Jan 08, 2020 03:44 PM

‘தொட்டு விடும் தூரம்’ விமர்சனம்

f9b51f9ec4368e931e4928db26ebcea7.jpg

Casting : Vivekraj, Monica Chinnakotla, Seetha, Balasaravanan, Singam Puli

Directed By : VP Nagashwaran

Music By : Nova

Produced By : P Ramanathan

 

அறிமுக இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில், பி.ராமநாதன் தயாரிப்பில், விவேக்ராஜ், மோனிகா சின்னகோட்லா ஆகியோர் நடித்திருக்கும் ‘தொட்டு விடும் தூரம்’ எப்படி என்பதை பார்ப்போம்.

 

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு என்.எஸ்.எஸ் கேம்ப்புக்கு வரும் கல்லூரி மாணவ, மாணவிகளில் ஹீரோயின் மோனிகா சின்னகோட்லாவும் வருகிறார். அந்த ஊரில் இருக்கும் ஹீரோ விவேக் ராஜுடன் நட்பாக பழகும் மோனிகாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. விவேக் ராஜும் அவரை காதலிக்கிறார். கேம்ப் முடிந்து சென்னைக்கு திரும்பும் மோனிகாவுக்கு அவரது தந்தை திருமண ஏற்பாடு செய்ய, அவரை தேடி சென்னைக்கு செல்லும் விவேக்ராஜு மோனிகாவுக்கு திருமணம் நடைபெற்ற விஷயத்தை அறிந்துக் கொள்வதோடு, தனது பேக், செல்போன் அனைத்தையும் தொலைத்துவிடுகிறார். பிறகு நண்பனுடன் தங்கி சென்னையில் வேலை செய்ய, மறுபுறம் மோனிகாவின் திருமணம் நின்றுவிடுகிறது. அவரும் தனது செல்போனை தொலைத்துவிடுவிதால், விவேக்ராஜை தொடர்பு கொள்ள முடியாமல் தவிக்கிறார். அந்த சமயம், விவேக்ராஜை சென்னையில் பார்க்கும் மோனிகா, அவரை சென்னை முழுவதும் தேட, மோனிகாவுக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரியாமல் இருக்கும் விவேக்ராஜ் மோனிகாவை சந்தித்தாரா, இருவரும் இணைந்தார்களா இல்லையா, என்பது தான் படத்தின் மீதிக்கதை.

 

விக்ரமன் போன்ற இயக்குநர்களின் பாணி கதை தான். ஆனால், அவர்களே தற்போதைய டிரெண்டுக்கு இப்படிப்பட்ட கதைகள் வேலைக்கு ஆகாது என்று முடிவு செய்துவிட்ட நிலையில், இயக்குநர் நாகேஷ்வரன், அப்படிப்பட்ட ஒரு ஜானர் படத்தை தற்போதைய காலக்கட்டத்தில் எடுத்ததற்காக, அவரது தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.

 

ஹீரோ விவேக்ராஜ் மற்றும் ஹீரோயின் மோனிகா சின்னகோட்லா தங்களது பணியை சரியாக செய்திருக்கிறார்கள். ஹீரோயினின் அப்பா வேடத்தில் நடித்தவர், சீதா, பாலசரவணன் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைத்து கதாப்பாத்திரங்களும் அவர் அவருக்கு கொடுத்த பணியை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

 

கே.ராம்குமாரின் ஒளிப்பதிவும், நோவாவின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

 

தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கும் இத்தகைய காலக்கட்டத்தில், சூழ்நிலையால் பிரிந்த காதலர்கள், சந்தித்துக் கொள்ளாமல் தவிப்பதை பல ட்விஸ்ட்டுகளோடு இயக்குநர் திரைக்கதையாக்கியிருந்தாலும், ஏகப்பட்ட லாஜிக் மீறலோடு காட்சிகளை கையாண்டிருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது.

 

குறிப்பாக, செல்போனை தொலைத்துவிட்ட ஹீரோயின், தனது பழைய எண்ணை திரும்ப பெறுகிறார். ஆனால், செல்போனை தொலைத்த ஹீரோ மட்டும் தனது பழைய எண்ணை வாங்காமல் விட்டுவிடுகிறார். இது ஒரு பக்கம் இருக்க, செல்போனில் தனது காதலியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஹீரோ அந்த செல்போனை தொலைத்து விடுகிறார். ஆனால், அதன் பிறகு பணிக்கு சேருபவர், தனது அலுவலக கம்ப்யூட்டரில் தனது காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வைத்திருப்பது எப்படி என்று தான் தெரியவில்லை. சரி ஃபேஸ்புக்கில் இருந்து எடுத்தார் என்று வைத்துக் கொண்டாலும், அதே ஃபேஸ்புக் மூலம் ஹீரோயின அவரை தொடர்புக் கொண்டிருக்கலாமே, இப்படி படத்தின் முக்கியமான விஷயத்திலேயே பெரிய லாஜிக் ஓட்டை இருப்பதால், இயக்குநர் வைத்த அனைத்து ட்விஸ்ட்டும் புஸ்ஸாகி விடுகிறது.

 

இருந்தாலும், தான் சொல்ல வந்த கதை அதர பழசாக இருந்தாலும், அதை இயக்குநர் நேர்மையாக சொல்லியிருக்கிறார். அதேபோல், இந்த படத்தால் யாருக்கு லாபமோ இல்லையோ, நாயகி மோனிகா சின்னகோட்லாவுக்கு நிச்சயம் லாபமாக அமையும். அந்த அளவுக்கு அவரை ஒரு பாடலில் அழகாகவும், கவர்ச்சியாகவும் காட்டியிருக்கிறார்கள். அந்த பாடலை பார்த்தால் மோனிகாவுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும் என்பது நிச்சயம்.

 

மொத்தத்தில், ‘தொட்டு விடும் தூரம்’ தியேட்டருக்கு வரும் ரசிகர்களை விரட்டியடித்து விடும்.

 

ரேட்டிங் 2.5/5