’தக்ஸ்’ திரைப்பட விமர்சனம்
Casting : Hridhu Haroon, Simha, RK Suresh, Munishkanth, Arun & Arvind, Appani Sarath, Allwyn, PL Thenappan,
Directed By : Brinda
Music By : Sam CS
Produced By : HR pictures in association with Jio Studios
நாயகன் ஹிருது ஹாரூன் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று குமரி மாவட்ட சிறையில் அடைக்கப்படுகிறார். தனக்காக காத்திருக்கும் தனது காதலி அனஸ்வரா ராஜாவுக்காக சிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்யும் ஹிருது ஹாரூன், தன்னை போல் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சில கைதிகளை தன்னுடன் சேர்ந்துக்கொண்டு சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் போட, அந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினாரா? இல்லையா? என்பதே ‘தக்ஸ்’ படத்தின் கதை.
வேகமான செயல்பாடு, துடிப்பான நடிப்பு, ஆக்ரோஷமான கண்கள் என்று ஆக்ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ள நாயகன் ஹிருது ஹாரூன், முதல் படம் போல் இல்லாமல் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவரது துடிப்பான நடிப்பு காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் ஹிருது ஹாருனுக்கு கோலிவுட்டில் பெரிய எதிர்காலம் இருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜாவுக்கு வசனம் இல்லை என்றாலும் கண்களினாலேயே பேசி நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் கவனம் பெறும் விதத்தில் அவரது அமைதியான நடிப்பு அமைந்திருக்கிறது.
சிறையில் சக கைதியாக இருக்கும் பாபி சிம்ஹா, நாயகனின் வேடத்தை தாங்கி பிடிக்கும் தூணாக வருகிறார். அவருக்கான வாய்ப்பும் குறைவு தான் என்றாலும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார்.
சிறை அதிகாரியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வழக்கம் போல் தனது ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
முனிஷ்காந்த், இரட்டையர் சகோதர்கள் அருண் மற்றும் ஆகாஷ், அப்பானி சரத், பி.எல்.தேனப்பன், ஆல்வின் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சிறைச்சாலை காட்சிகள், சிறையில் இருந்து தப்பிக்கும் காசிகள் என அனைத்தையுமே மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.
இசையமைப்பாளர் சாம் சிஎஸின் பின்னணி இசை படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை படம் விறுவிறுப்பாக நகர பக்கபலமாக இருக்கிறது.
பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கிறது. ஜோசப் நெல்லிக்கல்லின் கலையும், ஸ்டண்ட் இயக்குநரின் பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
முதல் படத்தில் காதல் கதையை ரசிக்கும்படி படமாக்கிய இயக்குநர் பிருந்தா, இரண்டாவது படத்தில் ஆக்ஷன் கதையை கையில் எடுத்திருக்கிறார். கதை எப்படி இருந்தாலும் திரைக்கதையும், காட்சிகளும் வேகமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் பிருந்தா முடிவு செய்திருப்பதை படத்தின் ஒவ்வொரு காட்சியும் நிரூபிக்கிறது.
சிறையில் இருந்து தப்பிப்பதை மையமாக வைத்துக்கொண்டு ஒரு முழுநீள ஆக்ஷன் கதையை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்தியிருக்கும் இயக்குநர் பிருந்தா, ஆக்ஷன் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாகியிருக்கிறார். குறிப்பாக ஹீரோ ஆட்டோவை துரத்தி சென்று அடிக்கும் காட்சி வியக்க வைக்கிறது.
ஆக்ஷன் காட்சிகளுக்கும், காட்சிகள் வேகமாக இருப்பதற்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் பிருந்தா திரைக்கதையை அழுத்தமாக சொல்ல தவறியிருப்பதால், படத்தின் ஆரம்பத்திலேயே முடிவு என்னவாக இருக்கும் என்பது தெரிந்து விடுகிறது. இந்த ஒரு விஷயம் மட்டும் சிறு குறையாக இருந்தாலும், நடிகர்களின் நடிப்பு மற்றும் வேகமான திரைக்கதை போன்றவை இந்த குறையை மறைத்து படத்தை ரசிக்க வைத்துவிடுகிறது.
மொத்தத்தில், ‘தக்ஸ்’ தப்பு செய்யவில்லை.
ரேட்டிங் 3.5/5