’தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ திரைப்பட விமர்சனம்
Casting : Prithviraj Sukuamarn, Amala Paul, Jimmy Jean Louis, K.R. Gokul, Talib al Balushi, RikA
Directed By : Blessy Ipe Thomas
Music By : A.R.Rahman
Produced By : Visual Romance
எப்படியாவது அரபு நாட்டுக்கு சென்று கொஞ்சமாக பணம் சம்பாதித்து வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையில், வளமான தனது கிராமம் மற்றும் கர்ப்பமாக இருக்கும் மனைவியை விட்டுவிட்டு சவுதிக்கு செல்கிறார் நாயகன் பிருத்விராஜ். சவுதியில் இறங்கியதும் தன்னை அழைத்துச் செல்ல வேண்டிய ஏஜெண்ட் வராததால், தவறான ஏஜெண்ட் உடன் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணியில் அமர்த்தப்படுகிறார்.
புரியாத மொழி, எதிர்பார்க்காத வேலை என்று தடுமாறும் பிரித்விராஜ், சில நாட்கள் கழித்தே தான் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் அடிமையாக்கப்பட்டதை அறிந்துக்கொள்கிறார். பிறகு அந்த வேலைக்கு தன்னை பழக்கப்படுத்திக் கொள்பவர் திடீரென்று ஒரு நாள் தனது முகத்தை கண்ணாடியில் பார்த்து பதறிப்போகிறார். தான் இங்கே வந்து பல வருடங்கள் ஆனதை உணர்பவர் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி தோல்வியில் முடிய, இது தான் தனது வாழ்க்கை என்று முடிவு செய்துக்கொண்டு வாழ்பவருக்கு மீண்டும் தப்பிப்பதற்காக ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது. இந்த முறை எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்ற முடிவில் பாலைவனத்தை கடக்க முயற்சிக்கிறார். மரணத்தோடு போரடிக்கொண்டு பாலைவனத்தில் பயணப்படும் பிரித்விராஜ், தப்பித்தாரா? இல்லையா? என்பதை ஒரு மனிதனின் வாழ்க்கை போராட்டமாக சொல்வதே ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’.
நாயகனாக நடித்திருக்கும் பிரித்விராஜின் கடுமையான உழைப்பு அவரது உடலிலும், நடிப்பிலும் தெரிகிறது. வாட்டசாட்டமான உடலமைப்போடு அறிமுகம் ஆகிறவர், பாலைவன வாழ்க்கைக்குப் பிறகு ஒட்டிய வயிறு, எலும்புகள் தெரியும் உடலமைப்பு என கதாபாத்திரத்தின் மாற்றங்களுக்காக தன்னை கடுமையாக வறுத்திக்கொண்டிருக்கிறார். உடலில் மட்டும் இன்றி குரலிலும் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப மாற்றத்தை வெளிப்படுத்தியிருப்பவர், பல இடங்களில் தனது சிறு சிறு அசைவுகளின் மூலமாகவே அடிமையாக பல இன்னல்களை அனுபவித்த நஜீமின் வாழ்க்கையை நம்முள் எளிதில் கடத்திவிடுகிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அமலா பால் திரையில் தோன்றியிருக்கிறார். அழகிலும், நடிப்பிலும் மிளிரும் அமலா பாலின் காட்சிகள் குறைவாக இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கிறது.
பிரித்விராஜ் உடன் சவுதிக்கு சென்று பாலைவனத்தில் கஷ்ட்டப்படும் கே.ஆர்.கோகுல், பிரித்விராஜை காப்பாற்ற முயற்சிக்கும் ஆப்பிரிக்க அடிமையாக நடித்திருக்கும் ஜிம்மி ஜூன் லூயிஸ், ஆட்டு மந்தையின் முதலாளியாக நடித்திருக்கும் அரபு நாட்டுக்காரர் என படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கதையோட்டத்திற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள்.
சுமார் மூன்று மணி நேரம் படம் என்றாலும் அதில் பெரும்பாலும் பாலைவன காட்சிகள் தான், அதை மிக சிறப்பாகவே காட்சிப்படுத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் சுனில்.கே.எஸ், பாலைவனத்தின் வெப்பத்தையும், அங்கு மறைந்திருக்கும் ஆபத்துகளையும் மிக நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.
ஏர்.ஆர்.ரஹ்மானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. வசனம் இல்லாத காட்சிகள் அதிகம் என்றாலும் தனது பின்னணி இசை மூலம் அந்த காட்சிகளுக்கும், அதில் பிரித்விராஜ் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுக்கும் உயிர் கொடுத்திருக்கிறார்.
இப்படியும் ஒரு வாழ்க்கையா! என்று அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்சிகளை தொகுத்திருந்தாலும், இதை இவ்வளவு நீளமாக கட்ட வேண்டுமா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் மனதில் எழ வைக்கிறார் படத்தொகுப்பாலர் ஸ்ரீகர் பிரசாத்.
நாவலை படமாக்குவது என்பது மிக சவாலான விசயம், அதிலும் நிஜத்தில் ஒரு மனிதன் அனுபவித்த இப்படிப்பட்ட வாழ்க்கையை, காட்சிகளாக சித்தரிக்கும் போது அவை ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த வேலையை இந்த படம் செய்ததா? என்றால் இல்லை என்பது தான் படம் பார்ப்பவர்களின் பதிலாக இருக்கும்.
பிரித்விராஜ் அரபு நாட்டுக்கு செல்வது முதல், அங்கு அவர் பாலைவனத்தில் அடிமையாக கஷ்ட்டப்படுவது, பிறகு தப்பிப்பதற்கான முயற்சியில் அவர் மரணத்தோடு போராடுவது, இறுதியில் அனைத்து கட்டங்களையும் தாண்டியும், அவரால் அங்கிருந்து தப்பிக்க முடியுமா? போன்றவை படத்தை எதிர்பார்ப்புடன் பார்க்க வைத்தாலும், உணர்வுப்பூர்வமாக பார்வையாளர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
பிரித்விராஜின் வாழ்க்கை போராட்டம், மக்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் விதத்தில் அமைந்திருப்பதோடு, பிரித்விராஜின் கடுமையான உழைப்பு, தொழில்நுட்ப ரீதியாக காட்சிகளை கையாண்ட விதம் போன்றவற்றின் மூலம் ஒரு திரைப்படமாக ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கும் இயக்குநர் பிளஸ்ஸி, நரகமான நஜீப்பின் வாழ்க்கையை ரசிகர்களிடத்தில் கடத்த தவறியிருக்கிறார்.
மொத்தத்தில், இந்த ‘தி கோட் லைஃப் - ஆடுஜீவிதம்’ நடிகர் பிரித்விராஜின் சினிமா பயணித்தின் மைல்கல்.
ரேட்டிங் 3.5/5