May 28, 2022 07:19 AM

’டாப் கன் - மேவ்ரிக்’ விமர்சனம்

98ab684e0a516022c88fa250552044a9.jpg

Casting : Tom Cruise, Miles Teller, Jennifer Connelly, Jon Hamm, Glen Powell,

Directed By : Joseph Kosinski

Music By : Harold Faltermeyer, Lady Gaga, Hans Zimmer, Lorne Balfe, Johnny Marr

Produced By : Jerry Bruckheimer, Tom Cruise, Christopher McQuarrie, David Ellison

 

அதிரடி ஆக்‌ஷன் ஹீரோ டாம் குரூஸ் நடிப்பில், ஜோசப் கொசின்ஸ்கி இயக்கத்தில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் படம் ‘டாப் கன் - மேவ்ரிக்’. உலக அளவில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கிறது, என்று விமர்சனத்தை பார்ப்போம்.

 

அமெரிக்க கப்பல் படையில் போர் விமானியாக 30 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வரும் டாம் குரூஸ், பல அதிரடி சாகசங்களை செய்வதில் வல்லவராக இருக்கிறார். அமெரிக்காவின் எதிரி நாட்டில் அனு ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று தொடங்கப்படுகிறது. அந்த தொழிற்சாலையை அழிக்க திட்டம் போடும் அமெரிக்க கப்பல் படை அதற்காக திறமை மிக்க இளம் விமானிகள் சிலரை தேர்வு செய்கிறது. அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் பொறுப்பை டாம் குரூஸிடம் வழங்குகிறது. மிக ஆபத்தான அந்த ஆபரேஷனை செய்து முடிப்பதோடு, விமானிகள் உயிருடன் திரும்ப வேண்டும், என்பதில் உறுதியாக இருக்கும் டாம் குரூஸ். இளம் விமானிகளுக்கு கடுமையான பயிற்சி அளிக்கிறார். ஆனால், இளம் விமானிகளிடம் இருக்கும் கருத்து வேறுபாட்டால், அவர்களால் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியாது, என்பதை டாம் குரூஸ் அறிந்துக்கொள்ள, அவர் ஒரு அதிரடியான நடவடிக்கையை மேற்கொள்கிறார். அது என்ன நடவடிக்கை, திட்டத்தை டாம் குரூஸ் மற்றும் அவரது குழுவினர் வெற்றிகரமாக செய்து முடித்தார்களா, இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.

 

டாம் குரூஸ் படம் என்றாலே அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை தான் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பார்கள். இந்த படத்தில் அப்படிப்பட்ட ஆக்‌ஷன் காட்சி இருந்தாலும், அத்தனையும் ஆகாயத்தில் தான். போர் விமானங்கள் மூலம் மோதிக்கொள்ளும் காட்சிகள் அனைத்தும் மெய் சிலிரிக்க வைக்கிறது.

 

ஹீரோ டாம் குரூஸ், மேலதிகாரிகளின் பேச்சை கேட்காமல் செய்யும் அதிரடி சாகசங்களும் அனைத்துக்கும் ரசிகர்கள் கைதட்டுகிறார்கள். போர் விமானத்தை ஓட்டும் போது அவர் கொடுக்கும் எக்ஸ்பிரஷன்கள் மற்றும் தனது முன்னாள் காதலியுடனான காதலை மீண்டும் தொடர்வது என அனைத்து ஏரியாவிலும் நடிப்பில் அசத்துகிறார்.

 

டாம் குரூஸின் காதலியாக நடித்திருக்கும் ஜெனிபர் கான்லி, ரூஸ்டர் வேடத்தில் நடித்திருக்கும் மைல்ஸ் டெல்லர், ஜான் ஹம் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள்.

 

இசை, ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் ஆக்‌ஷன் காட்சிகளை பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறது. வானத்தில் நடைபெறும் க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி மிரட்டலாக உள்ளது.

 

படத்தின் முதல் பாதியில் பேசிக்கொண்டே இருப்பது சலிப்படைய செய்துகிறது. இருந்தாலும் இரண்டாம் பாதியில் டாம் குரூஸ், களத்தில் இறங்கி போர் விமானத்தை இயக்கும் போது படமும் வேகம் எடுக்கிறது. பிறகு திட்டத்தை செயல்படுத்த டாம் குரூஸும் அவரது குழுவினரும் விமானத்தில் பயணிக்கும் போது, என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்போடு நம்மை சீட் நுனியில் உட்கார வைத்துவிடுகிறார் இயக்குநர் ஜோசப் கொசின்ஸ்கி.

 

பூமியில் தனது அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் ரசிகரக்ளை கவர்ந்த  டாம் குரூஸ், இப்படத்தின் மூலம் ஆகாயத்தில் விமானத்தில் பறந்தபடியே நிகழ்த்தியிருக்கும் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் காட்சிகள் புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. 

 

மொத்தத்தில், ’டாப் - கன்’ டக்கரான ஆக்‌ஷன் படம்.

 

ரேட்டிங் 3/5