’தாத்தா’ குறும்பட விமர்சனம்
Casting : Janagaraj, E.Revathi, Rishi, Gnana Shyam, Monish, Kayal Devaraj, Deepa, Murugan Manthiram, Royal Prabhakar
Directed By : Naresh
Music By : Amina Rafiq and Santhosh
Produced By : Impress Films - Kavitha.S
பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு பெற்றோரிடம் பழகுவதில் அவ்வளவாக ஈடுபாடு காட்டமாட்டார்கள். ஆனால், எப்போதுமே தங்களது குழந்தைகளாகவே பார்க்கும் பெற்றோர்கள் அவர்களுடன் பகுகுவதற்காக ஏக்கத்தோடு இருப்பார்கள். அப்படிப்பட்ட பெரியவர்களின் ஏக்கத்தை போக்குவது அவர்களின் பேரக்குழந்தைகள் தான். பேரக்குழந்தைகள் வழியாக தங்களது பிள்ளைகளை பார்க்கும் தாத்தா - பாட்டிகள், எப்படி தங்களது பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக வாழ்ந்தார்களோ அதேபோல் தங்களது பேரக்குழந்தைகளின் மகிழ்ச்சியில் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். அப்படி ஒரு தாத்தா - பேரன் இடையிலான உணர்வை வெளிப்படுத்தும் குறும்படம் தான் ‘தாத்தா’.
தாத்தா ஜனகராஜ் தனது மனைவியுடன் தனியே வசித்து வருகிறார். தனிக்குடித்தனம் செய்து வரும் அவரது மகன் தனது மகன் சரணைக் கொண்டு வந்து விட்டுச் செல்கிறார். தாத்தா பாட்டி அரவணைப்பில் இருக்கும் பேரனுக்கு அந்த வீடு போரடிக்கவே பக்கத்து வீட்டிற்கு விளையாடச் செல்கிறான். பக்கத்து வீட்டுச் சிறுவன் அஜய் ஒரு ரிமோட் காரை சரணிடம் காட்டுகிறான், அது தனது பிறந்தநாளில் தனது தந்தையின் பரிசளிப்பு என்கிறான். அதைப் பார்த்தது முதல் சரணுக்குள் ஏக்கம் பொங்க ஆரம்பிக்கிறது. முகம் வாடி அமர்ந்திருக்கும் அவனிடம் பாட்டி விசாரிக்கும் போது அந்த ரிமோட் கார் ஆசையைக் கூறுகிறான், தாத்தாவும் தன் பேரனுக்கு அந்தக் காரை வாங்கிக் கொடுக்க விரும்புகிறார்.
அந்த காரை வாங்க கடைக்கு செல்லும் ஜனகராஜ், அதன் விலை ரூ.800-என்று தெரிய வருகிறது. தனது சக்திக்கு மீறிய தொகை என்றாலும் எப்படியாவது பேரனுக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்பதற்காக கடன் வாங்க முயற்சிக்கிறார். அது நடக்காமல் போக, தனது இளமைக் காலத்தில் சைக்கிள் பந்தயத்தில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த சைக்கிளை விற்க முடிவு செய்கிறார். தனது வாழ்க்கையுடன் பயணிக்கும் உயிரற்ற பந்தமான அந்த சைக்கிளை விற்று தனது பேரன் ஆசைப்பட்ட பொம்மை காரை ஜகராஜ் பேரனுக்கு வாங்கி கொடுக்கிறார். ஆசைப்பட்ட பொருள் கைக்கு வந்ததும், உலகத்தையே புரட்டிப்போட்டது போன்ற மகிழ்ச்சியடையும் பேரன், தனது தாத்தாவை பெருமையாக பார்க்கிறார். பேரனின் முகத்தில் மகிழ்ச்சியையும், புன்னகையையும் பார்க்கும் தாத்தா, பேரனை விட கூடுதல் மகிழ்ச்சியடைவதை தனது முகத்தில் சிறு புன்னகையோடு வெளிப்படுத்தினாலும், மனதில் அவரது மகிழ்ச்சி எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்கிறது இந்த குறும்படம்.
அதிவேகமாக பயணிக்கும் தற்போதைய தொழில்நுட்ப உலகத்தில், முந்தைய தலைமுறைகளின் தியாகங்களை தற்போதைய தலைமுறையினர் யோசித்துக் கூட பார்ப்பதில்லை. அப்படிப்பட்ட நிலையில், குடும்ப உறவுகள் பற்றி உணர்வுப்பூர்வமான படைப்பாக வெளியாகியிருக்கும் இந்த குறும்படம் பல நெகிழ்ச்சியான காட்சிகள் மூலம் உண்மையான மகிழ்ச்சி என்றால் எது? என்பதை அழகாக சொல்லியிருக்கிறது.
தாத்தா வேடத்தில் மூத்த நடிகர் ஜனகராஜ் நடித்திருக்கிறார். அவரது ஒவ்வொரு அசைவிலும் ஏழை தாத்தாவை பார்க்க முடிகிறது. காமெடி நடிகராக பல படங்களில் நம்மை சிரிக்க வைத்தவர், இதில், தாத்தாவாக கலங்க வைக்கிறார், புன்னகைக்க வைக்கிறார், நெகிழ வைக்கிறார். மொத்தத்தில் கோலிவுட்டுக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் கிடைத்துவிட்டார் என்பதை நிரூபித்துவிட்டார்.
ஜனகராஜின் மனைவியாக நடித்திருக்கும் ஏ.ரேவதி பாசம் காட்டும் பாட்டியாக நடிப்பில் மிளிர்கிறார்.
பேரன் சரணாக வரும் சிறுவன் ஞானஷ்யாமும் இயல்பாக நடித்திருக்கிறார்.
ஜனகராஜின் மகனாக நடித்திருக்கும் ரிஷி, பெற்றோர்களிடம் நின்று கூட பேச முடியாமல் வேகமாக பயணிக்கும் சமகால இளைஞர்களை பிரதிபலிக்கும் வேடத்தில் சில காட்சிகளில் வந்தாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்.
ஜனகராஜுடன் பணியாற்றும் வாட்ச்மேனாக முருகன் மந்திரம், பழைய பொருட்கள் வாங்கும் 'காயலான் ' கடைக்காரராக யோகி தேவராஜ், பொம்மைக் கடைக்காரராக ராயல் பிரபாகர் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, தங்களது பணியை செவ்வன செய்து கவனம் ஈர்க்கிறார்கள்.
இயற்கை ஒளியில் காட்சிகளை படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் வினோத் ராஜ், கதாபாத்திரங்களின் உணர்வுகளை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் அமினா ராஃபிக் மற்றும் சந்தோஷ் ஆகியோரின் பின்னணி இசை மனிதர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் கதைக்கு உயிரோட்டம் அளித்திருக்கிறது.
கலை இயக்குநர் வீரசமரின் பணி, கதாபாத்திரங்களின் நடிப்பு போல் காட்சிகள் நடக்கும் பகுதிகளையும் எந்தவித அரிதாரமும் இன்றி இயல்பாக காட்டியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் நாஷின் படத்தொகுப்பு கதையையோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கிறது.
எளிமையான வசனங்கள் கதையின் இயல்பு கெடாமல் காட்சிகளை நகர்த்தி செல்வதோடு, எதார்த்தமான மனிதர்களின் வாழ்வியலை மிக இயல்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் நரேஷின் கதை சொல்லல் திறன் வெளிப்படுகிறது. ஒரு குறும்படத்தை இவ்வளவு உணர்வுப்பூர்வமாக இயக்கியிருக்கும் நரேஷ், தனது பெரும்படத்தின் மூலம் நிச்சயம் மக்கள் மனதில் இடம் பிடிப்பார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
தள்ளாடும் வயதிலும், தங்களது பேரக்குழந்தைகளுடன் துள்ளியாட முயற்சிக்கும் தாத்தாக்களின் மனவலி நிறைந்த பல கதைகள் இருப்பதையும், இளைய தலைமுறைகள் மூத்த தலைமுறைகளின் தியாகங்களை புரிந்துக்கொண்டு அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் உரக்க சொல்லும் விதமாக வெளியாகியிருக்கும் இந்த ‘தாத்தா’ குறும்படங்கள் வரிசையில் முக்கிய இடத்தை பிடிக்கும்.