Feb 06, 2021 05:18 AM

‘ட்ரிப்’ திரைப்பட விமர்சனம்

8b09f8950edfcd7a7c701c80b2d96f00.jpg

Casting : Sunaina, Yogi Babu, Karunakaran, Praveen Kumar, Mottai Rajendran

Directed By : Dennis Manjunath

Music By : Sithu Kumar

Produced By : Sai Film Studios - A.Viswanathan & E.Praveen Kumar

 

நண்பர்கள் கூட்டம் காட்டுக்குள் சுற்றுலா செல்கிறார்கள். அங்கு பல ஆபத்துகளை எதிர்கொள்ளும் நண்பர்களில் சிலர் மர்மமான முறையில் மரணம் அடைய, அதன் பின்னணியை சஸ்பென்ஷாகவும், நகைச்சுவையாகவும் சொல்லியிருப்பது தான் படத்தின் கதை.

 

மர்மமான முறையில் நிகழும் மரணங்களுக்கான பின்னணியை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் பல வந்திருந்தாலும், த்ரில்லருடன் நகைச்சுவையையும் சரிசமமாக கலந்து சொல்லியிருப்பதால், மற்ற படங்களில் இருந்து இப்படம் சற்று வித்தியாசப்படுகிறது.

 

சீரியசாக நகரும் படத்தில் அவ்வபோது ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் யோகி பாபு மற்றும் கருணாகரன் கதாப்பாத்திரங்கள் படம் முழுவதும் வருவதோடு, தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

 

உள் பனியனோடு உலா வரும் சுனைனா, இளசுகளை கவர்வதோடு, சேற்றில் புறல்வது, கரடுமுரடான இடங்களில் ஓடுவது என கடுமையாக உழைத்திருக்கிறார்.

 

பிரவீன் குமார், கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ், லக்‌ஷ்மி பிரியா, நான்சி ஜெனிபர், ராஜேஷ், அதுல்யா சந்திரா ஆகியோர் நண்பர்கள் கூட்டத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.

 

முழு படப்பிடிப்பும் காட்டுக்குள்ளேயே நடந்தாலும், ஒவ்வொரு பிரேமிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் உதயஷங்கர்.ஜி. சித்துகுமாரின் இசையில் இரண்டு பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. 

 

அறிவியலையும், ஆதிவாசிகளையும் இணைக்கும் கருவை மையமாக வைத்து இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதியிருக்கும் திரைக்கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. அதே சமயம், அதை த்ரில்லராக சொல்லலாமா அல்லது நகைச்சுவையாக சொல்லலாமா, என்பதில் அவரே சற்று குழப்பமடைந்திருப்பது படத்தின் பல இடங்களில் தெரிகிறது.

 

யோகி பாபு மற்றும் கருணாகரன் கூட்டணி முழு படத்தையும் தூக்கி நிறுத்த, அவர்களுக்கு சுனைனாவின் செழுமை பக்கபலமாகவும் இருக்கிறது.

 

ரேட்டிங் 3/5