’தும்பா’ விமர்சனம்
Casting : Darshan, Thina, Keerthy Pandian, Dharani Vasudev
Directed By : Harish Ram LH
Music By : Aniruth, Vivek - Mervin and Santhosh Dayanithi
Produced By : Sureka Niyapathi
தர்ஷன், தீனா, கீர்த்தி பாண்டியன் ஆகியோரது நடிப்பில், அறிமுக இயக்குநர் ஹரீஷ் ராம் எல்.எச் இயக்கத்தில், சுரேகா நியபதி தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘தும்பா’ எப்படி என்பதை பார்ப்போம்.
நாயகி கீர்த்தி பாண்டியனுக்கு காட்டு மிருகங்களை புகைப்படம் எடுக்கும் வைல்ட் லைப் போட்டோகிராபராக வேண்டும் என்று ஆசை. அதற்காக காட்டில் புலியை புகைப்படம் எடுப்பதற்காக டாப்ஸ்லிப்பில் உள்ள ஆனைமலை புலி காப்பகத்திற்கு வருகிறார். அதே இடத்திற்கு பெயிண்டிங் பணிக்காக ஹீரோ தர்ஷனும், தீனாவும் வர, அவர்களை சந்திக்கும் கீர்த்தி, தன்னை காட்டுக்குள் அழைத்து சென்று புலியை புகைப்படம் எடுக்க வைத்தால், பணம் தருவதாக சொல்கிறார். புலிக்கு பயந்தாலும், பண தேவைக்காக கீர்த்தி சொல்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் தீனாவும், ஹர்சனும் அவருடன் புலியை தேடி காட்டுக்குள் பயணிக்கிறார்கள்.
இதற்கிடையே, கேரள வனப்பகுதியில் இருக்கும் புலி ஒன்று வழிதவறி ஆனைமலை புலி காப்பகத்திற்குள் வந்துவிடுகிறது. இதனை அறிந்துக்கொள்ளும் தமிழக வன அதிகாரி, அந்த புலியை விற்று பணம் சம்பாதிக்க முடிவு செய்கிறார். அதற்காக சில ஆட்களை சேர்த்துக் கொண்டு அந்த புலியை தேடி வர, மறுபுறம் நாயகி கீர்த்தி பாண்டியன், தர்ஷன் மற்றும் தீனாவுடன் சேர்ந்துக் கொண்டு புலியை புகைப்படம் எடுக்க முயற்சிக்கிறார். அப்போது வன அதிகாரியின் கடத்தல் வேலை குறித்து அறிந்துக் கொள்ளும் கீர்த்தி, அந்த அதிகாரியிடம் இருந்து புலியை காப்பாற்றும் பணியில் இறங்க, ஹர்சனும், தீனாவும் அவருக்கு ஒத்துழைக்க மறுப்பதோடு, உயிர் பிழைத்தால் போதும் என்று ஊருக்கு கிளம்ப, யார் எப்படி சென்றாலும் புலியை காப்பாற்றியே தீருவேன், என்று களத்தில் இறங்கும் கீர்த்தி, புலியை காப்பாற்றினாரா இல்லையா, அவரது புகைப்பட கனவு என்ன ஆனது, என்பதே படத்தின் மீதிக்கதை.
கதைக்களமாக பிரம்மாண்டமான காடு, பார்த்தவுடனேயே பயப்பட வைக்கும் புலி பின்னணியைக் கொண்ட கதை, என்று ஐடியாவில் இருக்கும் சுவாரஸ்யம், திரைக்கதையில் இல்லாமல் போனது தான் இப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ்.
காட்டுக்குள் சென்று புலியை நேரடியாக புகைப்படம் எடுக்க வேண்டும் என்று துடிக்கும் ஒரு பெண்ணின் அட்வெஞ்சர் மற்றும் அதே புலியை சிறைபிடிக்க முயற்சிக்கும் வன அதிகாரியின் அதிரடி நடவடிக்கை. புலி என்று சொன்னாலே பயந்து ஓடும் இரண்டு இயல்பான மனிதர்களின் நகைச்சுவை. இவற்றுடன் வழி தவறி குட்டியுடன் வேறு ஒரு பகுதிக்கு வந்த புலியின் செண்டிமெண்ட். இவை அனைத்தையும் சரியான அளவில், நேர்த்தியான காட்சியமைப்போடு கொடுத்திருந்தால் இப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்திருக்கும். ஆனால், இயக்குநர் ஹரீஷ் ராம் எல்.எச், அப்படி கொடுக்காமல், படம் முழுவதுமே நடிகர்களை பேச வைத்தே காட்சிகளை எடுத்திருப்பதால், படம் பல இடங்களில் நம்மை கடுப்பேற்றுகிறது (ஒரு கட்டத்தில் புலிய பேச விட்ருவாரோன்னு பயந்துட்டேன்)
’கனா’ புகழ் ஹர்சனுக்கு இது இரண்டாவது படம் என்றாலும், முதல் படத்தில் எப்படி ஒரு டம்மி கதாபாத்திரமோ அதேபோல் தான் இதிலும். நோ டூயட், நோ ரொமான்ஸ், நோ நடிப்பு, என்று மனுஷன் வந்து போகிறார். (அவரு என்ன செய்வார், கதை அந்த மாதிரி இருக்கே)
விஜய் டிவி புகழ் தினா வெள்ளித்திரையில் அறிமுகமாகியிருக்கிறார். டிவியில் போன் மூலம் பேசிக்கொண்டே இருப்பவர், வெள்ளித்திரையில் என்ன செய்வது என்று தெரியாமல் பேசிக்கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் போன்று நடிக்கவும் முயற்சி செய்கிறார். மொத்தத்தில், விஜய் டிவியில் சிரிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இருப்பது போல, அனைத்து திரையரங்குகளிலும் அந்த கூட்டத்தை வர வைத்தால் தினாவின் காமெடிக்கு நிச்சயம் சிரிப்பு சத்தம் கேட்கும்.
நாயகி கீர்த்தி பாண்டியன், தனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அட்வெஞ்சர் செய்வது போல, ஜீப்பில் அதிரடியாக வருபவர், பாவம் ஹர்சனுடனும், தினாவுடனும் சேர்ந்து காமெடி செய்வதற்கே அதிகமாக பயன்பட்டிருக்கிறார். இருப்பினும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நரேன் இளனின் ஒளிப்பதிவில் காட்டுப் பகுதிகள் பிரம்மாண்டமாக இருக்கிறது. பெரும்பாலான காட்சி கிராபிக்ஸ் என்றாலும், அதனை படத்துடன் மேட்ச் செய்யும் போது உறுத்தாமல் இருப்பதற்கு இளனின் பணி பக்கபலமாக இருந்திருக்கிறது.
அனிருத், விவேக் - மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி என்று மூன்று இசையமைப்பாளர்கள் இருந்தும், இசை பெரிய அளவில் பேச வைக்கவில்லை. இதுபோன்ற படங்களுக்கு இசையும், ஒளிப்பதிவும் தான் ஹீரோ, ஹீரோயின் போல இருந்திருக்க வேண்டும், ஆனால் ஏதோ கமர்ஷியல் படங்களுக்கு பணியாற்றுவது போல ரொம்ப சாதரணமாக பணியாற்றியிருக்கிறார்கள்.
காடு மற்றும் அதில் வாழும் விலங்குகளின் முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு படமாக இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் ஹரீஷ் ராம், இப்படத்தை அனைத்து தரப்பினரும் பார்க்க வேண்டும் என்பதை மனதில் வைத்து காட்சிகளை வடிவமைத்திருப்பது அனைத்துக் காட்சிகளிலும் தெரிகிறது. புலியை கூட மனிதர்களை கடிக்காமல், காலால் அடிப்பது போல காட்சி வைத்திருப்பவர், இதை குழந்தைகளுக்கான படமாக எடுப்பதா அல்லது இளைஞர்களுக்கான படமாக எடுப்பதா என்பதில் சற்று குழப்பமடைந்திருக்கிறார்.
யானை, குரங்கு, அனில் ஆகிய விலங்குகளின் கிராபிக்ஸ் மூலம் குழந்தைகளை கவர நினைத்தவர், புலி போன்ற விலங்குகள் மூலம் இளைஞர்களையும் கவர நினைத்திருக்கிறார். ஆனால், திரைக்கதை மூலம் யாரையும் கவரவில்லை என்பது தான் சோகம்.
காதல், ஹீரோயிஷம் உள்ளிட்ட எந்தவிதமான ரெகுலரான போஷன்களும், தேவையில்லாத விஷயங்களும் இல்லாமல், தான் சொல்ல வந்ததை நேர்மையாக சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் ஹரிஷ் ராமை பாராட்டினாலும், ஒரு முழுமையான திரைப்படமாக இந்த படத்தை பாராட்ட சற்று தயக்கமாகவே இருக்கிறது.
மொத்தத்தில், ‘தும்பா’ நல்ல முயற்சி
ரேட்டிங் 3/5