Jan 26, 2022 08:10 AM

’சில நேரங்களில் சில மனிதர்கள்’ விமர்சனம்

1f5b06d5973edad9bc7e5cbef103bb97.jpg

Casting : Ashok Selvan, Manikandan, Abi Hassan, Praveen Raja, Reeya, Rithvika, Anju Kuriyan, Nazar, KS Ravikumar, Anuppama, Ilavarasu

Directed By : Vishal Venkat

Music By : Rathan

Produced By : AR Entertainment and Trident Arts

 

4 வெவ்வேறு நபர்களின் வாழ்க்கை ஒரு விபத்து மூலம் ஒரே புள்ளியில் இணைவது தான் படத்தின் கதை. இதுபோன்ற கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே வந்திருந்தாலும், இப்படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கதாப்பாத்திரங்களின் மன மாற்றங்கள், மற்ற படங்களில் இருந்து இப்படத்தை வேறுபடுத்தி காட்டுவதோடு, படத்தோடும் நம்மை பயணிக்க வைக்கிறது.

 

அசோக் செல்வன், மணிகண்டன், அபி ஹாசன், பிரவீன் ராஜா, நாசர், ரியா, ரித்விகா ஆகியோரின் கதாப்பாத்திரங்களும், அதில் அவர்கள் வெளிப்படுத்திய நடிப்பும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.

 

அனைத்து விஷயங்களையும் மிக தெளிவோடு அனுகும் நாசரின் கதாப்பாத்திரம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை கற்றுக்கொடுக்கிறது.

 

அசோக் செல்வனுக்கு நடிக்க கூடிய வேடம். அவரும் தனது பங்கிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். அனைத்து வேடங்களையும் இயல்பாக கையாளும் மணிகண்டன், தனது கதாப்பாத்திரத்தில் மிக எதார்த்தமாக நடித்து கவர்கிறார். அவருடைய கதாப்பாத்திரமும், மன மாற்றமும், எதையும் சரியாக செய்யாமல், தனக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று புலம்புகிறவர்களுக்கு புறிதலை கொடுக்கும்.

 

பிரபல இயக்குநரின் மகன் மற்றும் அறிமுக நடிகர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன், கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருப்பதோடு, தனது நடிப்பு மூலம் கதாப்பாத்திரத்தை ரசிக்கவும் வைக்கிறார். தனது முதல் படத்தின் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவைவும், ரசிகர்களையும் தரக்குறைவாக பேசிவிட்டு, அதனால் மீடியாக்களிடம் சிக்கி சின்னாபின்னமாவது, அதை தொடர்ந்து வெளியாகும் ட்ரோல்களை எதிர்கொள்ளும் முறை, அதற்கு அவருடைய ரியாக்‌ஷன், என அனைத்திலும் மிக நேர்த்தியாக நடித்து கைதட்டல் பெறுகிறார். 

 

பிரவீன் ராஜா, ரித்விகா, அசோக் செல்வனின் ஜோடியாக நடித்திருக்கும் ரியா, இளவரசு, அஞ்சு குரியன், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், அனுபமா என அனைவரும் கதாப்பாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, ரசிகர்கள் மனதில் நிற்கவும் செய்கிறார்கள்.

 

ரதனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் என்றாலும், பின்னணி இசை கதாப்பாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் கடத்துவதில் பெரும் பங்கு வகித்துள்ளது.

 

கதைக்கு ஏற்ப காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன்.கே, கதாப்பாத்திரங்களின் நடிப்பையும், அவர்களுடைய சிறு சிறு ரியாக்‌ஷன்களையும் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகம் மெனக்கெட்டிருக்கிறார்.

 

கதாப்பாத்திரங்களின் நடிப்பை போல், மணிகண்டனின் வசனமும் மிக இயல்பாக இருக்கிறது. நான்கு கதைகள் மூலம் இயக்குநர் சொல்ல நினைத்ததை தனது சுருக்கமான வசனம் மூலம் மிக அழுத்தமாக ரசிகர்கள் மனதில் மணிகண்டன் பதிய வைத்திருக்கிறார்.

 

படத்தில் வரும் நான்கு கதைகள், அதில் வரும் முக்கிய கதாப்பாத்திரங்கள் செய்யும் தவறு மற்றும் அந்த தவறை உணர்ந்து மனம் மாறுவது, இறுதியில் நான்கு கதைகளும் ஒரே புள்ளியில் இணைவது போன்றவற்றை நேர்த்தியான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கும் இயக்குநர் விஷால் வெங்கட், படத்தின் முதல் பாதியில் சற்று தடுமாறியிருக்கிறார். இதனால், முதல் பாதி படத்தில் மிகப்பெரிய தொய்வு ஏற்படுவதோடு, சில இடங்களில் ரசிகர்களை தூங்க வைத்து விடுகிறார்

 

ஆனால், கதாப்பாத்திரங்களின் மன மாற்றம் மற்றும் அபி ஹாசனின் கதை அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் ஆகியவை காட்சிகளை வேகமாக நகர்த்துவதோடு, படத்தோடு நம்மையும் ஒன்றிவிட செய்கிறது. குறிப்பாக அபி ஹாசனின் கதாப்பாத்திரமும், அவருடைய நடிப்பும் படம் பார்ப்பவர்ளை நிச்சயம் உற்சாகப்படுத்தும்.

 

எதிர்பாராமல் நடக்கும் சில விஷங்களை கடந்து போகாமல், அதை மிகப்பெரிய பிரச்சனையாக நினைப்பவர்கள், எந்த வேலையையும் சரியாக செய்யாமல் தனக்கு எதுவும் நடக்கவில்லை என்று புலம்புகிறவர்கள், தெரியாமல் நடக்கும் தவறை மறைப்பதற்காக தெரிந்தே பல தவறுகளை செய்பவர்கள், தன்னை சார்ந்தவர்களையும், அவர்களின் எண்ணங்களையும் புரிந்துக்கொள்ளாமல் இருப்பவர்கள், இவர்களுக்கான ஒரு நல்ல பாடமாக மட்டும் இன்றி, அதை ரசிக்க கூடிய நல்ல திரைப்படமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட்.

 

மொத்தத்தில், ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ அனைத்து மனிதர்களும் ரசிக்க கூடிய படம்.

 

ரேட்டிங் 3.5/5