’தி வாரியர்’ விமர்சனம்
Casting : Ram Pothineni, Aadhi Pinisetty, Krithi Shetty, Akshara Gowda, Nadhiya
Directed By : N. Lingusamy
Music By : Devi Sri Prasad
Produced By : Srinivasa Chitturi
சென்னையில் மருத்துவம் படிக்கும் நாயகன் ராம் பொத்தினேனி மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்ற செல்கிறார். அங்கு மதுரையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி ஆதியின் அராஜகத்தை பார்த்து அதிர்ந்து போகும் ராம், ஆதியின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். ஆனால், ஆதி அவரை பொது இடத்தில் வைத்து அடித்து தொங்க விடுகிறார். உயிருக்கு போராடும் நிலையில் அங்கிருந்து தப்பித்து செல்லும் ராம் பொத்தினேனி, மீண்டும் மதுரை வந்து ஆதியின் அராஜகத்தை அடக்கினாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை.
தெலுங்கு சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி இளம் நாயகனாக ராம் பொத்தினேனிக்கு தமிழ் சினிமாவில் இது தான் முதல் படம் என்றாலும், தமிழ் ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில் நடித்திருக்கிறார். மருத்துவர் கதாப்பாத்திரத்தில் இளசுகளை கவரும் விதத்தில் இருக்கும் ராம் பொத்தினேனி, போலீஸ் கெட்டப்பில் அதிரடி காட்டியிருக்கிறார். மருத்துவர் மற்றும் காவல்துறை அதிகாரி என இரண்டு கெட்டப்புகளிலும் வித்தியாசத்தை காட்டியிருப்பவர், நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டி அசத்தியிருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி அழகாக இருப்பதோடு, அழகாகவும் நடித்திருக்கிறார், நடனத்திலும் அசரடிக்கிறார். அவர் அடிக்கும் விசில் இளசுகளின் நெஞ்சங்களில் அதிவர்வலையை ஏற்படுத்துகிறது.
வில்லனாக நடித்திருக்கும் ஆதியின் கெட்டப்பில் இருக்கும் மிரட்டல், அவரது வில்லத்தனத்தில் இல்லாமல் போனது ஏமாற்றம். ஹீரோவாக நடிக்கும் ஆதி வில்லனாக நடிக்கும் போது ஏற்படும் எதிர்ப்பார்ப்பை அவரது கதாப்பாத்திரம் பூர்த்தி செய்யவில்லை. அப்படி அவரது கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால் ஆதி நிச்சயம் தனது வில்லத்தனத்தின் மூலம் ரசிகர்களை மிரள வைத்திருப்பார்.
நதியா, அக்ஷரா கெளடா, ஜெயப்பிரகாஷ், ஒரு காட்சியில் வரும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் துள்ளல் ரகமாகவும், இனிமையாகவும் இருக்கிறது. பின்னணி இசையும் கதைக்களத்திற்கு ஏற்ப அளவாக இருக்கிறது.
சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு காதல் காட்சிகளை கலர்புல்லாகவும், ஆக்ஷன் காட்சிகளை ஆக்ரோஷமாகவும் காட்டியிருக்கிறது.
மக்களுக்கு சேவை செய்வதற்காக மருத்துவரான ஒரு இளைஞர், அதே மக்களின் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க காவல்துறை அதிகாரியாகிறார், என்ற மையக்கரு புதிதாக இருந்தாலும், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் அதற பழசாக இருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
கலர்புல்லான காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மூலம் சில இடங்களை ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் லிங்குசாமி, முழு படத்தையும் தனது வழக்கமான ஃபார்முலாவோடு பயணிக்க வைத்திருப்பது சலிப்படைய செய்கிறது. அதிலும், கதை மதுரையில் நடப்பது போல் வைத்துவிட்டு, துளி கூட மதுரையை காட்டாதது படத்துடன் ஒன்றவிடாமல் செய்கிறது.
மொத்தத்தில், ‘தி வாரியர்’ இயக்குநர் லிங்குசாமிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், மீண்டும் அவர் தன்னை நிரூபிப்பார் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுக்கிறது.
ரேட்டிங் 2.75/5