’உடன்பிறப்பே’ விமர்சனம்
Casting : Jyothika, Sasikumar, Samuthirakkani, Soori, Sijarose
Directed By : Era.Saravanan
Music By : D.Imman
Produced By : 2D - Surya and Jyothika
தமிழ் சினிமாவின் வெற்றி ஃபார்மூலாக்களில் ஒன்றான அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்திய கதையம்சம் கொண்ட படம் ‘உடன்பிறப்பே’. ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படம் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பாசத்தில் போட்டி போடும் அளவுக்கு அண்ணன் சசிகுமாரும், அவருடைய தங்கை ஜோதிகாவும், ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருக்கிறார்கள். ஜோதிகாவுக்கு திருமணம் ஆன பிறகு, அண்ணன் - தங்கை உறவில் விரிசல் ஏற்படுகிறது. ஒரே ஊரில் இருந்தும், ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொள்ளாமல், பேசிக்கொள்ளாமல் இருகிறார்கள். இவர்களுடைய இந்த பிரிவுக்கு என்ன காரணம், பிரிந்த அண்ணன் - தங்கை சேர்ந்தார்களா இல்லையா, என்பது தான் ‘உடன்பிறப்பே’ படத்தின் கதை.
தஞ்சை மாவட்ட பெண்ணாக நடித்திருக்கும் ஜோதிகா, கணவரை பற்றி பேசும் போது பணிவையும், அண்ணனைப் பற்றி பேசும் போது கம்பீரத்தையும் வெளிப்படுத்தி நடிப்பில் அசரடிக்கிறார். தஞ்சை மாவட்ட பெண்ணாக வாழவில்லை என்றாலும், அந்த கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
ஜோதிகாவுக்கு அண்ணனாக நடித்திருக்கும் சசிகுமார், அந்த கதாப்பாத்திரத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்திருக்கிறார். பல இடங்களில் பாசத்தை விட தன் பலத்தை தான் அதிகமாக காட்டியிருக்கிறார்.
ஜோதிகாவின் கணவராக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு டெய்லர் மேட் ரோல். நல்ல விஷயங்களை சொல்வதற்கு என்றே அவதரித்தவர் போன்ற வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, பல இடங்களில் நம்மை சிரிக்க சிந்திக்க வைப்பதோடு, சிரிக்கவும் வைக்கிறார்.
சூரியின் காமெடி காட்சிகள் அத்தனையும் சிரிக்க வைக்கிறது. சில இடங்களில் பழைய காமெடி காட்சிகளை சற்று உல்டா செய்திருந்தாலும், அவருடைய சிறு சிறு டைமிங் வசனங்களுக்கு படம் பார்க்கும் அனைவரும் சிரித்து விடுகிறார்கள்.
அதிர்ச்சிகரமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், நடிப்பில் அசத்தியிருக்கிறார். சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சிஜாரோஸ், ஆடுகளம் நரேன், நிவேதிதா சதீஷ், வேல்ராஜ், வேல ராமமூர்த்தி, தீபா, சித்தார்த் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு.
டி.இமானின் இசையில் மெட்டுக்கள் ஏற்கனவே கேட்ட ரகமாக இருந்தாலும், பாடல்கள் அனைத்தும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக உள்ளது. கதைக்கு ஏற்றபடி பின்னணி இசையிலும் கவனம் செலுத்தியிருக்கிறார்.
வேல்ராஜின் ஒளிப்பதிவில் கிராமத்தின் அழகையும், கதாப்பாத்திரங்களின் இயல்பையும் ரசிக்க முடிகிறது.
அண்ணன் - தங்கை பாசத்தை மையப்படுத்திய படங்கள் என்றாலே, அவர்களுடைய பிரிவும், அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் திரைக்கதையாக இருக்கும். இந்த படமும் அதே வகையை பின் பற்றினாலும், பாசத்தை மட்டுமே சொல்லாமல், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியும் விரிவாக பேசுகிறது.
சாதி பாகுபாடு, விவசாயிகளின் பிரச்சனை, கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை, தனிமனித ஒழுக்கம் போன்றவை குறித்து பேசியிருக்கும் இயக்குநர் இரா.சரவணன், எந்த பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது, என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்தாலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையை தடுக்க, கடுமையான தண்டனை அவசியம், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
அண்ணன் - தங்கை பாசம் தான் கரு என்றாலும், அதை மட்டுமே வைத்து முழு படத்தையும் நகர்த்தாமல், காட்சிகளிலும், வசனங்களிலும் சமூகம் பற்றியும் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது.
திரைக்கதை ஓட்டத்தின் வேகம் குறைவாக இருப்பது, பத்தின் குறையாக இருந்தாலும், இந்த கதையை இப்படி சொல்வதில் தான் சுகம், என்று கதாப்பாத்திரங்களும், காட்சிகளும் நிரூபிக்கின்றன.
மொத்தத்தில், ‘உடன்பிறப்பே’ சிறப்பே...
ரேட்டிங் 3.75/5