May 26, 2023 03:02 PM

’தீராக் காதல்’ திரைப்பட விமர்சனம்

4ceeb48c36511540fff8977a8db8edc4.jpg

Casting : Jey, Aishwarya Rajesh, Sshivada, Amjath Khan, Abdul Lee, Baby Vrithi Vishal

Directed By : Rohin Venkatesan

Music By : Sidhu Kumar

Produced By : Lyca Productions - Subaskaran

 

முன்னாள் காதலர்களான ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும், 8 வருடங்களுக்குப் பிறகு சந்தித்துக்கொள்கிறார்கள். இருவருக்கும் அமைந்த இல்லற வாழ்க்கை குறித்து பேச தொடங்குபவர்கள், தங்களது காதல் நினைவுகள் குறித்து பேசி, சில நாட்கள் ஒன்றாக சுற்றுகிறார்கள்.  இதற்கிடையே, ஐஸ்வர்யா ராஜேஷின் கொடுமைக்கார காணவர் அவரை கடுமையாக தாக்க, வீட்டை விட்டு வெளியேறும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனியாக தங்குவதோடு, தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்கிறார். அதே சமயம், தனது மனைவி, குழந்தை என்று குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஜெய் மீது அவருக்கு மீண்டும் ஈர்ப்பு வர, ஜெய்யுடன் மீண்டும் இணைய முயற்சிக்கிறார். அவரது முயற்சி எத்தகைய சிக்கல்களை உருவாக்குகிறது? என்பதை காதல் தோல்வியடைந்தவர்களின் வலிகளை உணரக்கூடிய வகையிலும், நாகரீகமான முறையிலும் சொல்வது தான் ‘தீராக் காதல்’.

 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜெய் பாராட்டும்படி நடித்திருக்கிறார். ‘ராஜா ராணி’ படத்தில் பார்த்த அதே ஜெய் போன்று இருந்தாலும், அனுபவமான நடிப்பு மூலம் தனது கதபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கிறார். முன்னாள் காதலியை பார்த்த மகிழ்ச்சியோடு, பல மாதங்களுக்கு முன்பாகவே அவரது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ச்சியடைபவர், அதே சமயம் தனது குடும்பத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மூலம் அனைத்து காட்சிகளிலும் முதிர்ச்சியான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

 

எந்த வேடமாக இருந்தாலும் அதை சரியான முறையில் கையாளும் ஐஸ்வர்யா ராஜேஷ், கத்தி மீது நடப்பது போன்ற ஒரு வேடத்தை மிக சாமர்த்தியமாக கையாண்டிருக்கிறார். கதைக்கான நடிகையாக நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் கூடுதல் அழகோடு வலம் வந்து ரசிகர்களை கவர்கிறார். குறிப்பாக அவரது உடை, தோற்றம் என அனைத்தும் புதிதாகவும், ரசிக்கும்படியும் இருக்கிறது. கொடுமைக்கார கணவரிடம் சிக்கி தவிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், நடிப்பில் மட்டும் இன்றி அழகிலும் கவனம் ஈர்க்கிறார்.

 

ஜெய்யின் மனைவியாக நடித்திருக்கும் ஷிவதா, வழக்கமான மனைவிமார்களின் குணாதிசயங்களை பிரதிபலிக்கும் வேடத்தில் நடித்திருக்கிறார். ஆண்கள் தவறு செய்துவிட்டு மன்னிப்பு கேட்டு விட்டால், அனைத்தும் சரியாகி விடுமா? என்ற அவரது கேள்வி தவறு செய்யும் ஆண்களுக்கு சாட்டை அடி.

 

ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக நடித்திருக்கும் அம்ஜன் கான், ஜெய்யின் நண்பராக நடித்திருக்கும் அப்துல் லீ, பேபி வரித்தி விஷால் என படத்தில் குறைவான கதாபாத்திரங்கள் வந்தாலும், அனைவரும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு கதாபாத்திரங்களை அழகாக காட்டியிருப்பதோடு, அவர்களின் உணர்வுகளையும் ரசிகர்களிடம் கடத்தியிருக்கிறது. மழையோடு தொடங்கும் படத்தை மழையோடு முடித்திருப்பது, படம் முழுவதும் பயன்படுத்திய வண்ணம் உள்ளிட்ட அனைத்தும் காட்சிகளை ரசிக்க வைக்கிறது.

 

சித்து குமாரின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருப்பதோடு, பின்னணி இசை காட்சிகளின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க செய்கிறது. ஐஸர்யா ராஜேஷ் - ஜெய் இருவருக்குமான சந்திப்பின் போது வரும் பீஜியமும், ஐஸ்வர்யா ராஜேஷின் மிரட்டல், ஜெய்யின் தடுமாற்றம் என அனைத்து காட்சிகளிலும் கவனம் ஈர்க்கும் விதத்தில் பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

 

மிக கவனமாக கையாள வேண்டிய கதைக்களத்தை மிக நேர்த்தியான படத்தொகுப்பு மூலம் ரசிக்க வைத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரான்னா ஜி.கே

 

கலை இயக்குநர் ராமு தங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் இருவரது பணியும் கவனம் பெறுகிறது.

 

’அந்த 7 நாட்கள்’ தொடங்கி ‘ராஜா ராணி’ என காதல் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் சந்தித்துக்கொள்ளும் போது அவர்கள் மனதில் ஏற்படும் மாற்றங்களை மையமாக வைத்து பல படங்கள் வந்திருந்தாலும், தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ற வகையில் புதிய பாணியில் இளைஞர்கள் மட்டும் இன்றி மூத்தவர்களும் தங்களது காதல் அனுபவங்களை நினைத்து பார்க்கும் விதத்தில் மிக நாகரீகமாக கதையை கையாண்டிருக்கிறார் இயக்குநர் ரோகின் வெங்கடேஷன்.

 

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மீது இரக்கம் ஏற்பட வைத்துவிட்டு பிறகு அவர் மீது வில்லிக்கான சாயத்தை பூசி அதிர்ச்சியளித்தாலும், அனைத்துக்கும் காரணம் காதலே...என்று சொல்வதோடு அதே காதல் மூலம் அவர் மீது மரியாதை ஏற்படும்படி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் ரோகின் வெங்கடேஷன், எந்த இடத்திலும் படத்தின் மீது எதிர்மறை கருத்து ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்.

 

முதல் பாதி முழுவதும் சற்று மெதுவாக நகர்வது போல் இருந்தாலும், இப்படி ஒரு  கதைக்களத்தை இப்படிப்பட்ட முறையில் சொன்னால் மட்டுமே ரசிக்க முடியும் என்பதை இரண்டாம் பாதியில் ரசிகர்கள் புரிந்துகொள்ளும்படி இயக்குநர் காட்சிகளை வடிவமைத்திருப்பது சபாஷ் சொல்ல வைக்கிறது.

 

மொத்தத்தில், காதலை திகட்டாதபடி சொல்லியிருக்கும் இந்த ‘தீராக் காதல்’ திரும்ப திரும்ப பார்க்க வைக்கும். 

 

ரேட்டிங் 4/5