’சிங்கப்பூர் சலூன்’ திரைப்பட விமர்சனம்
Casting : RJ Balaji, Sathyaraj, Lal, Meenakshi Chaudhary, Kishen Das, Ann Sheetal, Thalaivasal Vijay, John Vijay, Robo Shankar, Y. G. Mahendran
Directed By : Gokul
Music By : Songs: Vivek–Mervin, Score: Javed Riaz
Produced By : Vels Films International - Ishari K. Ganesh
முடி வெட்டுவதை ஒரு தொழிலாக அல்லாமல் ஒரு கலையாக பார்க்கும் ஆர்ஜே பாலாஜி, சிறு வயதில் இருந்தே அத்தொழில் மீது ஆர்வம் கொள்கிறார். ஆனால், அவரது குடும்பத்தார் முடி வெட்டுவது குலத்தொழில், அது நமக்கு ஒத்துவராது, என்று முட்டுக்கட்டை போடுகிறார்கள். எந்த தொழிலாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்தால் பெரிய அளவில் முன்னேற்றம் அடையாளம் என்று நினைக்கும் ஆர்ஜே பாலாஜி, பெற்றோருக்காக பொறியியல் படிக்கிறார். படிக்கும் போது காதல் மலர்வதோடு, சிகை அலங்கார தொழில் மீது அவருக்கு இருந்த ஆர்வமும் வளர்கிறது. ஆனால், அவருக்கு இருக்கும் அந்த ஆர்வத்தினால் அவரது காதல் முறிந்துபோகிறது. காதல் போனாலும் தனது வேட்கை மீது தீவிரம் காட்டும் ஆர்ஜே பாலாஜி, முடி வெட்டும் தொழிலில் நம்பர் ஒன்னாக வர வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட, அங்கேயும் பல சிக்கல்கள் வருகிறது. அது என்ன?, அதில் இருந்து அவர் மீண்டு தான் நினைத்தது போல் அத்துறையில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வது தான் ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தின் கதை.
காமெடி வேடங்களில் நடித்துவிட்டு நாயகனாக நடிக்கும் நடிகர்கள் எப்படிப்பட்ட வேடங்களில் நடித்தாலும் அவர்களை ரசிகர்கள் காமெடி உணர்வோடு தான் பார்ப்பார்கள். அந்த இமேஜை உடைப்பதென்பது சாதாரணமானதல்ல. ஆனால், ஆர்ஜே பாலாஜி தனது ஒவ்வொரு படத்திலும் அத்தகைய இமேஜை உடைத்தெறிவதோடு, தான் எந்த கதாபாத்திரத்தில் நடித்தாலும், அந்த கதாபாத்திரமாகவே ரசிகர்கள் மனதில் பதிந்துவிடுவார். அந்த வகையில், முடி வெட்டும் தொழிலில் சாதிக்க வேண்டும் என்று விரும்பும் இளைஞராக அவர் ரசிகர்கள் மனதில் பதிந்து விடுவதோடு, எந்த இடத்திலும் தனக்கு காமெடி வரும் என்பதை காட்டிக்கொள்ளாமல், தான் ஏற்ற கதிரவன் என்ற கதாபாத்திரமாகவே பயணித்து தன்னால் எப்படிப்பட்ட வேடத்திலும் நடிக்க முடியும், என்று தன்னை ஒரு நடிகராக முன்னிறுத்தி இருக்கிறார்.
படத்தின் இரண்டாவது நாயகன் என்று சொல்லும் அளவுக்கு சத்யராஜின் கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. கதாநாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சத்யராஜ், என்னதான் வித்தியாசமான வேடங்களில் நடித்தாலும் அதில் சிலவற்றில் திடீரென்று தனது பழைய பாணியிலான நடிப்பை லேசாக வெளிப்படுத்தி விடுவார். ஆனால், இந்த வேடமும், அவரது நடிப்பும் புத்தம் புதிதாக இருப்பதோடு, ஒட்டு மொத்த திரையரங்கையே கட்டிப்போடும் விதத்தில் அமைந்திருக்கிறது. படத்தின் முதல் பாதி முழுவதையும் தன்வசப்படுத்திக் கொள்ளும் சத்யராஜ், தனது கட்டப்பா கதாபாத்திரத்தையே தோற்கடிக்கும் விதத்தில் நடிப்பில் மற்றொரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி, ஆர்ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ், கிராமத்தில் சலூன் கடை வைத்திருக்கும் லால், ஆர்ஜே பாலாஜியின் தந்தையாக நடித்திருக்கும் தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோடு பயணிப்பதோடு, ஒரு சில காட்சிகளில் வந்தாலும், அவர்களுடைய பங்கிற்கு சிரிக்கவோ அல்லது சிந்திக்கவோ வைத்துவிடுகிறார்கள்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் அரவிந்த்சாமியின் வருகை, ஆர்ஜே பாலாஜிக்கு மட்டும் இன்றி ரசிகர்களுக்கும் புதிய உற்சாகத்தை கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவாவின் சிறப்பு தோற்றமும் திரக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் கதைக்களத்தை மட்டும் இன்றி கதாபாத்திரங்களையும் அழகாக காட்டியிருக்கிறார்.
விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும்படி இருக்கிறது. ஜாவேத் ரியாஸின் பின்னணி இசை அளவு.
படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, சாதாரணமாக பயணிக்கும் ஒரு கதையை எதிர்பார்ப்புடன் பயணிக்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
சிங்கப்பூர் சலூன் மற்றும் அதை சுற்றியிருக்கும் குடிசைப் பகுதிகளை வடிவமைத்த கலை இயக்குநரின் பணியும், ஆர்ஜே பாலாஜிக்கு சிகை அலங்காரம் மற்றும் ஒப்பனை செய்தவரின் பணியும் நேர்த்தியாக இருக்கிறது.
காவல் துறை, மருத்துவத்துறை, பொறியியல் துறை, தொழில் துறை போன்றவற்றை களமாக கொண்ட படங்களை தான் நாம் அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், சிகை அலங்கார தொழிலை மையக்கருவாக கொண்டு ஒரு பிரமாண்டமான கமர்ஷியல் படம் என்பதே தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருக்கிறது. அதே சமயம், புத்திமதி சொல்கிறேன் என்று இல்லாமல், பார்வையாளர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதோடு, இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் விதத்திலும் படத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் கோகுல், தான் சொல்ல வந்ததை மிக எளிதாக மட்டும் இன்றி வலிமையாகவும் ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறார்.
முதல் பாதியில் சத்யராஜின் வேடத்தை வைத்துக்கொண்டு கலகலப்பாக காட்சிகளை நகர்த்தி செல்லும் இயக்குநர் இரண்டாம் பாதியை கொஞ்சம் சீரியஸாக பயணிக்க வைத்து வழக்கமான வட்டத்திற்குள் சிக்கிக்கொள்வது திரைக்கதையை சற்று தொய்வடைய செய்கிறது. ஆனால், ஆர்ஜே பாலாஜியின் நடிப்பு மற்றும் அவர் எதிர்கொள்ளும் எதிர்பார்க்காத பிரச்சனைகள் மூலம் மீண்டும் வேகம் எடுக்கும் திரைக்கதை, வழக்கமான வட்டத்தை உடைத்தெறிந்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றுவிடுகிறது.
இந்த தொழிலை இன்னார் தான் செய்ய வேண்டும், என்பதில்லை. யார் யாருக்கு எது பிடிக்கிறதோ அதை தாரளமாக செய்யலாம், இஷ்ட்டப்பட்டு செய்தால் எந்த துறையாக இருந்தாலும் அதில் பெரிய அளவில் முன்னேறலாம் என்ற கருத்தை திணிப்பது போல் அல்லாமல், கொண்டாடுவது போல் முழுக்க முழுக்க ஜாலியாக சொல்லியிருக்கும் இயக்குநர் கோகுல், தனது பாணியில் படத்தை நகைச்சுவையாக நகர்த்தி சென்றாலும், தான் சொல்ல வந்த கருத்தையும் அழுத்தமாக பதிவு செய்திருப்பது பாராட்டும்படி இருக்கிறது.
மொத்தத்தில், இந்த ‘சிங்கப்பூர் சலூன்’ சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு முன்னேற துடிப்பவர்களுக்கு பெரும் நம்பிக்கையும் கொடுக்கிறது.
ரேட்டிங் 4/5