Apr 03, 2025 02:46 AM

’தரைப்படை’ திரைப்பட விமர்சனம்

a3dc53abe1252511a5a2583c1b74d5e0.jpg

Casting : Prajin, Vijay Vishwa, Jeeva Thangavel

Directed By : Ramprabha

Music By : Manojkumar Babu

Produced By : Stonex - PB Velmurugan

 

அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் ரூ.1000 கோடியை மோசடி செய்யும் கும்பல், அந்த பணத்தை தங்கம் மற்றும் வைரங்களாக மாற்றிக் கொள்கிறது. அந்த கும்பலின் தலைவரை கொலை செய்துவிட்டு அந்த தங்கத்தையும், வைரங்களையும் பிரஜன் கொள்ளையடிக்கிறார். அவரிடம் இருந்து அதை கொள்ளையடிக்க விஜய் விஷ்வா முயற்சிக்கிறார். மறுபக்கம், மோசடி கும்பலால் பாதிக்கப்பட்ட தனது குடும்பத்தை தேடும் ஜீவாவும், தங்கம் மற்றும் வைரங்களை கைப்பற்ற முயற்சிக்கிறார்.

 

இந்த மூவரின் வாழ்க்கையில் பயணிக்கும் ரூ.1000 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரங்களால் யார் யார்க்கு எத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது?, இவர்களின் பின்னணி என்ன?, இறுதியில் யார் இந்த தங்கம் மற்றும் வைரங்களை கைப்பற்றியது? என்பதை அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளுடன் சொல்வதே ‘தரைப்படை’.

 

பாடல் காட்சியை தவிர்த்து படம் முழுவதும் ஒரே உடையில் உலா வரும் பிரஜன், “கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு...” என்ற பாடலை நினைவுப்படுத்தும் வகையில் உடை மட்டும் இன்றி சிகரெட்டை கூட கருப்பு வண்ணத்தில் பயன்படுத்தியிருக்கிறார். 

 

மும்பையில் இருந்து வந்து தனது குடும்பத்தை தேடும் லொள்ளு சபா ஜீவா, பாட்ஷா ரஜினி போல் கோட் சூட் அணிந்துக் கொண்டு அடியாட்களுடன் வலம் வருவதோடு, நடப்பது, நிற்பது, உட்கார்வது, பேசுவது, சிகரெட் புகைப்பது என அனைத்திலும் ரஜினிகாந்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

 

அப்பாவியான முகத்தை வைத்துக் கொண்டு தீபாவளிக்கு வெடிக்கும் துப்பாக்கி போல எதிர்ப்பவர்களை எல்லாம் சர்வசாதாரணமாக சுட்டுத் தள்ளும் விஜய் விஷ்வாவும் தனது வில்லத்தனத்தால் மிரட்ட முயற்சித்திருக்கிறார்.

 

இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கும் பிரஜன், ஜீவா, விஜய் விஷ்வா ஆகியோர் நடிப்பதை காட்டிலும் சிகரெட் புகைப்பதற்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள்.  சில இடங்களில் கொஞ்சம் நடிக்கவும் முயற்சித்திருக்கிறார்கள்.

 

படம் முழுவதும் சேஸிங் மற்றும் சண்டைக்காட்சிகள் நிரம்பி வழிந்தாலும், அனைத்தையும் ஒரே மாதிரியாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ்குமார் சுந்தரம். 

 

இசையமைப்பாளர் மனோஜ்குமார் பாபுவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

 

சண்டைப்பயிற்சியாளர் மிரட்டல் செல்வாவுக்கு தனது திறமை நிரூபிக்க மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார். திரைக்கதை முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தும், அதை உணர்வுப்பூர்வமாக ரசிகர்களிடத்தில் கடத்தாமல், மசாலத்தனமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். 

 

படம் முழுவதும் சுட்டுத் தள்ளும் காட்சிகள் இருப்பதால் என்னவோ, படத்தொகுப்பாளர் ராம்நாத் எந்தவித இரக்கமும் காட்டாமல் காட்சிகளை வெட்டித் தள்ளி படத்தை 2 மணி நேரத்திற்குள் முடித்து பார்வையாளர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறார்.

 

எழுதி இயக்கியிருக்கும் ராம்பிரபா, கமர்ஷியல் ஆக்‌ஷன் கதையை பல்வேறு திருப்பங்களுடன் கூடிய திரைக்கதை மூலம் வேகமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்.

 

கதையின் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மூவரில் யார் வில்லன்?, யார் ஹீரோ? என்று யூகிக்க முடியாதபடி கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ராம்பிரபா, அவர்களுக்கு இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டத்தை கையாண்ட விதம் மற்றும் தங்கம் மற்றும் வைரங்கள் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் கைமாறுவது ஆகியவற்றின் மூலம் படத்தை சுவாரஸ்யமாக மட்டும் இன்றி பொழுதுபோக்காகவும் நகர்த்தி செல்கிறார். 

 

பட்ஜெட் காரணமாக மேக்கிங்கில் சில குறைபாடுகள் இருந்தாலும், தங்கம் மற்றும் வைரங்கள் இறுதியில் யாரிடம் சென்றடைந்தது? என்பதை எதிர்பார்க்காத திருப்பம் மூலம் சொன்னது மற்றும் அதற்கான காரணம் ஆகியவற்றை குறைகளை மறந்து படத்தை பாராட்டும்படி சொல்லி பார்வையாளர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராம்பிரபா.

 

மொத்தத்தில், இந்த ‘தரைப்படை’ வெற்றிப்படையாகும்.

 

ரேட்டிங் 3/5