’ஸ்வீட் ஹார்ட்’ திரைப்பட விமர்சனம்

Casting : Rio Raj, Gopika Ramesh, Arunachaleswaran PA, Fouzee
Directed By : Swineeth S.Sukumar
Music By : Yuvan Shankar Raja
Produced By : YSR Films - Yuvan Shankar Raja
சிறு வயதில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் திருமணம், குழந்தை உள்ளிட்ட குடும்ப உறவுகளின் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார் நாயகன் ரியோ ராஜ். ஆனால், அவரது காதலி கோபி ரமேஷ் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுகிறார்கள். பிரிவுக்குப் பிறகு கோபி ரமேஷ் கர்ப்பமடைந்திருப்பதை தெரிந்து கொள்ளும் ரியோ ராஜ், கருவை கலைத்துவிடும்படி சொல்கிறார். குழந்தை பெற்று கொண்டு ரியோ ராஜுடன் சேர்ந்து வாழ விரும்பும் கோபிகா ரமேஷ், தனது விருப்பத்தை வெளிக்காட்டாமல், ரியோ ராஜின் முடிவுக்கு சம்மதம் தெரிவிக்க, நாயகன் காதலி வயிற்றில் வளரும் கருவை கலைத்தாரா? அல்லது அதன் மூலம் மனம் மாறினாரா ? என்பதை காதல், காமெடி என கலப்படமாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘ஸ்வீட் ஹார்ட்’.
எப்படியாவது காதல் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் ரியோ ராஜ் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், அதற்கான சரியான கதைக்களம் அவருக்கு அமையவில்லை. காதலி உடனான நெருக்கம், மோதல் என நடிப்பில் குறையில்லை என்றாலும், காதலியுடனான கெமிஸ்ட்ரி எடுபடாமல் போவதால் ரியோ ராஜும் எடுபடாமல் போகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் கோபிகா ரமேஷ், தனக்கென்று தனி விருப்பம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் காதலனின் மனநிலையை புரிந்துகொண்டு சூழல்களை எதிர்கொள்ளும் பெண்களை பிரதிபலிக்கும் வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
அருணாச்சலேஸ்வரன், பெளசி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அவர் அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சில பாடல்கள் மனதை வருடுவது போல் இருந்தாலும், சில பாடல்கள் ஏனோ தானோ என்று பயணித்திருக்கிறது. பின்னணி இசை சுமார்.
ஒளிப்பதிவாளர் பாலாஜி சுப்ரமணியம், நாயகன், நாயகிக்கு அதிகமான க்ளோஷப்களை வைத்திருக்கிறார். அதிலும், நாயகன் ரியோ ராஜுக்கு தேவையில்லாத குளோஷப்களை வைத்து அவரை குறையாக காட்டியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
சாதாரண திரைக்கதை மற்றும் காட்சியமைப்பாக இருந்தாலும், அதை ரசிகர்களிடம் வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்கான நான்லீனர் முறையை கையில் எடுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தமிழரசன், ரசிகர்கள் குழப்பமடையாத வகையில் காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஸ்வினீத் எஸ்.சுகுமார், காதல் மூலம் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை பேச முயற்சித்திருக்கிறார். நாயகன், நாயகி இடையிலான காதல் கெமிஸ்ட்ரி தான் படத்தின் முக்கிய அம்சம் என்றாலும், அது படத்தில் எடுபடாமல் போனது படத்தின் மிகப்பெரிய பலவீனம்.
காதலன், காதலி இடையிலான பிரிவுவையும், அதன் வலியையும் சொல்ல வரும் கதையை, கருக்கலைப்புக்கு முக்கியத்துவம் தரும்படியான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் தடம் மாறச்செய்வதுடன், படத்துடன் ரசிகர்களை ஒட்டவிடாமல் செய்கிறது.
சில இடங்களில் சில காட்சிகள் நகைச்சுவையாக இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது படத்தில் பேசப்பட்டிருக்கும் காதலில் எந்தவொரு பாதிப்பும் இல்லை.
மொத்தத்தில், ‘ஸ்வீட் ஹார்ட்’ இதயத்துடன் ஒட்டவில்லை.
ரேட்டிங் 2.5/5