Dec 26, 2019 05:46 AM

‘சில்லுக் கருப்பட்டி’ விமர்சனம்

542af8925be6c260c6bef1a76b94586d.jpg

Casting : Samutirakani, Sunainaa, Manikandan, Nivedhithaa Sathish, Leela Samson, Sara Arjun, Kravmaga Sreeram, Rahul

Directed By : Halitha Shameem

Music By : Pradeep Kumar

Produced By : Venkatesh Velineni

 

ஆந்தலாஜி ஜானர் படங்கள் தமிழ் சினிமாவில் அறிதான ஒன்று, அப்படியும் வந்தாலும் திகில் படங்களாகவே வரும். ஆனால், இந்த ‘சில்லுக் கருப்பட்டி’ காதல் பேசும் ஆந்தலாஜி ஜானர் படமாக வெளியாகியிருப்பதோடு, காதல் என்பது அன்பு மட்டுமே என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.

 

சிறுவயது காதல், இளமை காதல், திருமணமான தம்பதிக்கு இடையே இருக்கும் காதல், வாழ்க்கையே முடிந்துப் போகும் சூழலில் உருவாகும் முதிர்ச்சி காதல், என்று வெவ்வேறு கதையாக இருந்தாலும், ஒவ்வொன்றும் ஒருவிதமான அனுபவத்தைக் கொடுக்கிறது.

 

குப்பை கிடங்கில் இருக்கும் பழைய பொருட்களை சேகரிக்கும் சிறுவன், குறிப்பிட்ட பிங்க் கலர் கவரில் இருக்கும் பொருட்களை சேகரித்து வர, அந்த கவரில் வைர மோதிரம் ஒன்று கிடைக்கிறது. நிச்சயம் இதை தெரியாமல் தவறவிட்டிருப்பார்கள் என்று நினைக்கும் அந்த சிறுவன், அந்த மோதிரத்தை உரியவரிடம் சேர்க்கும் முயற்சியில் இறங்க, தனது மனதுக்கு மிகவும் நெருக்கமான அந்த மோதிரத்தை தொலைத்துவிட்டு துயரப்படும் பணக்கார வீட்டு சிறுமி, மோதிரம் திரும்ப கிடைத்தவுடன், அதே பிங்க் கவரில் தனது அன்பை வெளிப்படுத்துகிறாள். இவர்களது இந்த தொடர்பு காதலா? என்று யோசிப்பதற்குள், அடுத்த கதை தொடங்குகிறது.

 

கைநிறைய சம்பளம், விரைவில் திருமணம் என்று சந்தோஷமான மனநிலையில் இருக்கும் இளைஞரான மணிகண்டனுக்கு ’விரை’யில் கேன்சர் வர, “கட்டி வந்தவனுக்கு எப்படி பொண்ணை கட்டிக்கொடுப்பாங்க” என்று கூறி மணப்பெண் நிராகரித்துவிடுகிறார். வாழ்க்கையே பறிபோய்விட்டது என்ற எண்ணத்தோடு மருத்துவமனைக்கு கால்டாக்ஸியில் மணிகண்டன் பயணிக்க, அதே கால்டாக்‌ஷியில் பயணியாக ஷேர் செய்யும் நிவேதிதா சதிஷ், மணிகண்டன் கேன்சரை எதிர்த்து போராடுவதற்கு ஊக்கம் அளிப்பதோடு, மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து படுத்திருக்கும் மணிகண்டன் அருகில் படுத்துக் கொண்டு அவரிடம் காதலை சொல்லி, அவரது வாழ்க்கையை பங்கிட்டு கொண்டு, காதலையும், காதலர்களையும் கெளரவப்படுத்துகிறார்.

 

Sillu Karuppatti Review

 

முதிர்ந்த வயதில் தனிமையில் இருக்கும் ஸ்ரீராம், உடல் பரிசோதனைக்காக மருத்துவனைக்கு செல்ல, தனது வயதுடைய, திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழும் லீலா சாம்சனை சந்திக்கிறார். இருவருக்கும் இடையிலான சில நாட்கள் நட்பு, இந்த வயதியில் தான் துணை என்பது அவசியம் என்பதை, எந்தவித நெருடல் இல்லாமல் நமக்கு புரிய வைக்கும் இயக்குநர், இந்த முதிர்ந்த காதலை கையாண்ட விதத்திற்காக அவருக்கு ஆயிரம் அப்ளாஷ் கொடுக்கலாம்.

 

நான்காவது கதையாக வரும் கதை தான் படத்தின் ஹைலைட் என்று சொல்லலாம். திருமணமான ஆணும், பெண்ணுக்குமான இந்த கதை நம்மை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைக்கிறது. கணவனுக்கான மனைவியாகவும், பிள்ளைகளுக்கான அம்மாவாகவும், கிட்டதட்ட ஒரு இயந்திரம் போல வாழும் சுனைனா, தனது கணவரிடம் இருந்து எதிர்ப்பார்க்கும் குறைந்தப்பட்ச அன்புக்காக ஏங்குகிறார்.

 

சின்ன சின்ன விஷயங்களை கூட பிறர் கவனிக்க, கூடவே இருக்கும் தனது கணவர் கவனிக்கவில்லையே, என்று நினைக்கும் சுனைனா ஒரு கட்டத்தில் கணவரிடம் சண்டைப்போட, அதற்கு பதிலடியாக சமுத்திரக்கனி, “உன் தலைமுடிய தான் தினமும், என் சாப்பாட்ல பார்க்குறேனே, பிறகு தனியா வேற பார்க்கனுமா” என்று கோபப்படும் போது ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பால் அதிர்கிறது. அதன் பிறகு, கணவன் - மனைவி இடையே நடக்கும் காரசார விவாதம், படம் பார்க்கும் ஆண்கள், தங்களது மனைவிகளைப் பற்றி யோசிக்க வைத்துவிடுகிறது. திருமணமாகி, குழந்தை பெற்றெடுத்த பிறகு, அவர்களுக்கான பொருளாதார தேவையை பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ஆண்கள், அவர்களுக்கான அன்பையும், நேரத்தையும் கொடுப்பதை எப்படி இழக்கிறார்கள், என்பதை இயக்குநர் கவிதையை போல சொல்லியிருக்கிறார்.

 

இந்த நான்கு கதைகளும், அதில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள், கதைகளை கையாண்ட விதம், என அனைத்துமே ரசிகர்களின் இதயங்களை தொட்டுவிடுகிறது. குறிப்பாக சமுத்திரக்கனி என்றாலே அட்வைஸ் செய்வார், என்ற இமேஜை உடைத்திருக்கும் இயக்குநர், சமுத்திரக்கனி மற்றும் சுனைனா இருவரையுமே வித்தியாசமான முறையில் கையாண்டிருக்கிறார். சமுத்திரக்கனி மற்றும் சுனைனாவின் சிறந்த நடிப்பு என்றால் இந்த படத்திற்கு தான் முதல் இடம்.

 

Sillu Karuppatti Review

 

குப்பை மேட்டில் பழைய பொருட்களை சேகரிக்கும் சிறுவன் ராகுல், அவரது நண்பர்கள் என்று சிறுவர்களின் நடிப்பு ரசிக்கும்படியாக இருந்தாலும், அந்த கதை நமக்கு வேறு ஒரு படத்தை நினைவு படுத்துவதோடு, சில இடங்களில் எதற்காக இந்த கதை, என்றும் யோசிக்க வைக்கிறது.

 

இளம் பருவ காதல் கதையில் வரும் மணிகண்டனும், நிவேதிதா சதிஷ் ஜோடியின் இயல்பான நடிப்பும், அவர்களது உரையாடல்களும் ரசிக்க வைக்கிறது. முதிர்ந்த வயது காதல் கதையில் நடித்திருக்கும் லீலா சாம்சன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோரது நடிப்பும் அப்ளாஷ் பெறுகிறது. இருந்தாலும், இறுதியில் ஸ்ரீராம், லீலா சாம்சனை தூக்கிச் செல்லும் காட்சி மட்டும் சினிமாத்தனமாக இருக்கிறது.

 

நான்கு கதைகளுக்கும் எந்த விதமான சம்மந்தம் இல்லை என்றாலும், நான்கு கதைகளின் கதாப்பாத்திரங்கள், ஒவ்வொரு கதையிலும் வந்து போவது, இயக்குநரின் டச்.

 

ஒவ்வொரு கதைக்கும் ஒரு ஒளிப்பதிவாளர் என்று, அபிநந்தன் ராமானுஜம், மனோஜ் பரமஹம்சா, விஜய் கார்த்திக் கண்ணன், யாமினி ஆகிய நான்கு ஒளிப்பதிவாளர்களின் பணியும், பிரதீப் குமாரின் பின்னணி இசையும் நான்கு கதைகளுடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது.

 

உலக சினிமா பாணியில் படம் இருந்தாலும், உள்ளூர் ரசிகர்களையும் ஈர்த்து விடும் விதமாக இந்த நான்கு கதைகளை கையாண்டிருக்கும் இயக்குநர் ஹலிதா சமீமுக்கு ஆயிரம் பொக்கே கொடுக்கலாம்.

 

சில இடங்களில் கதையின் ஓட்டம் குறைவாக இருப்பது மட்டும் சிறு குறையாக இருந்தாலும், கதைகளை நகர்த்திச் சென்ற விதம், அதில் இருக்கும் சுவாரஸ்யங்கள் அந்த குறையை மறைத்துவிடுகிறது.

 

மொத்தத்தில், இந்த வருடத்தின் சிறந்த படங்களின் பட்டியலில் இடம் பிடிப்பதற்கான தகுதியுள்ள படமாக உள்ள இந்த ‘சில்லுக் கருப்பட்டி’ ரசிகர்களுக்கு திகட்டாத சுவையை கொடுக்கும் என்பது உறுதி.

 

ரேட்டிங் 4/5