Apr 06, 2021 04:35 PM

’சுல்தான்’ விமர்சனம்

2ef1e6136073e47af29b9e9e227f8965.jpg

Casting : Karthi, Rashmika, Lal, Napoleon, Yogi Babu, Ramachandra Raju

Directed By : Bhagyaraj Kannan

Music By : Vivek - Mervin and Yuvan Shankar Raja

Produced By : Dream Warrior Pictures

 

ரவுடிகளின் அரவணைப்பில் வளர்ந்தாலும், அடிதடியை வெறுக்கும் கார்த்தி, தனது உடன் பிறப்புகளாக பார்க்கும் தனது அப்பாவின் அடியாட்களை திருத்தும் முயற்சியில் ஈடுபடுகிறார். அதே சமயம், கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து ஒரு கிராமத்தின் விவசாய நிலங்களையும், விவசாயிகளையும் காப்பாற்றுவதற்காக மிகப்பெரிய ரவுடி கும்பலுடன் கார்த்தி மோத வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. தனது ரவுடி அண்ணன்கள் மீண்டும் அடிதடியில் இறங்கிவிட கூடாது, என்று நினைக்கும் கார்த்தி, எதிரிகளிடம் இருந்து விவசாயிகளை எப்படி காப்பாற்றுகிறார், என்பதை மாஸாக சொல்லியிருப்பது தான் ‘சுல்தான்’ கதை.

 

கார்த்திக்கு 200 சதவீதம் பொருந்தும் கதாப்பாத்திரமாக இருக்கிறது சுல்தான் வேடம். மிகப்பெரிய ரவுடிகளின் கூட்டத்தில் வளர்ந்தாலும், அடிதடியை வெறுக்கும் கார்த்தி, ஒரு கட்டத்தில் அதிரடியாக சண்டைப்போடும் காட்சியில், கைதட்டலால் திரையரங்கே அதிர்ந்து போகிறது. எப்போதும் போல, அலட்டிக்கொள்ளாமல் இயல்பாக நடித்திருக்கும் கார்த்தி, யோகி பாபுவின் அத்தை மகள் அழகில் மயங்கி, அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகள் கலகலப்பு.

 

துள்ளல் நடிப்பில் ரசிகர்களை ஈர்க்கும் ராஷ்மிகாவுக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருப்பவர், சும்மா நின்னாலே அவரை ரசிக்கிறார்கள்.

 

Sulthan Review

 

யோகி பாபுவின் காமெடி காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும், அவர் ராஷ்மிகாவை பெண் பார்க்க செல்லும் காட்சி செம காமெடி கலாட்டாவாக இருக்கிறது.

 

கார்த்தியின் அப்பாவாக நடித்திருக்கும் நெப்போலியன், நெப்போலியனின் அடியாளாக வரும் லால், வில்லனாக நடித்திருக்கும் ராமச்சந்திர ராஜு ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களாக இருப்பதோடு, அளவாகவும் நடித்திருக்கிறார்கள்.

 

இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் பாடல்கள் தாளம் போட வைக்கிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

 

மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதை, ஒவ்வொரு காட்சியிலும் நிரூபித்திருக்கும் ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன், இரவு நேரக் காட்சிகளிலும், சண்டைக்காட்சிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கிறார்.

 

மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளம் இருந்தாலும், படம் வேகமாக நகரும்படி நேர்த்தியாக ரூபன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

 

கமர்ஷியல் படம் என்றாலும், சமூக பிரச்சனைகள் பற்றியும் அளவாக பேசியிருக்கும் இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், எந்த இடத்திலும் சலிப்பு ஏற்படாத வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக அமைத்திருப்பது படத்தின் மிகப்பெரிய பலம்.

 

அடிதடி, வெட்டு குத்து என்று முழுமையான ஆக்‌ஷன் படமாக இருந்தாலும், அனைத்தையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர், காட்சிகளை நாகரீகமாக அமைத்திருப்பதோடு, அனைத்து தரப்பினருக்குமான ஒரு படமாக இருக்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார்.

 

மாஸான ஆக்‌ஷன் காட்சிகள், கலகலப்பான காமெடி காட்சிகள், ஈர்ப்பான காதல் காட்சிகள், செண்டிமெண்டான குடும்ப காட்சிகள் என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஒரு ஜாலியான, நேரம் போவதே தெரியாத ஒரு படத்தை பார்க்க வேண்டும் என்றால், நிச்சயமாக அதற்கு சரியான தேர்வாக ‘சுல்தான்’ இருக்கும்.

 

சுல்தான் - மாஸ்

 

ரேட்டிங் 4/5