’சுழல் 2’ இணையத் தொடர் விமர்சனம்

Casting : Kathir, Aishwarya Rajesh, Lal, Saravanan, Manjima Mohan, Kayal Chandran, Gouri Kishan, Samyuktha Vishwanathan, Monisha Blessy, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Rini, Kalaivani Bhaskar, Chandini Tamilarasan, Ashwini Nambiar
Directed By : Bramma and Sarjun KM
Music By : Sam C.S
Produced By : Wallwatcher Films - Pushkar and Gayatri
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லால், அவரது கடற்கரை வீட்டில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக வரும் சப்-இன்ஸ்பெக்டர் கதிர், காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து விசாரணையை தொடங்குகிறார். அப்போது லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கெளரி கிஷன் இருக்கிறார். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டாலும், அவரிடம் இருந்து எந்தவித தகவலையும் பெற முடியாததோடு,
கொலை செய்துவிட்டு அலமாரியில் ஒளிந்துக் கொண்டாலும், வெளியே எப்படி தாழிட முடியும், என்பதாலும் கதிர் மற்றும் சரவணன் தலைமையிலான போலீஸ் குழு குழப்பமடைகிறது.
இந்த நிலையில், மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாக 7 இளம் பெண்கள் சரணடைவதோடு, அவர்கள் அனைவரும் கொலை குறித்து ஒரே மாதிரியான விசயத்தை சொல்கிறார்கள். கெளரி கிஷனுடன் சேர்த்து மொத்தம் 8 பெண்கள் ஒரு கொலை வழக்கில் சரணடைந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்கொருவர் எந்தவித தொடர்பும் இல்லாததும், அவர்களின் பின்னணி குறித்த எந்தவித தகவல்களும் கிடைக்காததும், போலீஸுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இந்த கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் கதிர், அதை எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதை சுவாரஸ்யமாகவும், பிரமாண்டமாகவும் சொல்வதே ‘சுழல் 2’.
சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து ‘சுழல்’ இணையத் தொடரை பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கொடுத்த புஷ்கர் & காயத்ரி குழுவினர், ‘சுழல் 2’-வை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக சொல்லியிருந்தாலும், வித்தியாசமான கதைக்களத்தோடு, அதே சமயம் உலகளாவிய பிரச்சனையை மையமாக வைத்துக்கொண்டு சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் பிரமாண்டமான காட்சி அமைப்புகள் மூலம் தொடரின் 8 எப்பிசோட்களையும் தொய்வின்றி நகர்த்திச் செல்கின்றனர்.
முதல் பாகத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த தனது சித்தப்பாவை கொலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த பாகத்தில் சிறையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், சிறையில் இருந்தவாரே அவரது கதாபாத்திரத்தை கதையோடு பயணிக்க வைத்திருப்பது, போலீஸ் இன்ஸ்பெக்டராக எதார்த்தமாக வரும் சரவணனின் எதிர்பார்க்காத திருப்பம், கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் லால் குறித்த வெவ்வேறு பார்வைகள் மற்றும் அதோடு பயணிக்கும் திருப்பங்கள், லாலின் மகன், மனைவி, கார் ஓட்டுநர் ஆகியோருடன் கொலை வழக்கில் சரணடையும் 8 இளம் பெண்கள், சிறைச்சாலையில் கைதியாக இருக்கும் சரோஜா என தொடரில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும், அதில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகளும் திரைக்கதைக்கு உயிரோட்டமாக பயணித்திருக்கிறார்கள்.
புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரது கதை மற்றும் திரைக்கதை பல திருப்பங்களுடன் பயணித்தாலும், தொடரில் பேசப்பட்டிருக்கும் சமூக பிரச்சனையை பார்வையாளர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிய வைத்திருக்கிறது. குறிப்பாக கதாபாத்திர வடிவமைப்புகள் தொடரின் மிகப்பெரிய பலம். மஞ்சுமா மோகன் மற்றும் அவரது காதல் கணவர் கயல் சந்திரன் ஆகியோரது கதாபாத்திர வடிவமைப்பு, நாட்டில் நடக்கும் தவறுகளின் பின்னணியில் சாதாரண தொழிலாளிகளும் இருப்பார்கள், என்பதை மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப், தயாரிப்பாளர் செய்த செலவுகளை திரையில் மிகப்பெரிய அளவில் காண்பித்திருக்கிறார். திருவிழாவின் போது நடக்கும் கதை என்பதால், தொடரின் பெரும்பாலான காட்சிகள் மக்கள் கூட்டம் நிறைந்தவையாகவே இருக்கிறது. உண்மையான திருவிழாவா? அல்லது படப்பிடிப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வா?, என்பதை கண்டுபிடிக்க முடியாதவாறு ஒளிப்பதிவாளர் பணியாற்றியிருக்கிறார். அவரது மெனக்கெடல் அனைத்தும், அனைத்து காட்சிகளையும் பிரமாண்டமாக காட்டி பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறது.
சத்தம் அதிகமாக கேட்டபோதே பின்னணி இசை சாம்.சி.எஸ், தான் என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது. அரக்கணை காளிகள் வேட்டையாடும் போது சத்தம் வரவேண்டியது தான், அதற்காக அநேக இடங்களில் ஒரே சத்தமாக இருந்தால் எப்படி?. பாடல்களில் எந்தவித குறையும் சொல்ல முடியாத அளவுக்கு பணியாற்றியிருக்கும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், பின்னணி இசையின் போது சத்தத்தை சற்று குறைத்துக் கொண்டால் நல்லது.
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்க வேண்டும், அதன் கதைக்களத்தில் முதல் பாகத்தின் கருப்பொருள் இருக்க வேண்டும், ஆனால், முதல் பாகத்தின் சாயல் இல்லாமல், அதே சமயம் பலவித கதாபாத்திரங்கள் மற்றும் திருப்பங்களுடன் பயணிக்கும் தொடர் பார்வையாளர்களுக்கு எந்தவித குழப்பமும் இன்றி புரிய வேண்டும், என்று பல சவால்களுடன் பணியாற்றியிருக்கும் படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின், அனைத்து சவால்களையும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு சாதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
புஷ்கர் மற்றும் காயத்ரி கதை, திரைக்கதைக்கு காட்சிகளை வடிவமைத்து பிரம்மா மற்றும் சர்ஜுன்.கே.எம் இயக்கியிருக்கிறார்கள். இருவரும் கதை மற்றும் திரைக்கதை ஆசிரியர்களின் எண்ணம் அறிந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
பிரம்மா மற்றும் சர்ஜுன்.கே.எம் இருவரும் தங்களுக்கு என்று தனி பாணியை வைத்திருந்தாலும், இதில் அதை வெளிக்காட்டாமல் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரின் வழியில் பயணித்து, அனைத்து தரப்பினரும் பார்க்ககூடிய விதத்தில் நேர்மையான படைப்பாக கொடுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், ‘சுழல் 2’ பார்ப்பவர்களை சூப்பர்...என்று சொல்ல வைக்கும்.
ரேட்டிங் 4/5