‘டெடி’ விமர்சனம்
Casting : Arya, Sayyeshaa, Magizh Thirumeni, Sathish, Karunakaran
Directed By : Shakthi Soundar Rajan
Music By : D.Imman
Produced By : K.E.Gnanavel Raja & Aadhana Gnanavel Raja
இயல்பான மனிதர்களை விட அதிகமான சக்தி கொண்டவராக இருக்கும் ஆர்யா, எந்த ஒரு விஷயத்தையும் விரைவாக கற்றுக் கொள்ளக்கூடியவராகவும், அதிகமான ஞாபக சக்தி படைத்தவராகவும் இருக்கிறார். அப்படிப்பட்டவரை தேடி பேசும் கரடி பொம்மை ஒன்று வர, அந்த கரடி பொம்மையின் பின்னணியில் மிகப்பெரிய பிரச்சனையும் இருக்கிறது. அது என்ன பிரச்சனை, அதை ஆர்யா எப்படி தீர்த்து வைத்தார், என்பது தான் படத்தின் கதை.
வழக்கமான தனது நடிப்பை ஓரம் கட்டி வைத்துவிட்டு கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை கச்சிதமாக கொடுத்திருக்கும் ஆர்யா, ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
படத்தின் கதாநாயகி சாயிஷாவுக்கு பெரிய வேலை கொடுக்காமல் திரைக்கதைக்கு ஏற்ப அவரை பயன்படுத்தியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருந்தாலும், ஆர்யாவுடன் அவருக்கு ஒரு டூயட் பாடல் கூட வைக்காதது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது.
நடிப்பில் வில்லத்தனத்தை வெளிக்காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், தனது கம்பீரமான குரலின் மூலம் கவனிக்கும் வில்லனாக வலம் வருகிறார் இயக்குநர் மகிழ்திருமேனி.
கருணாகரன், சதிஷ் ஆகியோரது நகைச்சுவை காட்சிகளை விட கரடி பொம்மை செய்யும் காமெடி ரசிக்கவும், சிரிக்கவும் வைக்கிறது. கரடி பொம்மைக்கு குரல் கொடுத்திருக்கும் இ.பி.கோகுலனின் குரலும், கரடி பொம்மை கதாப்பாத்திரமும் சிறுவர்களை மட்டும் இன்றி பெரியவர்களையும் ஈர்த்து விடுகிறது.
அஜர்பைஜான் நாட்டை அழகாக காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் எஸ்.யுவா, ஆக்ஷன் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருப்பதோடு, கரடி பொம்மை கதாப்பாத்திரத்தை ரசிகர்கள் ரசிக்கும்படி படமாக்கியிருக்கிறார்.
வழக்கமான பாணியை தவிர்த்து இசையில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் டி.இமானின் பின்னணி இசையும், பாடல்களும் பலம்.
உலகளவில் நடக்கும் குற்றத்தை ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், சிறுவர்களை கவரும் விதமாக கரடி பொம்மையை கையாண்ட விதம் ரசிக்க வைக்கிறது. அதிலும், பேசும் கரடி பொம்மையின் பின்னணியை அனைவரும் புரிந்துக்கொள்ளும்படி அவர் சொல்லியிருப்பது நேர்த்தி.
சினிமா ரசிகர்களுக்கான ஆக்ஷன் திரில்லர், சிறுவர்களுக்கான கரடி பொம்மையின் சுட்டித்தனம், ஆகிய கமர்ஷியல் விஷயங்களோடு, உலகளவில் நடக்கும் குற்றம் மற்றும் அதீத திறன் கொண்ட கதாப்பாத்திரம், ஆகிய புதிய யோசனைகளை புகுத்தி இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் அமைத்திருக்கும் திரைக்கதை படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது.
’டெடி’ ஈர்ப்பு
ரேட்டிங் 3.5/5