Sep 01, 2021 02:36 PM

’ஷாங்-ச்சி அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ்’ விமர்சனம்

9123346b6abcb3399883cbf9ca571a06.jpg

Casting : Simu Liu, Tony Leung, Awkwafina, Fala Chen

Directed By : Destin Daniel Cretton

Music By : Joel P. West

Produced By : Marvel Studios

 

ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மார்வல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆசிய நாட்டு இயக்குநர் இயக்கிய மற்றும் ஆசிய நாட்டு ஹீரோ முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் படம் தான் ’ஷாங்-ச்சி அண்ட் த லெஜெண்ட் ஆஃப் த டென் ரிங்ஸ்’.

 

சக்தி மிக்க 10 வளையங்களை கைகளில் அணிந்துக்கொண்டு உலகின் பல சாம்ராஜ்யங்களை வீழ்த்திய தனது தந்தையை எதிர்த்து ஹீரோ போராடுகிறார். அவர் ஏன் தனது தந்தையை எதிர்க்கிறார், எதிர்த்தவர் வெற்றி பெற்றாரா இல்லையா, என்பது தான் படத்தின் கதை.

 

உலகம் முழுவதும் உள்ள மார்வல் காமிக்ஸ் ரசிகர்களை மட்டும் இன்றி இளைஞர்களையும் கவரும் விதத்தில் அதிரடியான ஆக்‌ஷன் மற்றும் சாகச காட்சிகளோடு உருவாகியிருக்கும் இப்படம் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருக்குமான படமாக உள்ளது.

 

படத்தின் கதை, பல கிளைக்கதைகளாக நகர்ந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு கதை புரியும்படி காட்சிகள் கச்சிதமாக கையாளப்பட்டுள்ளது.

 

ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளும், சீட் நுணியில் உட்கார வைக்கும் சாகச காட்சிகளும் நிறைந்திருப்பது போல, சீன நாட்டு கலாச்சாரம் படத்தில் நிறைந்திருக்கிறது.

 

கதைக்கு ஏற்ப தமிழ் வசனங்கள் கச்சிதமாக இருப்பதோடு, பல இடங்களில் நம்மை சிரிக்கவும் வைக்கிறது.

 

மாய கிராமத்தில் காட்டப்படும் வித்தியாசமான விலங்குகள் நிச்சயம் சிறுவர்களை கவரும். அதிலும் முகமே இல்லாத மோரிஸ் என்ற பெயர் கொண்ட அந்த விலங்கும், அதனுடன் பேசும் நடிகர் பென் கிங்ஸ்லி வரும் காட்சிகள் அனைத்தும் வடிவேலு காமெடி அளவுக்கு நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

 

10 வளையங்களை கையில் மாட்டிக்கொண்டு அதிரடி காட்டும் டோனி லியுங், அவரை எதிர்த்து போராடுவதில் அதிரடி காட்டும் அவருடைய மகனாக நடித்திருக்கும் சிமு லியு, அவருடைய தோழியாக நடித்திருக்கும் ஆவ்க்வாஃபினா உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

 

ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான பிரம்மாண்டமான காட்சிகளும், பிரமிக்க வைக்கும் கிராபிக்ஸ்களும் படத்தில் நிறைந்திருந்தாலும், புதிய விஷயங்கள் எதுவும் இல்லை. மார்வல் காமிக்ஸ் உருவாக்கிய ஹல்க் வடிவத்தில் ஒரு ராட்ச மனிதன், வித்தியாசமான உருவம் கொண்ட ராட்சத மிருகங்கள் என அனைத்தும் ஏற்கனவே பார்த்தவைகளாகவே இருப்பது படத்தின் மீது சற்று சலிப்படைய செய்கிறது. இருந்தாலும், படத்தில் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் மற்றும் அதிசய கிராமத்தின் நகரும் காடுகள் ரசிக்க வைக்கிறது.

 

 

ரேட்டிங் 3/5