‘தி டோர்’ திரைப்பட விமர்சனம்

Casting : Bhavana, Ganesh Venkatraman, Jayaprakash, Sriranjani, Nandha Kumar, Giris, Pandy Ravi, Sangeetha, Sindhoory, Priya Venkat, Ramesh Arumugam, Kapil, Byri Vinu, Roshini, Sithik, Vinolaya
Directed By : Jaiiddev
Music By : Varun Unni
Produced By : June Dreams Studios LLP - Naveen Rajan
கட்டிடக்கலை நிபுணரான பாவனா, வடிவமைக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிட பணிக்காக பழமையான சிறு கோவில் ஒன்று இடிக்கப்படுகிறது. கோவில் இடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் பாவனாவின் தந்தை விபத்து ஒன்றில் சிக்கி மரணமடைகிறார். இதனால், சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தன் பணியை பாவனா தொடங்கும் போது, அவரை சுற்றி சில அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது. தனது நண்பர்களின் உதவியுடன் தன்னை பின் தொடரும் அமானுஷ்யத்தின் பின்னணி குறித்து பாவனா அறிந்து கொள்ள முயற்சிக்கும் போது, அவர் சந்திக்கும் நபர்கள் இறந்து போகிறார்கள். அவர்களின் இறப்புக்கும், பாவனாவுக்கு என்ன சம்மந்தம்?, அவரை பின் தொடரும் அமானுஷ்யத்தின் பின்னணி என்ன? என்பதை திகிலாக மட்டும் இன்றி கிரைம் திரில்லர் பாணியிலும் சொல்வதே ‘தி டோர்’.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு ரீ எண்ட்ரி கொடுத்திருக்கும் பாவனா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்திருக்கிறார். தன்னை சுற்றி நடக்கும் மர்ம சம்பவங்களின் முடிச்சுகளை அவிழ்ப்பதற்காக முயற்சிக்கும் பாவனாவின் பயணத்தில் திகில் குறைவாக இருந்தாலும், எதிர்பாராத திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்கிறது.
போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமனுக்கு வழக்கமான வேலை தான் என்பதால் அதை எந்தவித குறையும் இன்றி செய்திருக்கிறார்.
ஜெயப்பிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, நந்தகுமார், கிரிஷ், பாண்டி ரவி, சங்கீதா, சிந்தூரி, பிரியா வெங்கட், ரமேஷ் ஆறுமுகம், கபில், பைரி வினு, ரோஷினி, சித்திக், வினோலியா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கெளதம்.ஜி, பாவனாவை அழகாக காட்டியிருப்பதோடு, கொடைக்கானல் காட்சிகளை கவனம் ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். படம் முழுவதுமே பளிச்சென்று இருப்பது படத்தின் தரத்தை வெளிக்காட்டினாலும், திகில் காட்சிகளில் எந்தவித பயத்தையும் ரசிகர்களிடத்தில் கடத்தாதது ஒளிப்பதிவின் சிறு குறையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் வருண் உன்னியின் பின்னணி இசை சில காட்சிகள் மூலம் திகிலடைய செய்தாலும், பல இடங்களில் அதிகப்படியான சத்தம் மூலம் காதை கிழிக்கவும் செய்திருக்கிறது.
ஆரம்பத்தில் திகில் படமாக தொடங்கினாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கிரைம் திரில்லராக பயணிக்கும் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் செல்லும் வகையில் படத்தொகுப்பாளர் அதுல் விஜய் காட்சிகளை நேர்த்தியாக தொகுத்திருக்கிறார்.
எழுதி இயக்கியிருக்கும் ஜெய்தேவ், வழக்கமான பாணியிலான திகில் கதையாக ஆரம்பித்தாலும், அதில் திகில் உணர்வுகளை குறைத்துவிட்டு, கிரைம் நாவல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
பாவனா தேடும் ராம் யார்? என்ற எதிர்பார்ப்பு, அந்த தேடல் பயணத்தில் ஏற்படும் திருப்பங்கள் மற்றும் மர்ம மரணங்களும், அதன் பின்னணி என்னவாக இருக்கும்? என்ற எதிர்பார்ப்பும் பார்வையாளர்களை படத்துடன் ஒன்றிவிட செய்கிறது.
திகில் மற்றும் கிரைம் திரில்லர் இரண்டையும் ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்தாலும், அவற்றை இலகுவான முறையில் நகர்த்தி ரசிகர்களுக்கு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெய்தேவ்.
மொத்தத்தில், ‘தி டோர்’ பயம் குறைவு, சுவாரஸ்யம் அதிகம்.
ரேட்டிங் 3.5/5