Sep 23, 2017 06:56 AM

‘தெரு நாய்கள்’ விமர்சனம்

f2552c3d377b76a86a0206c03048170e.jpg

Casting : அப்புகுட்டி, இமான் அண்ணாச்சி, பிரதீக், ஆறு பாலா, பாவல், மைம் கோபி

Directed By : எஸ்.ஹரி உத்ரா

Music By : ஹரிஷ் - சதீஷ்

Produced By : சுஷில்குமார் ஜெயின்

 

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என தமிழக விவசாயத்திற்கு எதிராக உருவெடுக்கும் பிரச்சினைகளையும், இத்தகைய பிரச்சினைகளுக்கு பின்னாடி இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை இயக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றியும் பேசும் படமே ‘தெரு நாய்கள்’.

 

5 இளைஞர்கள் சேர்ந்து எம்.எல்.ஏ தேர்தலுக்கு போட்டியிட்ட நபரை கடத்துவதோடு, வாக்கு பெட்டிகளையும் திருடி விடுகிறார்கள். அவர்களை பிடிக்கும் போலீஸ், அவர்கள் மீது ராஜதுரோக வழக்கை பதிவு செய்து, அவர்கள் எம்.எல்.ஏ-வை கடத்தியதற்கான காரணம் குறித்து விசாரிக்க, அவர்கள் அதற்கு சொன்ன காரணமும், அதற்கு பிறகு அவர்களது நிலை என்ன ஆனது, என்பதும் தான் ‘தெரு நாய்கள்’ படத்தின் கதை.

 

விவசாயிகளுக்கும், விவசாய நிலங்களுக்கும் ஏற்படும் பிரச்சினையை, சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் ஜானரில் ரொம்ப சுருக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.

 

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் அப்புகுட்டி, ப்ரதீக், ஆறு பாலா, பவல் ஆகியோர் கதாபாத்திரங்களில் கச்சிதமாக பொருந்தி போயிருக்கிறார்கள். காமெடி வேடத்தில் நடித்து வந்த இமான் அண்ணாச்சி, குணச்சித்திர வேடத்தில் அழுத்தமாக பதியும் அளவுக்கு நடித்து அப்ளாஸ் வாங்குகிறார்.

 

படத்தில் ஹீரோ, ஹீரோயின் இருந்தாலும், காதல் என்பதை உப்பு மாதிரி பயன்படுத்தியுள்ள இயக்குநர் எஸ்.ஹரி உத்ரா, படத்தை ரொம்ப ஷார்ட்டாக அதே சமயம் ஷார்ப்பாகவும் இயக்கியிருக்கிறார்.

 

தளபதி ரத்னத்தின் ஒளிப்பதிவும், ஹரிஸ் - சதிஷ் ஆகியோரது இசையும், திரைக்கதையில் உள்ள சஸ்பென்ஸ் மற்றும் அதற்கான டோனை படம் முழுவதும் ரசிகர்கள் அனுபவிக்கும் விதத்தில் பயணித்துள்ளது. கத்திரிக்கு ரொம்ப அதிகமாகவே வேலை கொடுத்திருக்கும் எடிட்டர் மீனாட்சி சுந்தரம், படத்தை எந்த அளவுக்கு சுருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு நருக்கென்று சுருக்கியிருக்கிறார்.

 

விவசாயிகளின் அழுகுறல், அறப்போட்டங்கள் போன்ற காட்சிகளை வைக்காமல், இரண்டு தாதாக்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்துக்கொண்டு விவசாயிகளின் பிரச்சினையை பேசியிருக்கும் இயக்குநர் ஹரி உத்ரா, படம் விறுவிறுப்பாக நகரும் வகையில் திரைக்கதையில் சாமர்த்தியத்தை காட்டியிருப்பவர், சாதாரணமான விஷயத்தை ரொம்ப சாதுர்யமாக சொல்லி படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார்.

 

அரசியல்வாதிகளை ஆட்டி வைப்பதும், விவசாயத்தை அழிப்பதும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தான், என்று சொல்லும் இயக்குநர் ஹரி உத்ரா, அதில் இருந்து விவசாயத்தை காப்பாற்றிக்கொள்ளும் வழிமுறைகளை இன்னும் வலுவாக சொல்லியிருந்தால், மக்கள் மனதில் படம் ஃபெவிகால் போட்டு ஒட்டியது போல் ஸ்ட்ராங்காக ஒட்டிக்கொண்டிருக்கும்.

 

ஆனால், விவசாயிகளின் பிரச்சினையை லேசாக தொட்டுக்கொண்ட இயக்குநர், முழுப்படத்தையும் கமர்ஷியல் சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் படமாக கொடுத்திருக்கிறார். மொத்தத்தில் இந்த ‘தெரு நாய்கள்’ மூலம் ரசிகர்களுக்கு முழு திருப்தியை கொடுக்கவில்லை என்றாலும், ஓகே என்று சொல்லும் அளவுக்கு ரசிகர்களை ஓரளவுக்கு இயக்குநர் ஹரி உத்ரா திருப்திப்படுத்தியிருக்கிறார்.

 

ஜெ.சுகுமார்