’சில நொடிகளில்’ திரைப்பட விமர்சனம்
Casting : Richard Rishi, Punnagai Poo Gheetha, Yashika Aanand, Lydia Danistan
Directed By : Vinay Bharadwaj
Music By : Masala Coffee, Bjorn Surrao, Darshana KT, Stacatto & Rohit Matt
Produced By : Punnagai Poo Gheetha
மருத்துவரான ரிச்சர்ட் ரிஷி தனது மனைவி புன்னகை பூ கீதாவுடன் லண்டனில் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே மாடல் அழகியான யாஷிகா ஆனந்துடன் அவருக்கு கள்ள தொடர்பு ஏற்படுகிறது. இந்த சமயத்தில், ரிச்சர்ட் ரிஷியுடன் யாஷிகா ஆனந்த் இருக்கும் போது திடீரென்று இறந்து விடுகிறார். அவரது உடலை யாருக்கும் தெரியாமல் ரிச்சர்ட் ரிஷி புதைத்து விடுகிறார். ஆனால், யாஷிகாவின் தோழி இந்த உண்மையை தெரிந்துக்கொண்டு ரிச்சர்ட் ரிஷியை மிரட்டி பணம் பறிக்க முயற்சிக்கிறார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகும் ரிச்சர்ட் ரிஷி, நடந்த உண்மைகளை தனது மனைவியிடம் சொல்ல, அவர் என்ன செய்தார்?, ரிச்சர்ட் ரிஷியை மிரட்டும் பெண்ணுக்கு உண்மை தெரிந்தது எப்படி?, யாஷிகா ஆனந்த் இறந்தது எப்படி? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் கதை.
லண்டனில் வசிக்கும் மருத்துவர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கும் ரிச்சர்ட் ரிஷி, தனது வேடத்தை ஸ்டைலிஷாக கையாண்டிருக்கிறார். பயம், பதட்டம், குற்றவுணர்ச்சி, இயலாமை, காதல் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய பலமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.
ரிச்சர்ட் ரிஷியின் மனைவியாக நடித்திருக்கும் புன்னகை பூ கீதா, கணவர் பற்றி தெரிந்தாலும் கோபம் கொள்ளாமல் அதை சரியான முறையில் கையாண்டு அவருக்கு பாடம் புகட்டுவது புத்திசாலித்தனம். முதல் பாதியில் கணவனுடன் சண்டை, ஆட்டம் பாட்டம் என்று இருப்பவர், இரண்டாம் பாதியில் தனது இன்னொரு முகத்தை காட்டும் போது நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.
யாஷிகா ஆனந்த் மாடல் அழகி கதாபாத்திரத்திற்கு ஏற்ப கவர்ச்சியாக நடித்திருக்கிறார். உடலில் மட்டும் இன்றி தனது வார்த்தைகளிலும் கவர்ச்சியை வெளிப்படுத்தி, கள்ளக்காதலிக்கான வேடத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்.
ஹீரோவை பணம் கேட்டு மிரட்டும் இளம்பெண்ணின் வில்லத்தனம் படத்திற்கு கூடுதல் பலம். மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் மனதில் நிற்கவில்லை.
ஒளிப்பதிவாளர் அபிமன்யு சதானந்தன், லண்டன் அழகை பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆளே இல்லாத பகுதிகளின் அமைதி மற்றும் அழகை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர், லண்டன் நகரத்தின் குளிர்ச்சியை படம் பார்ப்பவர்களிடமும் கடத்தியிருக்கிறார்.
மசாலா காஃபி, பிஜோன் சுரரோ, தர்ஷன்.கே.டி, ஸ்டக்கட்டோ மற்றும் ரோகித் மேட் என ஐந்து இசையமைப்பாளர்கள் பணியாற்றியிருக்கிறார். ஐந்து பேரின் பாடல்களும் இனிமை. மது கூடத்தில் ஒலிக்கும் பாடலை கூட இனிமையான பாரதியார் பாடலாக பயன்படுத்தி மிரள வைத்திருக்கிறார்கள். பின்னணி இசையும் காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
லண்டனில் கதை நடந்தாலும் காட்சிகள் அனைத்தையும் மிக எளிமையாக கையாண்டிருக்கிறார் இயக்குநர் வினய் பரத்வாஜ். குறிப்பாக காலா ஈவெண்ட் என்று சொல்லக்கூடிய நிகழ்ச்சியை கூட ஒரு சிறு அறையில், சிலரை மட்டுமே வைத்துக்கொண்டு நடத்தியிருக்கிறார். அதேபோல், ஒரு வீட்டுக்குள் வைத்தே பெரும்பாலான காட்சிகளை படமாக்கியிருப்பவர், மூன்று கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு முழு திரைக்கதையையும் நகர்த்தியிருப்பது ஏதோ டாக்குமெண்டரி படம் பார்ப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.
கள்ளக்காதல் அதை தொடர்ந்து நடக்கும் ஒரு இறப்பு அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸாக நகர்த்தி செல்லும் இயக்குநர் வினய் பரத்வாஜ், இறுதியில் யூகிக்க முடியாத ஒரு திருப்பத்தை வைத்து கவனம் ஈர்ப்பதோடு, கள்ளக்காதலில் ஈடுபடும் கணவன்களுக்கு சவுக்கடி கொடுத்து படத்தை முடித்து பாராட்டு பெறுகிறார்.
மொத்தத்தில், ‘சில நிமிடங்களில்’ சில குறைகள் இருந்தாலும், நல்ல சிறுகதை படித்த அனுபவத்தை கொடுக்கிறது.
ரேட்டிங் 2.7/5