’தமிழ்க்குடிமகன்’ திரைப்பட விமர்சனம்
Casting : Cheran, Lal, Sripriyanka, Vela Ramamurthy, SA Chandrasekar, Aruldoss, Ravi Mariya, Deepshika, Dhuruva, Mayilsamy
Directed By : Esakki Karvannan
Music By : Sam C.S
Produced By : Lakshmi Creations
தொழிலை வைத்து சாதி பிரிக்கும் இச்சமூகத்தில் அந்த சாதியோடு வாழ்வதால் சில குறிப்பிட்ட சமூகத்தினர் எப்படிப்பட்ட துன்பங்களை சந்திக்க நேரிகிறது, அதில் இருந்து அவர்கள் விடுபட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்ற தீர்வை சொல்வது தான் ‘தமிழ்க்குடிமகன்’ படத்தின் கதை.
சலவைத்தொழில் மற்றும் மயானத்தில் உடல்களை அடக்கம் செய்யும் தொழிலை செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சேரன், அத்தொழிலையும், அத்தொழில் செய்பவர்களையும் ஊர் மக்கள் இழிவாகப் பார்ப்பதால் அப்படிப்பட்ட தொழிலே தனக்கு தேவையில்லை என்று முடிவு செய்து, வேறு ஒரு தொழிலில் இறங்குகிறார். ஆனால், எந்த நிலைக்கு போனாலும் சரி, எப்படி மாறினாலும் சரி, இன்னார் இந்த தொழிலை தான் செய்ய வேண்டும் என்ற மனநிலையோடு ஊர் மக்கள் சேரனுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுக்கிறார்கள். அவற்றை சமாளித்து தனது நிலையை மாற்றியே தீருவேன் என்ற போராட்ட குணத்தோடு சேரன் பயணிக்கிறார்.
இதற்கிடையே ஊர் பெரியவர் இறந்துவிட, அவரது உடலை அடக்கம் செய்ய சேரனை அழைக்கிறார்கள். அவர், இனி அந்த தொழிலை நான் செய்யப்போவதில்லை என்று மறுக்கிறார். தங்களை மீறி சேரன் இயங்குவதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். அப்போது, இந்த விவகாரத்தில் சட்டம் தலையிட, பிரச்சனை நீதிமன்றத்திற்குப் போகிறது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் சேரன் பிரச்சனைக்கு மட்டும் ஒன்றி ஒட்டு மொத்தமாக சாதி பாகுபாட்டினால் சிக்கி தவிக்கும் மக்களின் நிலை மாறுவதற்கான தீர்வு ஒன்றை கொடுக்கிறது, அது தான் ‘தமிழ்க்குடிமகன்’.
நாயகனாக நடித்திருக்கும் சேரனின் பாவப்பட்ட முகம் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, அவருடைய பக்குவப்பட்ட நடிப்பு கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஆனால், அனைத்து காட்சிகளிலும் அவர் ஒரே மாதிரியாக இருப்பது தான் ரசிகர்களுக்கு சோகத்தை கொடுக்கிறது. அதிலும், கோபத்தை கூட மிக அமைதியாகவும், மரியாதையாகவும் அவர் வெளிப்படுத்துவது ஏன் என்று தான் தெரியவில்லை.
ஆதிக்க சாதியைச் சேர்ந்தவராக நடித்திருக்கும் லால், தனது அனுபவமான நடிப்பு மூலம் கவனம் ஈர்க்கிறார். “போலீஸும் அவங்களுக்கு தான், சட்டமும் அவங்களுக்கு தான் என்றால் நாம யாரு” என்று அவர் கேட்கும் கேள்வியின் ஆழத்தை அவர் நடிப்பு மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறார்.
சேரனின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா, தங்கையாக நடித்திருக்கும் தீபிக்ஷா, வேல ராமமூர்த்தி, அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர், ரவி மரியா, துருவா, சுரேஷ் காமாட்சி, மு.ராமசாமி, மயில்சாமி என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் கேமரா காட்சிகளை மட்டும் இன்றி மனித உணர்வுகளையும் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறது.
சாம் சிஎஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதையோடு பயணித்திருக்கிறது.
படத்தில் காட்சிகளை விட கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் தான் அதிகம் என்பதால், அனைத்தையும் அளவாக தொகுத்திருப்பதோடு, கதையின் போக்கு மாறாமல் நேர்த்தியாக படத்தொகுப்பு செய்திருக்கிறார் சுதர்ஷன்.
பட்டியலின சமூகத்தினருக்கு ஆதரவான படம் என்று சொல்வதை விட அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும், வலிகளையும் சொல்லும் விதமாக படத்தின் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இந்த நிலை மாற வேண்டுமானால் ஒட்டு மொத்தமாக சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார். அது எப்படி முடியும்? என்ற கேள்விக்கும் அவர் விடை சொல்வதோடு, இதை அரசு நினைத்தால் மட்டுமே செய்ய முடியும் என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
இந்த கருத்தை ஏற்கனவே பலர் பலவிதத்தில் சொல்லியிருந்தாலும், இதில் ஆண்ட பரம்பரை, பட்டியலின மக்களுக்கு நிலம் கொடுத்தது, சோரு போட்டது போன்ற விஷயங்களை பற்றி இயக்குநர் இசக்கி கார்வண்ணன் பேசியிருப்பதோடு, வரலாற்று பதிவுகளோடு அந்த பேச்சுகளுக்கு பதிலடி கொடுத்திருப்பது கவனம் ஈர்க்கிறது.
சாதி, குலத்தொயில், சாதியில் இருக்கும் உட்பிரிவுகள் போன்றவற்றை நீதிமன்ற காட்சியில் விரிவாக பேசியிருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், இட ஒதுக்கீடு என்பது பட்டியலின மக்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து சாதிகளுக்குமே இருக்கிறது, ஆனால் அவர்களுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு கிடைப்பது போல் இந்த சமூகம் பேசுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் வசனம் எழுதியிருக்கிறார். அதே சமயம், ஆதிக்க சாதியினர் என்று சொல்பவர்களையும் மிக மரியாதையாகவும், வீரமாகவும் காட்டி இரண்டு தரப்புக்கும் இது ஆதரவான படம் தான் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
”நான் பெரியவனா?, நீ பெரியவனா? என்ற போட்டி அல்லது சாதி அரசியல் கட்சிகளை பற்றி பேசுவது என்று தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்த்திருக்கும் இயக்குநர் இசக்கி கார்வண்ணன், சாதியை காரணம் காட்டியோ அல்லது ஒருவர் செய்யும் தொழிலை காரணம் காட்டியோ அவரை இழிவாகப் பார்க்க கூடாது, அப்படிப்பட்ட நிலை தற்போதும் ஏதாவது ஒரு இடத்தில் நடக்கிறது, அந்த நிலை மாற வேண்டும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘தமிழ்க்குடிமகன்’ இன்னும் மாறாமல் இருக்கும் மக்களை மாற்றுவதற்கான மற்றொரு முயற்சி.
ரேட்டிங் 3.5/5