Aug 06, 2022 07:04 AM

‘சீதா ராமம்’ திரைப்பட விமர்சனம்

585b48babeed4b0074dedfd1dc1a330b.jpg

Casting : Dulquer Salmaan, Mrunal Thakur, Rashmika Mandanna, Sumanth, Prakash Raj, Goutham Vasudev Menon

Directed By : Hanu Raghavapudi

Music By : Vishal Chandrasekhar

Produced By : Aswini Dutt

 

ராணுவ வீரரான நாயகன் துல்கர் சல்மான் மற்றும் அவரது குழுவினர், காஷ்மீரில் நடக்க இருந்த மதக்கலவரத்தை புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்துகிறார்கள். அதனால், அவர்கள் இந்தியா முழுவதும் பிரபலமடைய, அவர்களை வாணொலியில் பேட்டி எடுக்கிறார்கள். அப்போது அவர்கள் வாணொலி மூலம் தங்களது குடும்பத்தாரிடம் பேச, துல்கர் சல்மான் தனக்கு யாரும் இல்லை, தான் அனாதை என்று கூறுகிறார். இதனை கேட்டு பொதுமக்கள் பலர் அவருக்கு கடிதம் எழுதுகிறார்கள். 

 

அதில் அனுப்புனர் முகவரி இல்லாத ஒரு கடிதத்தில், உங்கள் மனைவி சீதா மகாலட்சுமி என்று குறிப்பிட்ட கடிதம் ஒன்று கிடைப்பதோடு, சீதா மகாலட்சுமி என்ற பெயரில் தொடர்ந்து வரும் அந்த கடிதத்தில் இடம்பெறும் காதல் வார்த்தைகளால் துல்கர் சல்மான் ஈர்க்கப்படுகிறார். கடிதம் மூலம் தன்னை கணவனாக்கிய சீதா மகாலட்சுமி யார்? என்று தேடி செல்லும் துல்கர் சல்மான் அவரை சந்தித்தாரா? இல்லையா? என்பதை  உருக வைக்கும் காதலோடு சொல்லியிருக்கிறார்கள்.

 

ராணுவ வீரராக கம்பீரமாக நடித்திருக்கும் துல்கர் சல்மான், காதல் காட்சிகளில் நம்மையும் உருகச் செய்துவிடுகிறார். காதல் காட்சிகளில் துல்கர் சல்மானைப் போல் யாராலும் நடிக்க முடியாது, என்று சொல்லும் அளவுக்கு காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கும் துல்கர் சல்மானுக்கு சீதா மகாலட்சுமி போல் பல பெண்கள் கடிதம் எழுதினாலும் ஆச்சரியம் இல்லை.

 

சீதா மகாலட்சுமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் மிருணாள் தாகூர் கொள்ளை அழகாக இருப்பதோடு, தனது கண்களினாலேயே நம்மை கொள்ளையடிக்கவும் செய்கிறார். அழகான முகத்தோடு, அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். 

 

ராம், சீதாவுக்காக எழுதிய கடைசி கடிதத்தை 20 வருடங்களுக்குப் பிறகு அவரிடம் கொண்டு சேர்க்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் ராஷ்மிகா, துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.

 

ராணுவ அதிகாரிகளாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், சுமந்த், ராஷ்மிகாவின் நண்பராக நடித்திருக்கும் தருண் பாஸ்கர், வெண்ணிலா கிஷோர் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர்கள் பி.எஸ்.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணன் காஷ்மீரின் அழகில் நம்மை மூழ்கடிப்பதோடு, கதாப்பாத்திரங்களையும் மிக அழகாக காட்டியிருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் லொக்கேஷன்களையும், பாடல் காட்சிகளையும் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, காதலர்களின் உணர்வுகளோடு, ராணுவ வீரர்களின் வலிகளையும் நம்முள் கடத்தியிருப்பது பாராட்டுக்குரியது.

 

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் உருக வைக்கிறது. திரும்ப திரும்ப கேட்க வைக்கும் பாடல்களோடு, பின்னணி இசையும் கதையோடு பயணிக்கிறது.

 

1964 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் நடக்கும் கதையில் கடிதத்தை மையக்கருவாக வைத்துக்கொண்டு காதல் ரசம் சொட்ட சொட்ட அமைத்திருக்கும் திரைக்கதையும், வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

 

படத்தின் பாடல்களோடு, வசனங்களையும் எழுதியிருக்கும் மதன் கார்கியின் ஒவ்வொரு வரிகளும் நம்முள் காதல் உணர்வுகளை தட்டி எழுப்பும் வகையில் இருக்கிறது. 

 

இயக்குநர் ஹனு ராகவபுடி, கடிதம் என்பதையே மறந்துபோன தற்போதைய காலக்கட்டத்தில் கடிதங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கும் விதமாக கதை எழுதியிருக்கிறார். அதிலும், கடிதங்களில் இடம்பெறும் காதல் வரிகள், செல்போன் மூலம் காதலிப்பவர்களை மீண்டும் கடிதங்கள் மூலம் காதலிக்க தூண்டும் வகையில் இருக்கிறது.

 

அற்புதமான காதல் கதையை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் மிக நாகரீகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஹனு ராகவபுடி, சீதா மகலாட்சுமி என்ற பெயர் படம் பார்ப்பவர்களின் இதயத்தில் இடம்பெற செய்வதோடு, ராம் என்ற கதாப்பாத்திரத்தின் தியாகத்தையும், காதலையும் கொண்டாடும் வகையில் அவர்களின் காதல் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

காதல் கதை என்றாலும் அதில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களையும், வலிகளையும் சொல்லியிருக்கும் இயக்குநர் சில எதிர்ப்பார்க்காத திருப்பங்கள் மூலம் வியக்கவும் வைத்திருக்கிறார். குறிப்பாக சீதா மகாலட்சுமி யார்? என்று தெரியும் போது நம் மனதில் அதிர்வு ஏற்படுகிறது.

 

நம்முள் இருக்கும் காதல் உணர்வுகளை தூண்டும் வகையில் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர், சில இடங்களில் மத உணர்வுகளை தூண்டும் வகையிலும் காட்சிகளை அமைத்திருக்கிறார். ராணுவ காட்சிகளை மிக எச்சரிக்கையோடு கையாண்டிருக்கும் இயக்குநர் ஹனு ராகவபுடி, மறைமுகமாக பல இடங்களில் இந்துத்துவா கொள்கையை வரவேற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஒரு விஷயத்தை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால், காதலர்கள் மட்டும் அல்ல சினிமா ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை கொண்டாடுவார்கள்.

 

மொத்தத்தில், ‘சீதா ராமம்’ உருக வைக்கும் காதல் காவியம்.

 

ரேட்டிங் 4/5