’ஸ்பாட்’ திரைப்பட விமர்சனம்
Casting : Gowsik, Agni Pawar, Nazar, Saravanan
Directed By : VRR
Music By : Vijay Shankar
Produced By : VRR
புதுமுக நடிகர்களுடன் நாசர், சரவணன் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் ‘ஸ்பாட்’ எப்படி என்பதை பார்ப்போம்.
ஹீரோ கெளசிக் தனது பிறந்தநாளுக்காக பப் ஒன்றில் நண்பர்களுக்கு விருந்து வைக்க, அதே பப்பில் தனது தோழிகளுடன் வரும் ஹீரோயின் அக்னி பவாரை சிலர் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் இருந்து அக்னி பவாரை காப்பாற்றும் கெளசிக், அவரை தனது காரில் ஏற்றிக் கொண்டு காப்பாற்ற, வில்லன்கள் அவரை விடாமல் துரத்துகிறார்கள்.
வில்லன் கோஷ்ட்டியினரின் இந்த வெறித்தனமான சேசிங்கில் இருந்து எப்படியாவது ஹீரோயினை காப்பாற்ற வேண்டும் என்ற முடிவில் தொடர்ந்து காரில் பயணிக்கும் கெளசிக், ஹீரோயினை துரத்துபவர்கள் யார், அவர்கள் எதற்காக அக்னியை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வதோடு, அவர்களிடம் இருந்து ஹீரோயினை காப்பாற்றியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வருபவர், அவர் மீது காதல் கொள்ள, ஹீரோ நினைத்ததை செய்து முடித்தாரா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஹீரோ மற்றும் வில்லன் குரூப்புக்கு இடையே நடக்கும் கார் சேசிங் பல தமிழ்ப் படங்களில் வந்திருந்தாலும், முழுக்க முழுக்க ஒரு கார் சேசிங்கையே முழுப்படமாக காட்டிய முதல் தமிழ்ப் படம் என்றால் அது இந்த ‘ஸ்பாட்’ தான்.
சென்னையில் இரவு நேரத்தில் ஆரம்பமாகும் கார் சேசிங், விடிந்த பிறகும் தொடர்ந்து நடைபெற்று தமிழகத்தை தாண்டி கர்நாடகாவில் தொடர்கிறது. அவ்வபோது ஹீரோயினின் சோக கதையை கேட்கும் ஹீரோ, அவருக்கு உதவி செய்ய நினைப்பதோடு, அவரிடம் காதலும் கொள்ள, இடையில் டூயட் பாடல், காதல் என்று படத்தை ரொமாண்டிக் ஆக்ஷன் ஜானரில் இயக்குநர் வி.ஆர்.ஆர் நகர்த்துகிறார்.
ஹீரோ கெளசிக் நடனம் மற்றும் சண்டைக்காட்சி இரண்டிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். நடிப்பு மற்றும் டயலாக் டெலிவரியிலும் எந்த குறையும் இல்லை. ஹீரோவுக்குண்டான அனைத்து அம்சங்களையும் பெற்றிருப்பவர், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன், என்ற பிடிவாதத்தை விட்டுவிட்டு நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்தால், நிச்சயம் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரலாம்.
படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருந்தாலும், அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இந்த குழுவினரை பாராட்டாலாம். ஆனால் ஒன்றை மட்டும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அது தான் படத்தின் ஹீரோயின். அக்னி பவார் என்ற பெண் தான் ஹீரோயின். இவரா ஹீரோயின்! என்று ஒட்டு மொத்த ரசிகர்களும் அதிர்ச்சியாகும் அளவுக்கு அம்மணி இருக்கிறார்.
நாசர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே தனது ரவுடித்தனத்தை காட்டும் ஹைடெக் ரவிடியாக தனது வேலையை கஞ்சிதமாக செய்திருக்கிறார். கடைசிக்கட்டத்தில் வரும் சரவணனின் வேடம் இரண்டாம் பாகத்தில் பெரிதாக காட்டுவார்கள் போல.
மோகன் ராஜின் ஒளிப்பதிவில் சேசிங் காட்சிகள் மிரட்டளாக உள்ளது. விஜய் சங்கர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் தான்.
குழுக்க முழுக்க சாலையில் நடக்கும் கார் சேசிங்கையே முழுப்படமாக எடுத்திருப்பது புதிய முயற்சி தான் என்றாலும், படம் முழுவதும் காரிலேயே பயணிப்பதும், வில்லன்கள் அருகில் வந்தும் கூட ஹீரோவையும், ஹீரோயினையும் பிடிக்காமல் தவறவிடும் காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருப்பதால் சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது.
இருந்தாலும், தான் சொல்ல வந்ததை இயக்குநர் வி.ஆர்.ஆர் நேர்த்தியாகவும், அதிரடியாகவும் சொல்லியிருக்கிறார். அதிலும் தேசிய நெடுஞ்சாலையில் எடுக்கப்பட்ட கார் சேசிங் காட்சிக்கு படக்குழுவினர் ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருப்பது காட்சியில் தெரிகிறது.
மொத்தத்தில், சிறிய பட்ஜெட்டில் ஒரு பெரிய ஆக்ஷன் படத்தை எடுக்க நினைத்த இந்த ‘ஸ்பாட்’ படக்குழு திரைக்கதை மற்றும் நடிகர்களிடம் வேலை வாங்கிய விதத்தில் சற்று கவனம் செலுத்தியிருந்தால், இன்னும் கொஞ்சம் பர்பெக்ட்டான படமாக அமைந்திருக்கும்.
மொத்தத்தில், ‘ஸ்பாட்’ வேகமாக இருந்தாலும், சுவாரஸ்யமாக இல்லை.
2.5/5