Jan 03, 2022 06:49 PM

’தீர்ப்புகள் விற்கப்படும்' விமர்சனம்

f42581b7ebd47713d132f81fbd264274.jpg

Casting : Sathyaraj, Shmiruthi Venkat, Yuvan, Madhusoothanan, Harish Uthaman, Charli, Renuka

Directed By : Dheeran

Music By : Prasad SN

Produced By : Al - Tari Movies CR Saleem

 

மருத்துவரான சத்யராஜின் மகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட, சட்டம் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர சத்யராஜ் போராடுகிறார். ஆனால், பண பலம் மற்றும் அதிகார பலத்தால் குற்றவாளிகள் சட்டத்தில் இருந்து தப்பித்து விட, அவர்களுக்கு மிக கொடூர தண்டனையை சத்யராஜ், தனது மருத்துவத்துறை மூலம் தருகிறார். அது என்ன தண்டனை, அதை அவர் எப்படி செய்கிறார், என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள் பற்றி பேசும் படங்கள் பல வெளியாகியிருந்தாலும், அவற்றில் இருந்து மாறுபட்ட கோணத்தில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, அப்பா - மகள் பாசத்தையும், பிரச்சனையை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தையும் நாடகத்தனம் அல்லாத இயல்பான முறையில் காட்சிப்படுத்தியிருப்பது படத்தை ரசிக்க வைக்கிறது.

 

வயதுக்கு ஏற்ற கதாப்பாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சத்யராஜின் உருவம் மட்டும் அல்ல அவரது நடிப்பும் கம்பீரம். அடிதடியில் இறங்காமல் எதிரிகளை வீழ்த்தும் போது அசால்டாக நடித்து அசத்தியிருக்கும் சத்யராஜ், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும் விதமாகவும் நடித்திருக்கிறார்.

 

சத்யராஜின் மகளாக நடித்திருக்கும் ஸ்மிருதி வெங்கட், தனது நடிப்பு மூலம் கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறார். 

 

வில்லனாக நடித்திருக்கும் மதுசூதனன், ஹரிஷ் உத்தமன், சார்லி, ரேணுகா உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கருடவேகா ஆஞ்சியின் கேமராவும், இசையமைப்பாளர் பிரசாத் எஸ்.என் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

 

எழுதி இயக்கியிருக்கும் தீரன், கதையின் நாயகன் சத்யராஜின் கதாப்பாத்திரத்தை மிக நேர்த்தியாக கையாண்டிருப்பதோடு, காட்சிகளை மிக சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறார்.

 

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் குற்றம் சாட்டப்படும் குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்பித்துவிடுவதை சுட்டிக்காட்டியிருக்கும் இயக்குநர் தீரன், அதற்காக பாதிக்கப்பட்டவர்கள் போராடாமல் இருந்து விட கூடாது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் எந்த நேரத்திலும் துவண்டு விடாமல், தைரியத்துடன் தங்களது அடுத்தக்கட்ட வாழ்க்கையை நோக்கி பயணிக்க வேண்டும், என்ற கருத்தை பதிவு செய்ததற்கு இயக்குநரை பாராட்டியாக வேண்டும்.

 

மொத்தத்தில், ‘தீர்ப்புகள் விற்கப்படும்’ பார்க்க வேண்டிய படம்.

 

ரேட்டிங் 3.5/5