Sep 23, 2023 07:37 AM

’உலகம்மை’ திரைப்பட விமர்சனம்

1ef6b747706d5fcde19b1be90b8c6422.jpg

Casting : Gowri Kishan, Marimuthu, GM Sundar, Vetri Mithran, Pranav, Vijay Praksh, Arulmani

Directed By : Vijay Prakash

Music By : Ilayaraja

Produced By : Madras Digital Cinema Academy - Dr.V.Jayaprakash

 

சி.சமுத்திரத்தின் ‘ஒரு கோட்டுக்கு வெளியே’ என்ற நாவலை அடிப்படையாக கொண்டு, இயக்குநர் விஜய் பிரகாஷ் இயக்கத்தில், இளையராஜாவின் இசையில், மெட்ராஸ் டிஜிட்டல் சினிமா அகாடமி சார்பில் டாக்டர். வீ.ஜெயப்பிரகாஷ் தயாரிப்பில், திரையரங்குகளில் வெளியாகியிருக்கும்  சமூக வாழ்வியல் திரைப்படம் ‘உலகம்மை’.

 

நெல்லை மாவட்ட பின்னணியில், 1970-களில் கதை நடக்கிறது. ஊர் பெரிய மனிதரான மாரிமுத்து, திருமண வயதை தாண்டிய தனது மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறார். அப்போது, தனது விவசாய நிலத்தில் பணியாற்றும் உலகம்மையை தனது பெண்ணுடன் துணைக்கு போக சொல்லிவிட்டு, அங்கு ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் தனது பெண்ணின் திருமணத்தை நடத்த திட்டமிடுகிறார். பெண் பார்க்க வந்த வாலிபரும் உலகம்மை தான் மணப்பெண் என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதித்து விடுகிறார். இந்த உண்மை உலகம்மைக்கு தெரிய வர, அவர் பெண் பார்க்க வந்தவரை நேரில் சந்தித்து அனைத்து உண்மைகளையும் சொல்லிவிடுகிறார். இதனால், திருமணம் நின்று விடுகிறது.

 

மகளின் திருமணம் நின்றதற்கு உலகம்மை தான் காரணம், என்று நினைக்கும் மாரிமுத்து, உலகம்மையை பழிவாங்கும் நோக்கத்தில் அவருக்கு எதிராக ஊர் மக்களை திருப்பி விடுவவதோடு, அவருக்கு மறைமுகமாக பல தொல்லைகள் கொடுக்கிறார். எப்படிப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அவற்றை தைரியமுடன் எதிர்த்து நிற்கும் உலகம்மை, ஆதிக்க குணம் படைத்தவர்களின் தொடர் அடக்குமுறைகளையும், அக்காலத்து சாதி கட்டமைப்புகளையும் எப்படி எதிர்கொண்டு தனது வாழ்க்கை பயணத்தை தொடர்கிறார், என்ற ரீதியில் கதை நகர்கிறது.

 

கமர்ஷியல் திரைப்படங்களில் கதாநாயகியாக ரசிகர்களை கவர்ந்த கெளரி கிஷன், உலகம்மை என்ற பெண்ணின் வாழ்வியலை நம் மனதுக்குள் எளிதாக கடத்தி விடுகிறார். கோபம், காதல், கனிவு என அனைத்துவிதமான உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி நடிப்பில் அசத்தியிருக்கிறார் கெளரி கிஷன்.

 

கதர் சட்டை போட்டுக்கொண்டு ஊர் பெரிய மனிதராக வலம் வரும் மாரிமுத்துவின் செயல்கள் அனைத்தும் படம் பார்ப்பவர்களை கடும் கோபமடைய செய்கிறது. எந்தவித பதற்றமும் இல்லாமல் தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டிருக்கும் மாரிமுத்து, சிறந்த நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

 

மாரிமுத்துவின் மச்சானாக நடித்திருக்கும் ஜி.எம்.சுந்தர் நெல்லை மாவட்ட தமிழிழை கச்சிதமாக பேசி தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உலகம்மையின் தந்தையாக நடித்திருக்கும் இயக்குநர் விஜய் பிரகாஷ், தனது நடிப்பு மூலம் மாயாண்டி கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு பரிதாபம் ஏற்பட வைத்துவிடுகிறார்.

 

Ulagammai Review

 

உலகம்மையை காதலிக்கும் வெற்றி மித்ரன், உலகம்மைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் கருப்பு சட்டை வாலிபர் வேடத்தில் நடித்திருக்கும் பிரணவ், அருள்மணி, காந்தராஜ், ஜேம்ஸ், சாமி, ஜெயந்தி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, நெல்லை மாவட்ட மக்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

 

ஒளிப்பதிவாளர் கே.வி.மணி 1970-ம் காலகட்டத்தை கச்சிதமாக படமாக்கியிருப்பதோடு, அக்காலக்கட்ட மனிதர்களின் வாழ்வியலையும், அவர்களின் மன ஓட்டங்களையும் ரசிகர்களிடம் கடத்தும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

 

இளையராஜாவின் இசை கதைக்கு ஏற்ப பயணித்திருந்தாலும், பாடல்கள் எதிர்பார்த்தது போல் இல்லாதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. இருந்தாலும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக பயணித்திருக்கிறது.

 

உலகம்மை என்ற பெண் மற்றும் அவள் சார்ந்த சமூகத்தின் முரண்பாடுகள், 1970-ம் காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்கள் மற்றும் அவர்கள் சார்ந்திருந்த கட்டுப்பாடுகள் ஆகியவற்றை நம் கண் முன் நிறுத்தும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்து இயக்கியிருக்கிறார் இயக்குநர் விஜய் பிரகாஷ்.

 

வணிக ரீதியான திரைப்படம் இல்லை என்றாலும், படத்தின் ஆரம்ப காட்சியிலேயே நம்மை கதைக்குள் ஈர்த்துவிடும் இயக்குநர், பனங்காட்டு கிராமத்தில் உலகம்மையோடு நம்மையும் பயணிக்க வைத்து இரண்டு மணி நேரம் கட்டிப்போடுகிறார்.

 

பெண் என்று துச்சமாக நினைப்பவர்களுக்கு உலகம்மையின் ஒவ்வொரு பதிலடியையும் பெண்களுக்கு தன்னம்பிக்கையும், தைரியமும் கொடுக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் விஜய் பிரகாஷ், ஒரு தனிப்பட பெண்ணாக இருந்து ஆதிக்க சக்திகளை எதிர்த்து நிற்கும் உலகம்மையின் வாழ்வியலை அனைவரும் பார்த்து கொண்டாட கூடிய நல்ல திரைப்படமாக கொடுத்திருக்கிறார்.

 

மொத்தத்தில் இந்த ‘உலகம்மை’ மக்கள் மனங்களை உலுக்கும்.

 

ரேட்டிங் 3.5/5