‘சூப்பர் டூப்பர்’ விமர்சனம்
Casting : Dhruva, Indhuja, Shah Ra
Directed By : Arun Karthik
Music By : Divakara Thiyagarajan
Produced By : Shalini Vasan
ஃபிளக்ஸ் பிலிம்ஸ் (Flux Films) சார்பில் ஷாலினி வாசன் தயாரிப்பில், ஏகே இயக்கத்தில், துருவா, இந்துஜா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சூப்பர் டூப்பர்’ எப்படி என்று பார்ப்போம்.
சிறு சிறு தவறுகள் செய்யும் ஹீரோ துருவாவும், அவரது மாமா ஷாராவும், இந்துஜாவை கடத்தி அவரது தந்தையிடம் பணம் பறிக்க பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் பணம் வாங்க போகும் போது இந்துஜாவின் அப்பா கொலை செய்யப்படுகிறார். இதற்கிடையே, இந்துஜா மீது காதல் கொள்ளும் துருவா, காதலிக்காக அவரது அப்பாவை கொலை செய்தவர்கள் யார்? என்பதை கண்டறிய களத்தில் இறங்க, மறுபுறம் இந்துஜாவும் தந்தையை கொலை செய்தவர்களை பழிவாங்க நினைக்கிறார். அப்போது ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும், அதன் மூலம் ஏற்படும் பிரச்சினைகளையும் காமெடியாக சொல்வது தான் ‘சூப்பர் டூப்பர்’ படத்தின் கதை.
ஆக்ஷன், நடனம், நடிப்பு என அனைத்திலும் சுறுசுறுப்பாக இருக்கும் துருவா, தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருப்பதோடு, ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருப்பதை நிரூபித்திருக்கிறார். அப்படியே நடனத்திலும் சற்று கவனம் செலுத்தினால், கோலிவுட் ஹீரோ தேர்வில் வெற்றி பெற்றுவிடுவார்.
இந்துஜாவுக்கு நடிக்க கூடிய கதாபாத்திரம். அதை சிறப்பாகவே கையாண்டிருப்பவர், கண்களினாலேயே பாதி நடிப்பை வெளிப்படுத்திவிடுகிறார். கூடவே குத்து பாட்டுக்கு அஜால்...குஜால்...ஆட்டம் போட்டு ரசிகர்களை கிரங்கடிக்கிறார்.
காமெடி ஏரியாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஷாரா, பல இடங்களில் சிரிக்க வைப்பதோடு, சில இடங்களில் சீரியஸாகவும் நடித்திருக்கிறார். வில்லன்களாக நடித்திருக்கும் ஆதித்யா, ஸ்ரீனி இருவரும் கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருப்பதோடு, மிரட்டலான வில்லன்களாகவும் வலம் வருகிறார்கள்.
திவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் படு சுமார் ரகம் என்றாலும், பின்னணி இசை திரைக்கதையோடு ஒட்டி உறவாடி படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. தளபதி ரத்தினம் மற்றும் சுந்தர் ராம் ஆகியோரது ஒளிப்பதிவு, ஒரு பக்கம் கலர்புல்லாகவும், மறுபக்கம் ஆக்ஷன் மூடோடவும் காட்சிகளை நகர்த்தியிருக்கிறது. படத்தொகுப்பாளர் முகன்வேலுவின் உழைப்பு அனைத்து காட்சிகளிலும் தெரிகிறது.
அறிமுக இயக்குநர் ஏ.கே தான் எடுத்தக்கொண்ட கதை சாதாரணமானதாக இருந்தாலும், திரைக்கதை மற்றும் கதை சொல்லுவதில் வித்தியாசத்தை கையாண்டிருக்கிறார். அது சில இடங்கள் ஒர்க்-அவுட் ஆனாலும், பல இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், கதையில் வரும் திடீர் திருப்பம் சர்ப்பிரைஸாகவும், படத்திற்கு பலமாகவும் அமைந்திருக்கிறது.
காமிக்ஸ் ஸ்டைலில் காட்சிகளை விவரிக்கும் விதம் சற்று புதுசாகவும், ரசிக்கும்படியும் இருப்பதோடு, புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பும், திடீர் திருப்பங்களும் எளிதில் நாம் படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.
மொத்தத்தில், விறுவிறுப்பும் வேகமும் நிறைந்ததாக இருக்கிறது இந்த ‘சூப்பர் டூப்பர்’.
ரேட்டிங் 3/5