Sep 07, 2018 11:34 AM

‘தொட்ரா’ விமர்சனம்

a3d157bacc29e12277f0eb507655e0cb.jpg

Casting : Prithviraj, Veena, MS Kumar, A Venkatesh

Directed By : Madhuraj

Music By : RN Udhamaraja

Produced By : Jeychandra

 

பிரித்விராஜ், வீணா, எம்.எஸ்.குமார் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் மதுராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘தொட்ரா’ கலப்பு திருமணத்தால் நடக்கும் ஆணவக்கொலை குறித்தும், கலப்பு திருமணங்களின் பின்னணியில் இருக்கும் சில களவாணிகள் பற்றியும் பேசியிருக்கிறது.

 

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஹீரோ பிரித்விராஜுக்கும், வசதியான வீட்டு பெண்ணான ஹீரோயின் வீணாவுக்கும் கல்லூரில் படிக்கும் போது காதல் பிறக்கிறது. இவர்கள் ஒரு பக்கம் தங்களது காதலை வளர்த்துக்கொண்டிருக்க, மறுபக்கம் வீணாவின் அண்ணனான எம்.எஸ்.குமார், கலப்பு திருமணத்திற்கு எதிராகவும், கலப்பு காதலுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கிடையே தங்கையின் காதல் விவகாரம் தெரிந்ததும், காதலர்களை பிரிக்க எம்.எஸ்.குமார் அதிரடி நடவடிக்கை எடுக்கிறார். ஆனால், அவரது நடவடிக்கையும் தாண்டி, பிரித்விராஜும், வீணாவும் எஸ்கேப் ஆகி திருமணம் செய்துக்கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்கள். 

 

அவர்களை தேடி பிடிக்கும் எம்.எஸ்.குமார் வீணாவை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட, ஏ.வெங்கடேஷ் உதவியோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது காதல் மனைவியை மீட்கும் பிரிவித்விராஜுக்கும், வீணாவுக்கும் ஏ.வெங்கடேஷ் மூலமாகவே பிரச்சினை வருகிறது. மறுபக்கம் எம்.எஸ்.குமாரும் அவர்களை கொலவெறியுடன் தேட, அவர்களிடம் காதல் தம்பதி சிக்கியதா அல்லது சிறகடித்து பறந்ததா என்பது தான் ‘தொட்ரா’ படத்தின் மீதிக்கதை.

 

கலப்பு திருமணத்தாலும், கலப்பு காதலாலும் தமிழகத்தில் நடந்த சில ஆணவக்கொலை சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் மதுராஜ், ஆணவக்கொலைகள் பின்னணியில் ஜாதி பாகுபாடு மட்டும் இன்றி, வேறு சில காரணங்களும் இருக்கிறது, என்பதை கூறியிருக்கிறார்.

 

கல்லூரி மாணவன் வேடத்திற்கு மட்டும் அல்ல பள்ளி மாணவன் வேடத்திற்கு கூட கச்சிதமாக பொருந்தக்கூடிய அளவுக்கு இன்னும் பால்முகம் மாறாமல் குழந்தை முகத்தோடு இருக்கும் பிரித்விராஜ், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருந்தாலும் சில இடங்களில் காட்சிக்கு தேவையான ரியாக்‌ஷன்கள் கொடுப்பதில் சற்று தடுமாறியிருக்கிறார். (எப்போதாவது ஒரு படம் நடித்தால் இப்படித்தான் இருக்கும், அவரு என்ன பன்னுவாரு)

 

அறிமுக நாயகி வீணா எடுப்பான தோற்றத்தோடும், எதார்த்தமான அழகோடும் கவர்கிறார். கொடுத்த வேலையை சரியாக செய்திருப்பவர், தனக்கு எந்த அளவுக்கு நடிக்க தெரியுமோ அந்த அளவுக்கு நடித்திருக்கிறார்.

 

ஹீரோயினின் அண்ணனாக படத்தின் வில்லனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் எம்.எஸ்.குமாரின் வேடமும், அவரது நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஜாதிக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர் பேசும் வசனங்கள், யாரையோ நமக்கு நினைவுப்படுத்தினாலும், அந்த முகத்தையும் தாண்டி நம் மனதில், பசை போட்டு ஒட்டிக்கொள்கிறார் எம்.எஸ்.குமார். வெல்கம் சார், அடுத்தடுத்த படத்தில் இதை விட டெரரான வில்லனாக வலம் வர வாழ்த்துக்கள்.

 

ஹீரோவின் நண்பர்களாக வரும் தீப்பெட்டி கணேஷன், முருகன் ஆகியோர் காமெடி நடிகர்களாக மட்டும் இன்றி குணச்சித்திர நடிகர்களாவும் வந்து போகிறார்கள்.

 

ஆர்.என்.உத்தமராஜா இசையில் பாடல்கள் புரியும்படி இருப்பதோடு, கேட்கும்படியாகவும் இருக்கிறது. செந்தில்குமாரின் ஒளிப்பதிவு திரைக்கதையைப் போல எளிமையாக இருந்தாலும், திரைக்கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறது.

 

முதல் படத்திலேயே ஆவணக்கொலை குறித்து தைரியமாக பேசியிருக்கும் இயக்குநர் மதுராஜுக்கு ஒரு பொக்கே கொடுத்து வரவேற்கலாம். அதேபோல், ஆவணக்கொலை குறித்து மட்டும் பேசாமல், கலப்பு காதலுக்கு பின்னணியில் இருக்கும் சில வியாபாரிகள் குறித்தும் பேசியிருப்பவர், இரண்டு தரப்பு நியாயத்தையும் பேசி, இரு தரப்பினருக்கும் பொதுவானவன் நான், என்று தப்பித்துக் கொண்டிருக்கிறார்.

 

காதலிக்கும் ஆணோ, பெண்ணோ தங்களைப் பற்றியும், தங்களது காதல் பற்றி மட்டுமே யோசிக்க, அவர்களது காதலால், குடும்பங்கள் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை சொல்லியிருப்பவர், காதல் மோகத்தால் பெற்றோர்கள் பேச்சை கேட்காத பெண்கள் சமூகத்தில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் பேசி அறிவுரையும் கூறியிருக்கிறார். அதேபோல், கலப்பு காதலுக்கு பின்னணியில் வியாபாரம், அரசியல் இருப்பதாக காட்டியிருப்பவர், எந்த விஷயத்தையும் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாகவே சொல்லியிருக்கிறார்.

 

ஆணவக்கொலையை பற்றி படம் பேசினாலும், அதற்கு எதிரான அழுத்தமான வசனமோ, காட்சியோ படத்தில் சற்று குறைவாகவே இருக்கிறது. அதே சமயம், பாடம் சொல்வது போல அல்லாமல், கமர்ஷியலாக கதையை கையாண்டிருக்கும் இயக்குநர் மதுராஜ், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாகவே சொல்லியிருக்கிறார்.

 

மொத்தத்தில், சமூகத்திற்கு தேவையான படமாக இருக்கும் இந்த ‘தொட்ரா’ மக்கள் பார்க்க வேண்டிய படமாகவும் உள்ளது.

 

ரேட்டிங் 3/5