வேலையை மிக சிறப்பாக செய்திருக்கிறார்.

 

துஷ்யந்தன் அரசனாக நடித்திருக்கும் தேவ் மோகன், அரசன் வேடத்திற்கான கம்பீரத்துடன் இருக்கிறார். அவரது கம்பீரம் நடிப்பிலும் இருப்பதால் ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.

 

சச்சின் கெடேகர், மோகன் பாபு, அதிதி பாலன், அனன்யா நாகல்லா, பிரகாஷ் ராஜ், கெளதமி, மது, கபீர் பேடி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் தங்களது பணியை சரியாக செய்திருந்தாலும் அவர்கள் நடிகர்களாக தெரிகிறார்களே தவிர, அந்த  கதாபாத்திரமாக மனதில் பதிய மறுக்கிறார்கள்.

 

சேகர் வி.ஜோசப்பின் ஒளிப்பதிவும், கிராபிக்ஸ் கலந்த காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கிறது.

 

மணிசர்மாவின் இசையில் பாடல்கள் படு சுமாராக இருந்தாலும், பின்னணி இசை புராண காலக்கட்டத்தை நினைவுப்படுத்துவது போல் இருக்கிறது.

 

படத்தை இயக்கியிருக்கும் குணசேகர், புராணக் கதையை தற்போதைய தொழில்நுட்ப வசதியுடன் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பது ரசிக்க வைத்தாலும், திரைக்கதையின் வேகம் மற்றும் காட்சி வடிவமைப்புகளில் ஏற்படும் தொய்வு படத்திற்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

மொத்தத்தில், உருகி உருகி காதலித்தாலும் ‘சாகுந்தலம்’ ரசிகர்களை பெரிதாக பாதிக்கவில்லை.

 

ரேட்டிங் 2.5/5