’தீனி’ விமர்சனம்
Casting : Ashok Selvan, Nazar, Rithu Varma, Nithya Menon,
Directed By : Ani IV.Sasi
Music By : Rajesh Murugesan
Produced By : PVSN Prasad
அசோக் செல்வன், ரித்து வர்மா, நாசர் ஆகியோர் வாழ்க்கையில் ஏற்பட்ட எதிர்பாரத சம்பவத்தால் மன ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள். வெவ்வேறு பிரச்சனைகளோடு இருக்கமான மனநிலையுடன் வாழும் இவர்களை ஒன்று சேர்க்கும், இவர்களுக்கு பிடித்தமான சமையல் கலை, இவர்களுடைய வாழ்விலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த மாற்றம் என்ன, இவர்களுடைய பிரச்சனை என்ன, என்பதை காதல், நட்பு, அப்பா-மகள் பாசம் ஆகிய உணர்வுகளோடு விவரிப்பது தான் படத்தின் கதை.
அதிகரித்த உடல் எடை, பரட்டை தலை முடி, அடர்த்தியான தாடி மற்றும் ஒருவித தசைப்பிடிப்பு பிரச்சனையோடு வலம் வரும் அசோக் செல்வனின், கதாப்பாத்திர அமைப்பும், அதில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பும், படத்தின் துவக்கத்திலேயே படத்தோடு நம்மை பயணிக்க செய்துவிடுகிறது. இளம் வயதில் சிறு சிறு எக்ஸ்பிரஷன்கள் மூலம் காதல் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தும் அசோக் செல்வன், சமையல் கலைஞராக விசித்திரமான செயல்கள் மூலம் நடிப்பில் அசத்துகிறார்.
ஒரு நடிகர் கதாப்பாத்திரமாக மாற மேக்கப்பை விட, நடிப்பு தான் முக்கியம், என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் நிரூபிக்கும் நாசர், இந்த படத்திலும் அவ்வாரே நடித்திருக்கிறார். வசனங்கள் மிக மிக குறைவாக பேசியிருந்தாலும், தனது ஒவ்வொரு அசைவிலும் பல விஷயங்களை நம்மிடம் கடத்துகிறார்.
அழகிலும், நடிப்பிலும் எளிமையோடு வலம் வரும் ரித்து வர்மாவும், துள்ளல் நடிப்பை அளவாக கொடுத்திருக்கும் நித்யா மேனனும் மனம் கவர்கிறார்கள்.
நான்கு கதாப்பாத்திரங்களை மட்டுமே வைத்துக் கொண்டு முழு படத்தையும் படு சுவாரஸ்யமாக நகர்வதற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது திவாகர் மணியின் ஒளிப்பதிவும், ராஜேஷ் முருகேசனின் இசையும். ராஜேஷ் முருகேசனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் திரைக்கதையோடு நம்மையும் பயணிக்க வைக்க, ஓளிப்பதிவாளர் திவாகர் மணி, லண்டன் குளிரை உணரச் செய்கிறார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லை, கலர்புல் பாடல் காட்சிகள் இல்லை, எதிர்பாரத ட்விஸ்ட்டுகள் இல்லை, விறுவிறுப்பான திரைக்கதை இல்லை, ஆனால், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, உங்கள் கவனம் திரையில் மட்டுமே இருக்கும். அப்படி ஒரு மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் அனி ஐ.வி.சசி.
தெலுங்குப் படத்தின் டப்பிங் என்று சொல்கிறார்கள். ஆனால், நமக்கு டப்பிங் படம் பார்க்கும் உணர்வு எந்த இடத்திலும் ஏற்படாத வகையில் காட்சிகளும், நடிகர்களின் நடிப்பும் அமைந்திருக்கிறது.
சில காட்சிகளில் கதாப்பாத்திரங்கள் வசனமே பேசுவதில்லை, சில காட்சிகளில் வெறும் வசனம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், அந்த காட்சிகளை நம்மால் ரசிக்க முடிகிறது. நட்பு, காதல், செண்டிமெண்ட் என்று கதாப்பாத்திரங்கள் வெளிப்படுத்தும் அத்தனை உணர்வுகளையும் கவிதையாக நம் மனதிற்குள் கடத்தும் இயக்குநர், ‘அமரா’ என்ற பெயரையும், அந்த உணவகத்தையும், ஒரு கதாப்பாத்திரமாக நம் நினைவில் நிலைநிறுத்திவிடுகிறார்.
காட்சிகளை மெல்ல நகர்த்தினாலும், அதை ரசிக்கும்படியான யுக்திகளை திறப்பட கையாண்டிருப்பதோடு, காதலை சொல்வதில் கூட கண்ணியத்தை கையாண்டிருக்கும் இயக்குநர் அனி ஐ.வி.சசி பெரும் பாராட்டுக்குரியவர்.
மொத்தத்தில், இந்த ‘தீனி’ அனைத்து தரப்பினருக்கும் பிடித்த ஆச்சரியமான, அசத்தலான விருந்து.
ரேட்டிங் 4.5/5